07/10/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-7, பகர வருக்கம்

 

#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_7
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#பகர_வருக்கம்

#பழிப்பன_பகரேல்_1
பொய்மெய் அறியாமல் பொல்லாத சேதியை
மெய்யாய்ப் பகர்தல் விடு

#பாம்பொடு_பழகேல்_2
பாம்பினைப் போலுள்ளோர் பக்கத்தில் வந்தாலே
வீம்பாய் முடியும் விலகு

#பிழைபடச்_சொல்லேல்_3
இம்மொழி அம்மொழி எம்மொழி ஆனாலும்
தம்மொழியைத் தப்பின்றிப் பேசு

#பீடு_பெறநில்_4
அப்படி இப்படி என்றெல்லாம் வாழாமல்
இப்படித்தான் வாழ்வதென்று வாழ்

#புகழ்ந்தாரைப்_போற்றி_வாழ்_5
வாழ விரும்பியே வாழ்த்தி மகிழ்வோரை
வாழ மனதார வாழ்த்து

#பூமி_திருத்தியுண்_6
நிலத்தைக் கிளறியதில் நீர்வழி செய்து
நிலத்தில் விளைவதை உண்

#பெரியாரைத்_துணைக்கொள்_7
மூத்தோர் துணையோடு முன்னேறிப் போவோர்க்குச்
சேர்த்தல் எளிதாகும் செல்

#பேதைமை_அகற்று_8
அறியாத ஒன்றை அறிந்ததாய் எண்ணும்
அறியாமைப் பேயை அகற்று

#பையலோடிணங்கேல்_9
சிறுபிள்ளை சொல்கேட்டுத் தீர்வினைத் தேடும்
சிறுமைத் தனத்தை விடு

#பொருடனைப்_போற்றிவாழ்_10
பொருள்கள் வரும்போது போற்றி மதித்தால்
பொருள்கள் பெருகிடும் போற்று

#போர்த்தொழில்_புரியேல்_11
கூலிப் படையாகிக் குற்றம் புரிவோர்க்குக்
கூலி தருவான் இறை

✍️செ. இராசா

No comments: