26/10/2020

அப்பா_பாடல்

 

 


#அப்பா_பாடல்

#தொகையறா:

உயிரின் விதைதூவி
உருவை உருவாக்கி
உயிரில் உயிர்தந்த தந்தையே-நீர்
உயிராய் விரிகின்ற விந்தையே...
ஆதி அந்தத் தந்தையே-நீர்
அந்தமில்லா விந்தையே!

#பல்லவி

ஆத்மாவில் வாழ்கின்ற அப்பாவின் வாசம்!
ஆதார மூச்சாக உள்ளூரப் பாயும்!
ஆத்மாவில் வாழ்கின்ற அப்பாவின் யாகம்!
ஆகாயம் மேலான சொல்லாதத் தியாகம்!

கண்ணிலே காண்கிற தெய்வம்
என்றுமே ஈன்றவர் அன்றோ?!
நம்முன்னே நிற்பதால் தெய்வமும் உண்மையன்றோ?!!

அப்பா நீ தானப்பா
எல்லாம் உன்னாலப்பா...
என்னுள் கண்டேனப்பா
தெய்வம் நீ தானப்பா...

#சரணம்_1:

உயர்ந்த மரத்தின் உறுதியினை
.........மண்ணில் மறைந்த வேர்சொல்லும்!
உயர்ந்த மனிதனின் உறுதியினை
........தந்தை தந்த ஜீன்சொல்லும்!
மனித குலத்தின் மகிமையினை
........கடந்து வந்த வழிசொல்லும்
இனிய குலத்தின் பெருமையினை
........என்றும் இந்த ஊர்சொல்லும்

தீதும் நன்றும் என்பதெல்லாம்
......யாரும் தந்திட முடியாது
யாதும் உண்மை என்றாலும்
...... வேரை மாற்றிட முடியாது

வேகம் வேகம் வேகம்
பாயும் கோபம் வீரம் யாவும்
பாசம் நேசம் தியாகம் எல்லாம்... அப்பா

#சரணம்_2

கடந்து வந்த பாதையிலே
.......நடந்து போனால் புரிந்துவிடும்
தடத்தை மீண்டும் பார்க்கையிலே
.......தந்தை யாரென விளங்கிவிடும்!
இளமை செய்யும் மாயையிலே
...... அறிவின் உரைகள் கழுத்தறுக்கும்!
ஆடி அடங்கும் வேளையிலே
.......அனைத்தும் உள்ளே எதிரொலிக்கும்!

ஆதித் தந்தை இல்லாமல்
...... யாரும் இங்கே கிடையாது!
உந்தை எந்தை இல்லாமல்
.......நீயும் நானும் கிடையாது!

வேகம் வேகம் வேகம்
பாயும் கோபம் வீரம் யாவும்
பாசம் நேசம் தியாகம் எல்லாம்... அப்பா

✍️செ.இராசா

No comments: