புல்லும் முளைக்காமல் பூவும் மலராமல்
எல்லாம் தரிசாகும் இங்கு
(1)
ஈரம் அடையாமல் எல்லாம் பழுதானால்
சோரம் மிகையாகும் சூழ்ந்து
(2)
கொஞ்சம் குடிநீரும் கொள்ளைப் பொருளாகப்
பஞ்சம் விரித்தாடும் பார்
(3)
குறிஞ்சியும் முல்லையும் குன்றிடும் என்றால்
தறிகெட்டுப் போகும் தரை
(4)
நீரில்லாக் கோளாய் நிலவுலகம் மாறுமெனில்
யாருக்கும் வாழ்வில்லை இங்கு
(5)
ஆழ்துளை போட்டிங்கே அள்ளுகிற எந்திரத்தால்
கீழ்மட்டம் போகுதே நீர்
(6)
எங்கெங்கும் கட்டிடமாய் ஏரியெல்லாம் மாறியதால்
எங்கேநீர் போகும் இயம்பு
(7)
பெய்யும் மழைநீரை பேணாமல் விட்டுவிட்டால்
உய்யவழி என்ன உரை??
(8.)
காவிரி நீர்வேண்டி கைகூப்பிக் கேட்காமல்
ஆய்வினை மேற்கொள்வோம் ஆழ்ந்து
(9)
குளங்களும் ஏரியும் கூடிடும் போதே
வளமுள்ள வாழ்வுண்டு நம்பு
(10)
செ. இராசா
11/10/2021
நீரின்றி---------வள்ளுவர் திங்கள் 180
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment