#மனவுறுதி
#தவம்
#வள்ளுவர்_திங்கள்_163
கண்களை மூடிக் களைகளை நீக்கிடும்
நுண்(ன்)கலைச் செய்கை தவம்
(1)
சாகா வரத்தைச் சகலர்க்கும் தந்திடும்
யோகாக் கலையே தவம்
(2)
நிலையாமை யாதென நெஞ்சில் உணர்த்தி
நிலைத்ததைக் காட்டும் தவம்
(3)
தவறாய்த் தெரியும் சமூக அழுக்கை
கவனமாய்ச் சுட்டும் தவம்
(4)
தன்னால் முடிந்ததைத் தந்திடும் சூழலில்
தன்துயர் தாங்கும் தவம்
(5)
தரணி முழுதும் தனைப்போல் நினைந்து
இரங்கித் துடிக்கும் தவம்
(6)
மதங்கள் அனைத்தின் மறைபொருள் கண்டு
மதங்களைத் தாண்டும் தவம்
(7)
மனிதனைக் கூறிடும்* மாபெரும் தீதாம்
பிணிகளைக் கொல்லும் தவம்
(8.)
*கூறுபோடும்
தனையேத் தனக்குத் தவறின்றிக் காட்டி
வினைகளை மாற்றும் தவம்
(9)
குறையைக் களைந்து குணத்தை வணங்கும்
முறையைப் புகுத்தும் தவம்
(10)
செ. இராசா
No comments:
Post a Comment