இந்தக் கண்ணாடிக்கும் எனக்கும்தான்
எத்தனை கால பந்தம்?!
ஐந்தாம் வகுப்பென்று நினைக்கின்றேன்..
அருகில் அமர்ந்தபோதும்
கரும்பலகைக் கானலாய்த் தெரிந்தது!
உற்றுக் கவனித்த ஆசிரியர்
உறைக்கும்படிச் சொன்னாலும்
உற்றோரின் காதுகளில்
உறை(ரை)க்கவில்லை போலும்;
விளைவு...
முதல் கண்ணாடியே
பூதக்கண்ணாடியாய்
மூக்கை மட்டுமல்ல
மூச்சையும் அழுத்தியது
அதுமட்டுமா??!
படிக்காமலே வாங்கிய
பட்டப்பெயர்கள் வேறு..
"கண்ணாடி"
"சோடாப்புட்டி"
"பெரிசு"
"சிதம்பரம்'
இத்யாதி இத்யாதியாய்
இச்சமூகம் செய்த
கிண்டலும் கேலியும்...
அப்பப்பா...
அனைத்தும் அவ்வயதில்
ஆறாத இரணங்களே..
கிரிகோர் ஜோகன் மெண்டலின்
அறிவியல் அறியாமல்
கண் குறைபாட்டை
என் குறைபாடாக்கி
தாழ்வு விதைகளைத்
தாராளமாய்த் தூவியது இவ்வுலகு!
இங்கே..
கருப்பாய்ப் பிறந்தாலும் குறை
கண்ணாடி போட்டாலும் குறை
கிராமத்தான் என்றாலும் குறை
ஆங்கிலம் பேசாவிட்டாலும் குறை
இப்படிக் குறை குறையென்று
குறையில்லா விடையத்தை எல்லாம்
நிறைய விதைக்கும் சமூகத்தால்
நிறைகுறை அறியாக் குழப்பம்வேறு..
விளைவு...
காதலின் வரிகள்கூட இப்படிக்
கசப்பாய்த்தான் பிறந்தது!
"கண்ணாடி போட்ட நான்- உன்
முன்னாடி வந்துநின்றால்
தள்ளாடிச் சென்று- ஒரு மறைவின்
பின்னாடி போவது எதனால் தெரியுமா?!
இந்த கருப்பானவனைக் கண்டால்
உனக்கு வெறுப்புண்டாகுமோ
என்ற அச்சத்தால்...."
இதையெல்லாம் உடைத்து
சுக்குநூறாக்கி கெத்தாய் எந்திரிக்க
எத்தனை நாள் ஆனது தெரியுமா?!
ஆம்...அதற்கெனக்கு
பலரின் கண்ணாடிகள் தேவைப்பட்டது!
காந்தியின் கண்ணாடியில்
சத்தியத்தின் வலிமை தெரிந்தது!
பெரியாரின் கண்ணாடியில்
சாதியத்தின் கொடுமை தெரிந்தது!
அம்பேத்கரின் கண்ணாடியில்
மன்னிக்கவும்...
சட்டத்தின் ஓட்டையும் தெரிந்தது!
எம்ஜிஆரின் கண்ணாடியில்
ஏழைகளின் வலி தெரிந்தது!
கலைஞரின் கண்ணாடியில்
கன்னித்தமிழ் தெரிந்தது!
அதனால்தான் என்னவோ...
என் கண்ணாடியிலும்
தன்னம்பிக்கை விருட்சம்
நன்றாகத் தெரிந்தது!
பின்னர்தான்...
கருப்பு கௌரமானது
தமிழ் தெய்வமானது
யாதும் ஊரானது
யாவரும் உறவானது..
என் அகமும் கண்ணாடியானது
எப்புறமும் "நான்" ஆனது!
மொத்தத்தில்
என் கண்ணாடி
என் செல்லக் கவியானது!
இன்றும் ஓர் கவியானது!
செ.இராசா
24/10/2020
கண்ணாடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment