யாருக்காகவும் காத்திருக்காது
யாரும் காக்க வைக்கவும் முடியாது
இங்கே..
படைத்த பிரம்மனின் காலமும்
படைப்பின் காலமும்
வேறு வேறு...
அஃதே..
மனிதனின் காலமும்
மாக்களின் காலமும்
வேறு வேறு...
நேரமும் காலமும்
நாம் கண்டறிந்த கணக்கே தவிர
காலத்தின் கணக்கல்ல
இங்கே
இருவரின் இடைவெளியில் இருப்பது
தூரம் மட்டுமல்ல
காலமும் தான்
---இது ஐன்ஸ்டீன் சொன்னது;
நிமிடங்கள் ஓவ்வொன்றும் வருடங்களாகும்
நீ என்னை நீங்கிச்சென்றால்
வருடங்கள் ஒவ்வொன்றும் நிமிடங்களாகும்
நீ எந்தன் பக்கம் வந்தால்
--இது கவிஞர் வைரமுத்து சொன்னது
ஆம்..
காதலித்துப்பார்
காலம் புரியும்!
அப்படியே....
கொஞ்சம் கால ஏட்டைப் புரட்டிப்பார்..
வரவு செலவு கணக்குகள்
வரலாறாய் விரியும்....
புத்தர்
வள்ளுவர்
இயேசு
முகமதுநபி
கம்பன்
விவேகானந்தர்
பாரதி
கண்ணதாசன்
இளையராஜா
........
.....
இன்னும் இன்னும்..
இவர்கள் யார்?
தன்னை முன்னும் பின்னும் வைத்து
காலத்தைப் பிரித்த ஞானவான்கள்..
பலர் காலத்தில் வாழ்கிறார்கள்
சிலர் காலத்தை வகுக்கிறார்கள்
வருடத்தை பெருபொழுதாக்கி
நாட்களை சிறுபொழுதாக்கி
வளர்ச்சியைப் பருவங்களாக்கி
வாழ்க்கையை வளமாக்கி
வாழ்ந்தான் நம் பாட்டன்
ஆனால் இன்று?!!
காலடியில் தொலைத்த காலத்தைக்
கீழடியில் தோண்டுகிறோம்.
இந்தக்
கால மாற்றத்தில் தான் எத்தனை
ஞால மாற்றங்கள்?!
காலத்தை மறைக்கும் தண்டனை தானே
சிறைத்தண்டனை!
இராமனையும் பாண்டவர்களையும்
வனவாசம் அனுப்பியததெற்கு
வசதியைப் பெருக்கவா
வருடங்களைக் கழிக்கத்தானே?!
காலம் விசித்திரமானது
இன்று சரியென்பதை
நாளை தவறாக்கும்
இன்று தவறென்பதை
நாளை சரியாக்கும்
ஒரே நதியில்
இரு முறை குளிக்க முடியாது..
இது யாரோ ஓர் ஜென் சொன்னது..
ஒரே பிறவியில்
இரு வாழ்க்கை வாழ முடியாது
இது இந்ந நானெனும் மண் சொன்னது..
ஆம்...
காலத்தைப் புரிந்தவரே
காலத்தோடு காலா காலம் வாழ்கிறார்..
காலத்தில் நிற்பவரே
காலத்தோடும் காலம் கடந்தும் நிற்கிறார்..
காலம் அறி....
ஞாலம் புரி...
செ.இராசா
18/10/2020
காலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment