27/10/2020

சீப்பு



சீப்பை சீப்புதானே எனச்
சீப்பாக எண்ணாதீர்...

நாகரிகம் தொடங்கியது முதல்
நவ நாகரீகக் காலம் வரை
தோண்டிய இடமெல்லாம்
தொல்பொருளாய்ச் சிக்குவது
இந்த சீப்புதான்...

அன்று எலும்பால் உருவாகி
இன்று நெகிழியாய் நிறம்மாற
எத்தனையோ காலமானாலும்
இன்னும் காலமாகாமல்
இரத்தமின்றி தலை சீவுவதும்
இந்த சீப்புதான்..

யாரேனும் சீப்பை வேண்டாவிடில்
தலைக்கனமென எண்ணாதீர்!
ஒருவேளை...
தலைக் கனம் இல்லாமையே
காரணமாய் இருக்கலாம்.

உண்மையில்..
தலை முடியில்லா தலைகளுக்கே
சீப்பின் மொழி புரியும்..

இங்கே..
மனிதன் காலை வாரினால்தான் தவறு
சீப்பு தலையை வாரினால் தவறல்ல

சீப்பால் வெறுப்புற்ற
பேன்கள் வேண்டுமானால்
மயிர்க்காட்டில் மாநாடு போடலாம்!
சீப்பை ஒதுக்கிய
பெண்கள் கூடியதாய்
எந்த நாட்டிலும் சேதி உண்டா?!!

சோறு இல்லாமல் கூட
சுத்தும் புள்ளீங்கோ உண்டு..
சிகையலங்காரம் செய்யா
புள்ளீங்கோ உண்டா?

உண்மையைச் சொல்லுங்கள்
மனிதன் மட்டுமா சீவுகிறான்..

#கொடியில்_தலை_சீவும்_தென்றலும்*
மரத்தில் தலை சீவும் அருவியும்
அடுப்பில் தலை சீவும் நெருப்பும்
#உழுஉந்தில்**தலை சீவும் வயலுமென
இப்படி இயற்கையும் சீவத்தானே செய்கிறது

ஆனால்...
நான் சீவ மட்டும்
இந்த வீட்டில்
சீப்பு கிடைப்பதில்லையே ஏன்?!
😊😊😊😊😀😀😀😀

✍️செ.இராசா

#குறிப்பு

*இவ்வரி மட்டும் கவியரசரின் வரி. மேற்கோளாக கையாளப்பட்டுள்ளது.

**உழுஉந்து- Tractor- இவ்வார்த்தைப் பிரயோகம் தம்பி
மேழியன் பார்த்திபன்
அடிக்கடி பயன்படுத்துவார். இப்படி நாமும் இந்த மாதிரி நல்ல தமிழ் வார்த்தைகளையும் எடுக்க வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது. மனமார்ந்த நன்றி தம்பி

No comments: