எழுத்து என்ற சொல்லே
எழுது எனச் சொல்லி
எழு'ப்புவதால் எழுதுகிறேன்....
இதோ எம் எழுத்து;
ஒலி மொழியானபோது
மொழி வரியானது..
வரி பதிவானபோது
மொழி வளமானது..
மொழியின் உயிர்
ஒலிதான் எனினும்..
ஒலியே இல்லாதும்
மொழியலாம் தானே..
அசோக பிராமியாய்
தமிழ் பிராமியாய்
சித்திர எழுத்தாய்
வட்ட எழுத்தாய்
தொடும் பிரெய்லியாய்
படும் குறியீடாய்...
நாணயத்திலும் பானையிலும்
கல்வெட்டிலும் ஓலையிலும்
தோண்டிடும் போதெல்லாம்
துலங்குவது என்ன இங்கே?!
எழுத்துருவின் முன்னோடி
யாமென்னும் அங்கீகாரம்தானே..?!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
--என்றார் வள்ளுவர்!
எண் எழுத்து இகழேல்
--என்றாள் ஔவை!
எழுத்தும் எழுதுகோலும் தெய்வம்
--என்றார் பாரதி!
எனில்
எழுத்து சாதாரண விடயமா என்ன?!
எழுத்து
பழமையைப் படம்காட்டும்
பெருமையின் சொத்து!
புரட்சியை வித்தாக்கும்
புதுமையின் கெத்து!
எழுத்து
எப்போதும் எழுப்பிவிடும்
ஆத்மார்த்த தாய்!
தப்பாமல் வழிநடத்தும்
தத்துவார்த்த தந்தை!
எழுத்து
செல்களுக்குள் செல்லும்
செல்லுலாய்டு பொறி!
சொல்களுக்குள் நிற்கும்
சூட்சம நெறி!
ஆனால்....
எழுத்தின் விலைதான்
ஏறவே இல்லை..
பஞ்சதந்திர எழுத்தெல்லாம்
பஞ்சு மிட்டாய் விலையில்
ஹாரி பாட்டர் எழுத்தெல்லாம்
எத்தனையோ கோடிகளில்..
ஒருவேளை
எழுத்திற்கும் நிறம் உண்டோ?!
பாவம்...
விடைதேடும் எழுத்துக்கள்!
செ. இராசா
06/10/2021
எழுத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment