30/10/2021

யாராலும் யாரும் இங்கே வாழல!

யாராலும் யாரும் இங்கே வாழல!
நாராலே பூவில் வாசம் கூடல!
ஆனாலும் யாரும் இன்றி ஊருல...
தானாநீ தாளம் போட்டால் சரியில்லை!

27/10/2021

போதும் போதும் புள்ளீங்களா...

 


போதும் போதும் புள்ளீங்களா..
பார்த்தது போதும் புள்ளீங்களா..
அதிகம் பார்த்தா புள்ளீங்களா..
ஆபத்தாமாம் புள்ளீங்களா..

இரண்டே கண்ணு புள்ளீங்களா..
இழந்தா வருமா கண்ணுங்களா..
கைப்பேசி போதும் புள்ளீங்களா...
வாய்ப்பேசி சிரிக்க வர்றீங்களா..

-செ. இராசா

26/10/2021

கறுப்புச் சட்டைக்குள்

 கறுப்புச் சட்டைக்குள்
தெளிவாய்த் தெரிகிறது
(வேற்று) மதக்குறியீடு

உரசும் வேகத்தில்

 

உரசும் வேகத்தில் உயிர்க்கின்ற நீ..
உள்ளே உலவவிட்டு
உலகையே காட்டுகிறாய் --கைப்பேசி--

25/10/2021

நண்டை நசுக்கிவிட்டு


 
 
நண்டை நசுக்கிவிட்டு நல்லா மிளகுதூவி
சுண்டாமத் தந்தாக்க சூப்பு

பயனில்லா பணம் -----------வள்ளுவர் திங்கள் 182



தானும் எடுக்காமல் தந்திடவும் எண்ணாமல்
பேணும் நிலைக்கென்ன பேர்
(1)

அடிஉரம் தேவையென ஆயிரம் கேட்டால்
முடிந்தபின் செய்வார் முறை
(2)

உயிர்காக்க இங்கே உதவாத செல்வம்
மயிர்போலத் தானே மதிப்பு
(3)

கொடுக்கக் கொடுக்கக் கொடுத்திட வேண்டிக்
கொடுப்பான் இறைவன் கொடு
(4)

ஈயாமல் சேர்க்கின்ற எல்லாமும் ஓர்நாளில்
நோயாலேப் போகும் நினை
(5)

சுவிஸ்ஸில் பணம்போட்டு சொல்லாமல் போனால்
குவித்தபணம் என்னாகும் கூறு?
(6)

பணம்பணம் என்றே பணத்தின்பின் போவோர்
பணத்தால்தான் மாய்கின்றார் பார்
(7)

அறமின்றி சேர்க்கின்ற அத்தனை காசும்
இறுதியில் மாறும் எமன்
(8.)

சாருக்கான் ஆனாலும் சட்டம்முன் நீதியின்முன்
யாருக்கும் செல்லாது காண்
(9)

ஏமாற்றிச் சேர்க்கின்ற எல்லாமும் கட்டாயம்
ஏமாற்றும் என்பதை எண்ணு
(10)

✍️செ. இராசா

(பட உதவி: தம்பியும் தம்பி மகனும்)

குறிப்பு:
இந்தப் படத்திற்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரியுது....எப்பதான் நீ சம்பந்தமாய் போட்டிருக்க..அதானே😊😊😊😊


23/10/2021

மழலைச் சிரிப்பில்


 

மழலைச் சிரிப்பில் மயங்கும் தருணம்
மழலையாய் மாறும் மனம்

✍️செ. இராசா

யாம் வியந்த தொழிலதிபர்?




தலைப்பைக் கண்டவுடன் இது வெறும் பெருமைபீற்றும் பதிவென்று தவறாக எண்ணிவிட வேண்டாம். இது கண்டிப்பாக அனைவருக்கும் உதவும் பதிவே என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . அந்தத் தொழிலதிபரின் பெயரை இங்கே குறிப்பிட்டு, தற்சமயம் அவருக்கு தர்மசங்கடம் கொடுக்க விரும்பவில்லை என்பதால் அதை இப்போது தவிர்க்கிறேன்.(கண்டிப்பாக பிற்காலத்தில் அவரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கும்போது இந்தத் தகவல்களும் அதில் இடம்பெயரும் என்பதில், எமக்கு எள்ளளவும் ஐயமில்லை.)

சரி...இப்போது கட்டுரைக்கு வருவோம். அந்த நண்பர் இந்தியாவில் இருந்து வந்து முதன் முதலில் கத்தாரில் தன் வாழ்க்கையைத் துவங்கியபோது மிகவும் குறைந்த ஊதியத்தில்தான் வேலை பார்த்துள்ளார். பின் அங்கிருந்து வெளியேறும் சூழல் வந்தபோது ஒரு சிறு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இன்று அது பல கிளைகளுடன், பல வடிவங்களில் (ஒப்பந்த நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், இயற்கை விவசாயப் பண்ணை மற்றும் ஆலோசனை மையம், வாடிக்கையாளர் சேவை மற்றும் பராமரிப்பு, ஏற்றுமதி நிறுவனங்கள்.......என) கத்தார் மட்டுமின்றி இந்தியாவிலும் பரவி மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவரின் கடும் உழைப்பு மட்டும் காரணமில்லை, அவரின் இயல்பு மாறாமல் பழகும் விதமும், பழமை மாறாமல் இருக்கும் பண்பும்தான். இதெல்லாம் பெரும்பாலும் வளர்ந்த மனிதர்களிடம் உள்ள பொதுக்குணம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை தான்...இருப்பினும் யாரிடமும் இல்லாத தனித்துவமான சில குணங்களைத்தான் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

1. அவருடன் நான் மாலை ஆறு முப்பது மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணிவரை இருந்தபோது கவனித்த விடயம் எமக்கு முதல் பிரம்மிப்பைக் கொடுத்தது, அது என்னவென்றால், என்னோடு இருந்த அந்த ஆறு மணிநேரத்தில் ஒருமுறை கூட கைப்பேசியை எடுத்து யாரிடமும் பேசாததுதான். (அட வாட்சப்கூட பார்க்கவில்லை. இதுதான் நேரமேலான்மை.... இப்போது அவர் தனக்கான நேர்த்தில் உள்ளார்)

2. அதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன விடயங்கள்தான் எம் அடுத்த ஆச்சர்யம். அதாவது தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் யாரும் ஆறு மணிக்குமேல் அலுவலகத்தில் இருக்கக் கூடாது. அதேபோல் மிகவும் முக்கிமான விடயமாக இருந்தால் மட்டும் வாட்சப்பில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவரும் மிக முக்கியமாக இருந்தால் மட்டுமே அன்று அழைப்பார். இல்லையேல் மறுநாள் வேலை நேரத்தில் மட்டும்தான் அழைப்பார். (அட...படுத்த உடன் தூங்குறாப்ல)

3. வேலை நேரத்தில் (மட்டும்) வேலை பார்ப்பது பற்றி இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அப்துல்கலாம் போன்ற பெரிய நபர்களின் பொன்மொழிகள் நாம் கேட்டிருந்தாலும், அதை சொந்த நிறுவனத்தில் எத்தனை பேர் உண்மையில் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்தால் முடிவு சொற்பமாகவே இருக்கும். இதில் அவர் கூறும் கூற்று "உண்மையில் வேலை நேரத்தில் வேலை பார்ப்பவர்களால் தன் நிறுவனம் நன்றாக இயங்குகிறதாம்." (அதிக நேரம் அலுவலத்தில் இருந்தால் கடின உழைப்பாளி என்று இன்னும் நினைப்பவர்களை என்ன சொல்வது? )

4. அடுத்து அவர் தேநீர் பரிமாறுபவர்களுக்கு அறிவுறுத்தியதாகச் சொன்னது. நல்ல மனநிலையோடு தேநீர் பரிமாறவேண்டும் என்பதே. வெறுப்புணர்வோடு இருந்தால் தனக்குகூட பரிமாற வேண்டாம் என்று அறிவிருத்தியுள்ளாராம். (செம்மல்ல)

5. அடுத்தது அவர் அலுவலகங்களுக்கு வரும் பொருள் வழங்குநர்கள் முதல் யாருமே 15 நிமிடங்களுக்கு மேல் காக்கவைக்கக் கூடாது என்பதே. (அடுத்தவர் நேரத்தை மதிக்கும் தன்மை, எத்தனை பேரிடம் உள்ளது?)

6. அவ்வளவு பெரிய வீட்டில் இருந்தாலும், இன்னும் அனைவரும் தரையில் அமர்ந்துதான் உணவருந்துகிறர்கள். அத்தனை படுக்கை வசதிகள் இருந்தாலும் இன்னும் தரையில்தான் தூங்குகிறார்கள். கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் பேசும் தன்மை. அட எப்படி இப்படி என்று அன்றிலிருந்து இன்றுவரை ஆச்சர்யத்தில் திளைத்ததை தொகுத்து இங்கே இப்போது நான் தெரியப்படுத்துவற்கான ஒரே நோக்கம், என்நிலை சென்றாலும் தன்னிலை மாறாதத் தன்மையில் உயர்ந்த அந்த நபர் பற்றி தெரிந்தால் அதுபோல் மற்றவர்களும் தன்னை மாற்றிக்கொள்ளலாம் என்பதே.......

இங்கே அவர்பற்றி யாம் கூறியது வெறும் துளி மட்டுமே...அவரின் கடலளவு வரலாற்றுச் சுவடுகளை பதிவு செய்து நூலாக வெளியிட வேண்டும் என்கிற என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளேன். அது நிறைவேறும் நாளன்று அவர் யாரென்று சொல்கின்றேன்.

அதுவரையில் நானும் உங்களுடன் காத்திருக்கிறேன்.......

இவண்,

செ. இராசா

20/10/2021

எங்கே போகிறோம்?




நான் கத்தார் வந்த புதிதில் ஓர் ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். பொதுவாக ஜப்பானியர்கள் மிகவும் கடினமான உழைப்பாளிகள். எப்போதும் வேலை வேலை என்றே இருப்பார்கள். அவர்கள் அப்படி இருப்பதால் மற்றவர்களையும் அப்படியே எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் வேலை ரீதியாக நல்ல பேர் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அவர்களுடைய ஒரே பிரச்சினை அவர்கள் வாயில் அவ்வளவு எளிதாக ஆங்கிலம் வராது என்பது மட்டுமே.

அந்த நிறுவனத்தில் தொகாசி என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் என்னுடன் ஆங்கிலம் பேசுவதில் மிகவும் ஈடுபாடு காட்டுவார் (நம்மளையும் ஒருத்தர் நம்பி.....ஹைய்யோ ..ஹைய்யோ) அப்படி என்னுடன் என்வீட்டில் பேச ஒன்பது மணிக்கு வருவதாகக் கூறினார். நானும் சரி என்று சம்மதித்தேன். ஒரு ஏழு மணி அளவில் என்னை கைப்பேசியில் அழைத்து, ராஜா மன்னிக்கவும், என்னால் ஒன்பது மணிக்கு வரமுடியாது. ஒன்பது ஐந்திற்குத்தான் வரமுடியும் என்று சொன்னார் பாருங்கள். அடப்பாவிங்களா ஐந்து நிமிடத்திற்கு இத்தனை வருத்தமா? அப்போது உணர்ந்தேன் அவர்கள் காலத்திற்குத் தரும் மதிப்பை.

பொதுவாக வெளிநாட்டில் இருப்பவர்கள் நேரத்தை மதிப்பார்கள். ஒரு கடையில்கூட சொன்ன நேரத்தில் பொருள் வரவில்லையென்றால் இரணகளமாக்கி விடுவார்கள். இங்கே இருக்கும் வரை இப்படியே பழகியவர்கள் ஒரு மாத விடுமுறையில் ஊர் போகும்போதுதான் நிறைய இழுத்தடிப்பு அனுபவங்களை அடையும்போது மிகவும் நொந்து நூடுல்ஸாகி விடுகிறார்கள்.

ஆம் நண்பர்களே....அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல, தனியார் வேலையாட்களான கொத்தனார், ஆசாரி, பிளம்பர், எலெட்ரீஷியன்........ தொடங்கி பெரு சிறு கடைகள் மட்டுமல்லாமல் கலைத்துறைவரை பெரும்பாலும் அனைவருமே நேரத்தையும் வாக்கையும் அலட்சியம் செய்பவர்களே என்பது வேதனையான உண்மையே. சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலும் யாருக்குமே இல்லை. "இந்தா செஞ்சிருவோம் அண்ணா...."என்கிற வார்த்தைதான் எப்போதும் பதிலாக வருகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் இங்கே நான் அடுக்குவதாக இருந்தால் அது புதினம்போல் நீண்டுவிடும் என்பதால் அதைத்தவிர்க்கின்றேன். "#கற்பெனப்படுவது_சொல்_திறம்பாமை" என்கிற ஔவையின் வாக்கை அறிந்தால் நம் சமூகம் இப்படி மாறி இருக்குமா?! உண்மையில் மிகுந்த வேதனையுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

செ. இராசமாணிக்கம்

சாமியென ஆராதித்தால்


 

சாமியென ஆராதித்தால் ஆத்திகவாதி!
சிலையென மறுதலித்தால் நாத்திகவாதி!

அதை மட்டும் இறை என்றால் அஞ்ஞானி!
அதையும் தாண்டி இறை என்றால் மெய்ஞானி!

என்னே கலை என்றால் இரசிகன்!
என்னே விலை என்றால் மூடன்!

வருமுன்னே கண்டுகொண்டால் சிற்பி!
வந்தபின்னும் காணாவிட்டால் அற்பி*!

✍️செ. இராசா

(*அற்பி- கஞ்சன்)

18/10/2021

குடி



குடி என்ற சொல்லே
குடி என்று சொல்கையில்
குடிக்காமல் விட்டால் எப்படி?

குடி
குடி உன்னைக்
குடிக்காதவரைக் குடி

ஆமாம்..இதெல்லாம் என்ன?
யாரோ சில குடிமகன்கள்
குடி-பற்றிச்சொன்ன
குடிஞான தத்துவங்கள்!

"குடி" என்றால் அது
குடும்பத்தைக் குறிக்கும்
பெயர்ச்சொல்;
அதே சமயம்
"குடி" என்றால் அது
குடும்பத்தைக் கெடுக்கும்
வினைச்சொல்!

இங்கே பெரும்பாலும்...
முதல் கோப்பையின் மூலம்
முதலில்லா இலவசம்தான்!
அதுவே தொடர் கோப்பையானால்
முதலெல்லாம் குடி வசம்தான்!

குடி
பங்கு வர்த்தகம்போல்
பங்காளி வர்த்தகம்!
தனை-யாரோ கெடுத்த கணக்கிற்கு
தான்-யாரையோ கெடுப்பதால்...

குடிக்கின்றோர் மன்றத்தில்
குடிக்காமல் நிற்போன் தீவிரவாதி!
குடிக்காதோர் மன்றத்தில்
குடித்தபடி நிற்போன் தீரா-வியாதி!

குடிகாரர் மத்தியில்
குடியை விட்டவன் தியாகவாதி!
குடியானோர் மத்தியில்
குடியை விட்டவன் சந்தேகவாதி!

குடி
அரியாசனத்தின் வருவாய்க் கணக்கு!
அறியா சனத்தின் செலவுக் கணக்கு!

குடி
கலைமகளைக் கவ்வும் விலைமகள்!
அலைமகனாய் மாற்றும் கொலைமகள்!

சங்க இலக்கியங்களில் இல்லாக் குடியா?
சங்கம் வைத்தோர் காட்டுகிறார் சான்று;
உண்மைதான்...
புறநானூற்றில் குடி உண்டு
அறம் கோணாத அளவில்...
பட்டினப்பாலையில் குடி உண்டு
பட்டினம் பாலையாகாத அளவில்
மணிமேகலையில் குடி உண்டு
மனிதனை அது மேயாத அளவில்
ஆனால்....
திருக்குறளிலும் குடி உள்ளதே....
திருந்திட வேண்டுமென்று
ஆம்..
"தீண்டாதீர் கள்"

✍️செ. இராசா

தன்னிலை மாறாதே ----------- குறளின் குரல்

 #தன்னிலை_மாறாதே
#குறளின்_குரல்

இன்பமோ துன்பமோ எந்நிலை ஆயினும்
தன்னிலை மாறாமை சால்பு
(1)

இல்லாரும் உள்ளாரும் எல்லோரும் ஒன்றெண்ணும்
நல்லோரை என்றென்றும் நம்பு
(2)

என்னதான் செய்தாலும் என்னத்த என்போர்க்கு
தன்செயல் மட்டும் சரி
(3)

மற்றோரை வாழ்த்த மனமில்லை என்றானால்
மற்றோரின் வாழ்த்தை மற
(4)

நிறைகளை முன்கூறி நேர்த்தியாய் பின்னே
குறைகளை(ய)க் கூறல் குணம்
(5)

அரிசியில்லா நெல்போல் அறமில்லா பக்தி
தரிசென்றே எண்ணித் தவிர்
(6)

பார்க்காத கண்களும் பக்தியில்லா ஞானமும்
சேர்க்காது தெய்வச் சிறப்பு
(7)

வீழ்ந்த மயிரென்று வீணாக எண்ணார்க்கே
தாழ்ந்தாலும் கிட்டும் தலை
(8.)

முற்போக்குப் பேச்சும் முறையற்றப் போக்கும்தான்
கற்புநெறி இல்லாரின் கண்
(9)

உயரத்தில் நின்றபடி ஒவ்வொன்றாய் கண்டால்
இயற்கைமுன் யாவரும் எள்
(10)

#வள்ளுவர்_திங்கள்_181

✍️செ. இராசா

17/10/2021

அடியே அன்ன பூரணி ...உன்னை மிஞ்ச யாரினி

 


 

அடியே அன்ன பூரணி
...உன்னை மிஞ்ச யாரினி
வாடி வர்ண மின்மினி
...என்னை தீபமாக்கு நீ!
...எண்ணை தீபமாகு நீ.........!!!

அடியே என்ன மாடல்நீ!
....ஆப்பிள் நோகும் பாரினி!
வாடி மின்ன லூற்றுநீ!
....எந்தன் வாட்டம் போக்குநீ!
....என்னுள் வாட்சக் கூட்டுநீ......!!!

✍️செ. இராசா

இன்று காலை என் மனைவி சமைத்த உணவைப் பாராட்டி #அன்னபூரணி என்று ஒரு பட்டம் வழங்கினேன் (அப்பப்ப அப்படித்தான் விட்ருங்க...😊😊😀😀சோறு வேணுமில்லையா) இதில் என்ன ஆச்சரியம் என்றாக் கேட்கின்றீர்கள்?!... என் தந்தையார் தற்சமயம் காசி யாத்திரையில் உள்ளார்கள். அங்கிருந்து என் தம்பியிடம் அன்னபூரணி சிலை வாங்கியதாகக் கூறியுள்ளார்கள். என் தம்பியும் அவரிடம் அன்னபூரணி என்றால் என்ன என்று கேட்டுள்ளான். என்னிடம் பேசும்போதும் அதுபற்றியே பேசினான். என் ஆச்சரியத்திற்கும் அளவே இல்லை. காரணம் அதே பெயரில் இன்று அனைவரும் பேசுகிறோம் என்பதே. ஆக..இந்த அன்னபூரணி சொல்ல வருவது என்னவாக இருக்கும்..... யோசித்தபடியே எழுதிவிட்டேன்!

நன்றி எம் அன்னபூரணி!😊😊😊💐💐💐🙏

✍️செ. இராசா

15/10/2021

கவிதை எமக்கு பொழுது போக்கல்ல...
கவிதையே எம்
வாழ்வு

14/10/2021

புறநானூற்றுப் பாடல்----------தெளிவுக்கவி

  


 

#பாடல்
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்_2_0
#புறநானூற்றுப்_பாடல்_தெளிவுக்கவி

எல்லா ஊரும் நம்ம ஊருதான்
எல்லாருமே நம்மவுங்கதான்---(2)

நல்ல வினை கெட்ட வினைங்க
தன்னால வருவதில்லை
நம்ம செஞ்ச கரும வினை
நம்மவிட்டுப் போவதில்லை

நொந்தமனம் சாந்தமுற
எண்ணம்போல மருந்து இல்லை
வந்த உயிர் போறகதை
இங்கே ஒன்னும் புதுசு இல்லை

சந்தோசம் வந்ததுன்னா
தந்தனத்தோம் போடாத- அட
சொந்தகதைப் பெருமையெல்லாம்
சொந்தமுன்னு எண்ணாத

கஷ்டமா இருந்துச்சுன்னா
கண்டபடி சீறாத- அட
என்னடா வாழ்க்கையினு
எதேதோ பேசாத...

மழைத்துளி பார்த்தாயா?
சிறு துளி தானே அது....
பேஞ்சமழை நதியானால்
பெரும்பாறை உருளாதா?

ஓடுகிற ஆத்துமேல
ஆடிவரும் ஓடம்போல
ஓடுகிற வாழ்க்கையில
தேடிவரும் கர்மவினை

பெரிய்.....ய.... மனுசங்கன்னு
பெருசா வியக்காத..
சின்.....ன... மனுசங்கன்னு
சிறுசா நினைக்காத...

எல்லாமே கர்மவினை
எல்லாமே கர்மவினை...

✍️செ. இராசா

13/10/2021

வாழ்க்கையில் வெல்ல வழிதேடும் முன்பாகத்
தூக்கத்தை வெல்லத் துணி

11/10/2021

முழுக்கவச உடை

 


கத்தார் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இதுவரையிலும் இந்த முழுக்கவச உடையெல்லாம் போட்டதே கிடையாது. என்ன செய்ய எங்கே அப்படியோ அங்கே அப்படி மாற வேண்டி உள்ளதே...

வளைகுடா நாடுகளின் ஆதாரமே பெட்ரோலிய உற்பத்திதான். அவர்களின் செல்வம் கொழிக்கும் நீர்மத் தங்கமாய் அவை உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதன் இழப்பு அவ்வளவு எளிதில் ஈடுசெய்ய முடியாது. அதனால் அங்கே கெடுபிடிகள் பயங்கரமாக இருக்கும். அங்கே யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. உள்ளே புகவே அப்படியென்றால் வேலை செய்வது எப்படி இருக்குமென்று நீங்களே யோசித்துப் பாருங்கள். மற்ற இடங்களில் செய்யும் வேலையை விட நான்கு மடங்கு நேரம் கூடுதல் செலவாகும். அப்படிப்பட்ட இடத்திற்கு இன்று ஒரு தள ஆய்விற்காகச் சென்று வந்தேன். இங்கே நான் போட்டுள்ள உடை, தலைக்கவசம், கையுறை, கண்ணாடி, குடிக்க நீர்.....என அத்தனையும் இருந்தால்தான் வேலைக்கு அனுமதிப்பார்கள். அப்பப்பா....போதும் போதும்னு ஆயிடுச்சு.......எப்படித்தான் கொளுத்தும் வெயிலில் இப்படியே வேலை பார்க்கிறார்களோ?!!... உண்மையில் அவர்களது வேதனையை உணர்வது அவ்வளவு சுலபமில்லீங்க....

இந்தக்காச சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு? வேலைவாய்ப்பும் குறைகிறது. சம்பளமும் ஏறவில்லை. கொரோனாவச் சொல்லிக் குறைச்சதுதான் மிச்சம். ஆனால் மத்த எல்லாமே கூடிடுச்சு....இப்படியே போனால்...... அடே சோனமுத்தா😭😭😭😭

நீரின்றி---------வள்ளுவர் திங்கள் 180



புல்லும் முளைக்காமல் பூவும் மலராமல்
எல்லாம் தரிசாகும் இங்கு
(1)

ஈரம் அடையாமல் எல்லாம் பழுதானால்
சோரம் மிகையாகும் சூழ்ந்து
(2)

கொஞ்சம் குடிநீரும் கொள்ளைப் பொருளாகப்
பஞ்சம் விரித்தாடும் பார்
(3)

குறிஞ்சியும் முல்லையும் குன்றிடும் என்றால்
தறிகெட்டுப் போகும் தரை
(4)

நீரில்லாக் கோளாய் நிலவுலகம் மாறுமெனில்
யாருக்கும் வாழ்வில்லை இங்கு
(5)

ஆழ்துளை போட்டிங்கே அள்ளுகிற எந்திரத்தால்
கீழ்மட்டம் போகுதே நீர்
(6)

எங்கெங்கும் கட்டிடமாய் ஏரியெல்லாம் மாறியதால்
எங்கேநீர் போகும் இயம்பு
(7)

பெய்யும் மழைநீரை பேணாமல் விட்டுவிட்டால்
உய்யவழி என்ன உரை??
(8.)

காவிரி நீர்வேண்டி கைகூப்பிக் கேட்காமல்
ஆய்வினை மேற்கொள்வோம் ஆழ்ந்து
(9)

குளங்களும் ஏரியும் கூடிடும் போதே
வளமுள்ள வாழ்வுண்டு நம்பு
(10)

✍️செ. இராசா

10/10/2021

மறதி



 

வரவேண்டிய நேரத்தில்
வராமல் போகும் விருந்தாளி!

வயதானதை உணர்த்த
வந்து வந்துபோகும் பங்காளி!

கெட்டதைத் துறக்க
கேட்காமல் உதவும் நண்பன்!

நல்லதைத் துறந்து
நட்டாற்றில் விடும் பகைவன்!

படபடப்பைக் கொடுத்து
படுத்தி எடுக்கும் எமன்!

மன்னிப்பைக் கொடுத்து
மதிப்பை உயர்த்தும் இறைவன்!

✍️செ. இராசா

(பழைய படம்... மறக்காமல் இருக்க)






09/10/2021

எவ்வளவு தூரம் போகும் அவ்வளவு தூரம் போவோம்..

 


எவ்வளவு தூரம் போகும்
அவ்வளவு தூரம் போவோம்..
எவ்வளவு காலம் போகும்
அவ்வளவு காலம் போவோம்...

என்னப் பெருசா
.......கிழிச்சேன்னுக் கேட்பாங்க!
முன்னே போனால்
...... முறைச்சபடி பார்ப்பாங்க!
தன்னைப் பெருசா
.......மதிக்கலைன்னு சொல்வாங்க!
மண்ணைப் போல
.......மத்தவரை நினைப்பாங்க!

எண்ணம் போல்தான்
.........எல்லாமும் நடக்குமுங்க!
முன்னே முன்னே
.........முன்னேறிப் போவோங்க!
வந்தால் இலாபம்
........வராட்டியென்ன நட்டமுங்க!
இன்னும் கொஞ்சம்
........போராடிப் பார்ப்போங்க!

இவ்வளவு தாங்க வாழ்க்கை
இவ்வளவு தாங்க வாழ்க்கை

✍️செ. இராசா

06/10/2021

எழுத்து



எழுத்து என்ற சொல்லே
எழுது எனச் சொல்லி
எழு'ப்புவதால் எழுதுகிறேன்....
இதோ எம் எழுத்து;

ஒலி மொழியானபோது
மொழி வரியானது..
வரி பதிவானபோது
மொழி வளமானது..

மொழியின் உயிர்
ஒலிதான் எனினும்..
ஒலியே இல்லாதும்
மொழியலாம் தானே..

அசோக பிராமியாய்
தமிழ் பிராமியாய்
சித்திர எழுத்தாய்
வட்ட எழுத்தாய்
தொடும் பிரெய்லியாய்
படும் குறியீடாய்...
நாணயத்திலும் பானையிலும்
கல்வெட்டிலும் ஓலையிலும்
தோண்டிடும் போதெல்லாம்
துலங்குவது என்ன இங்கே?!

எழுத்துருவின் முன்னோடி
யாமென்னும் அங்கீகாரம்தானே..?!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
--என்றார் வள்ளுவர்!
எண் எழுத்து இகழேல்
--என்றாள் ஔவை!
எழுத்தும் எழுதுகோலும் தெய்வம்
--என்றார் பாரதி!
எனில்
எழுத்து சாதாரண விடயமா என்ன?!

எழுத்து
பழமையைப் படம்காட்டும்
பெருமையின் சொத்து!
புரட்சியை வித்தாக்கும்
புதுமையின் கெத்து!

எழுத்து
எப்போதும் எழுப்பிவிடும்
ஆத்மார்த்த தாய்!
தப்பாமல் வழிநடத்தும்
தத்துவார்த்த தந்தை!

எழுத்து
செல்களுக்குள் செல்லும்
செல்லுலாய்டு பொறி!
சொல்களுக்குள் நிற்கும்
சூட்சம நெறி!

ஆனால்....
எழுத்தின் விலைதான்
ஏறவே இல்லை..

பஞ்சதந்திர எழுத்தெல்லாம்
பஞ்சு மிட்டாய் விலையில்
ஹாரி பாட்டர் எழுத்தெல்லாம்
எத்தனையோ கோடிகளில்..

ஒருவேளை
எழுத்திற்கும் நிறம் உண்டோ?!
பாவம்...
விடைதேடும் எழுத்துக்கள்!

✍️செ. இராசா

எப்போதோ வருகின்றாய்

இப்போதெல்லாம்; நீ
எப்போதோ வருகின்றாய்; நான்
முப்போதும் காத்திருக்கிறேன்..
வா கவியே...

 ✍️

05/10/2021

கருங்காலி மரம்

 


கேரள உணவகங்களில் கவனித்தீர்களேயானால் மஞ்சள் அல்லது சிவப்பு நிற சுடுநீர் கொடுப்பார்கள். எல்லா உணவகங்களிலும் புட்டியில் அடைத்த தண்ணீர்கள் இருந்தாலும், இந்த சுடுநீர் இல்லாத உணவகங்களே கிடையாது. மலை நாடான கேரளாவில் மூலிகை நீர் அருந்தும் பழக்கம் ஆரம்ப காலங்களில் இருந்தே இருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவை ஒன்றும் நமக்கு பழக்கமில்லாத அல்லது நாம் அறியாத மூலிகைகள் ஒன்றும் கிடையாது. ஆம்...மஞ்சள் நிறத்தில் உள்ளது சீரக நீர். சிவப்பு நிறத்தில் உள்ளது கருங்காலிப்பட்டை என்னும் மரப்பட்டை போட்டு கொதிக்கவைத்த நீர் அவ்வளவே
(மற்ற வகைப் பட்டைகளும் உள்ளன என்பது கூடுதல் தகவல்).

ஆமாம் அது என்ன கருங்காலி மரம்? இதுபற்றி... ஔவையார்கூட ஒரு பாடல் பாடி உள்ளாரே என்று தேடினால், அருமையான பாடல் ஞாபகம் வந்தது. நமக்கெல்லாம் தெரிந்த ஔவை-முருகன் கதை ஞாபகம் இருக்கா? ஆன்...அதே தான்.....சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?அதே..அதே. .அப்பாடலில் நாம் முருகன் என்று நாமாக கதை செய்தோம். காரணம் தமிழறிந்த மூதாட்டி ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்பதா?....ஆனால், அவனின் வார்த்தை ஜாலத்தில் தோற்ற ஔவை இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்பது மட்டும் உண்மை...இதோ அந்தப் பாடல்:

கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்

பெரிய பெரிய கருங்காலி மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இந்த இரும்புக் கோடாலி, இளங் கதலித் தண்டுக்கு வளைந்து விட்டதே. (கதலி என்பது வாழையின் ஒரு வகை.) இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் தோற்றதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறக்கமே வாராதே என்று புலம்புகின்றார் ஔவையார்.

அது இருக்கட்டும், அது என்ன கருங்காலி மரம்? அட நம்ம கருவேல மரம் தாங்க...நாம் தான் அதன் பெயரையும் தொலைத்துவிட்டோம். அப்பட்டையில் கொதிக்கவைத்த மூலிகை நீரையும் அருந்தாமல் கடக்கின்றோம். இதைப்பற்றி அலுவலத்தில் பேசும்போது, இந்தப் பாடலில் வரும் கதலி பற்றியும் பேசினோம். அப்போது ஒரு இலங்கைத் தம்பி அடித்தார் பாருங்க......கதலி, இதர, மொந்தன், கப்பல், கரிவாழை......என்று பட படவென்று அடுக்கினார். என்னப்பா இதெல்லாம் என்றால் வாழைப்பழத்தின் வகைகளாம். அடக்கடவுளே....வாழைப்பழம் என்றால் பனானாவான்னு கேட்கத்தானே தெரியும். அதுசரி...இப்படியே போனால்....இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகுமென்று யோசித்தவாறே நானும்...........அப்புறம் என்ன? ....முடிஞ்சு போச்சு. போங்க போங்க.....தமிழ் வாழ்க!!!

செ. இராசா.

04/10/2021

மனைவியிடம் அஞ்சாதே----வள்ளுவர் திங்கள்-179



பொண்டுக சட்டியெனப் பொல்லாப்புக் குள்ளாகும்
பெண்வழிச் சேறல் பிழை
(1)

நல்லறம் செய்யவும் நாணும்பெண் தாசரைக்
கல்லைப்போல் எண்ணிக் கட
(2)

மூத்திரம் போகவும் முன்னால்போய்க் கேட்போரை
ஆத்திரம் கொண்டே அறு
(3)

அன்பென்ற பேரில் அடிமையாய் ஆனோரை
என்சொல்லி என்னாகும் இங்கு
(4)

என்னென்ன செய்தாலும் எண்ணாதோர் கேட்பார்கள்
என்னய்யா செய்தாய் எமக்கு
(5)

மனைவியின் சொல்லையே மந்திரமாய் எண்ணி
வினைகளைச் செய்வோர்கள் வீண்
(6)

கேட்பதைக் கேட்பது கீழ்மையில் சேராது
கேட்டையும் கேட்பது கீழ்
(7)

கர்ம வினைகழிக்கும் காலத்தின் ஓட்டத்தை
அர்த்தமாய் மாற்றட்டும் அன்பு
(8)

அன்பை விரிக்காமல் அத்தனையும் வீடென்ற
சின்னத் தனத்தை விடு
(9)

அறப்பால் வழியே அவர்பால் முறையே
உறவின்பால் சென்றால் உயர்வு
(10)

✍️செ.இராசா