29/11/2025

Dil Wale Dulhania Lejayenge

 


ஒருபடம் வெளிவந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஒரு திரையரங்கில் ஓடுகிறது என்றால் நம்புவீர்களா?!!...ஆமாங்க....தில்வாலே துல்ஹானியா லே ஜயாங்கே....என்னும் படம் ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் 1995ல் வெளிவந்து இன்னும் மும்பை மராத்தி மந்திர் என்னும் திரையரங்கில் காலைக் காட்சி மட்டும் ஓடுவதாக ஒரு செய்தியைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை பரிசோதித்தபோது உண்மைதான் என்று கண்டு வியந்து போனேன். அது எப்படி சாத்தியம்? என்னதான் நல்ல படமாக இருந்தாலும் எப்படி சாத்தியமானது என்கிற கேள்வி மட்டும் நிற்கவே இல்லை. தீவிரமாய்த் தேடியபோது கிடைத்த சில உண்மைகள் கீழே‌‌..

1. இன்னும் டிக்கெட் விலை 30/- முதல் 50/ரூபாயாகவே தொடர்கிறது.
2. தியேட்டர் அமைந்த பகுதி பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வருவதால் எப்போதும் யாரேனும் வருகிறார்கள்.
3. வார நாட்களில் 50-100 பேரும் வாரக் கடைசியில் 300 பேரும் வருகிறார்களாம்.
4. இவை எல்லாவற்றையும் விட படத்தின் கதையும் திரைக்கதையும் நடிப்பும்தான்..என்றால் அது மிகையே அல்ல....

ஆமாம்... நானும் இன்றுதான் நெட்பிளிக்சில்(Netflix) முழுமையாக அந்தப் படத்தைப் பார்த்தேன். எவ்வளவு அழகாக உணர்ச்சி பொங்க ஷாருக்கான், கஜோல், ஓம் பூரி....என்று சிறப்பாக நடித்துள்ளார்கள்!! ப்பா...
எல்லா காலத்திலும் பொருந்தும் கதை மற்றும் திரைமொழி கவிதைபோல் உள்ளது. பல இடங்களில் கண்ணீர் வரவழைக்கிறது. முதன் முதலில் ஷாருக்கான் நடிப்பில் வியந்தேன் என்றால் அது இப்படமே..... செம்ம...

பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள்...
எனக்குத் தெரிந்த வரையிலும் உலக வரலாற்றில் 30 வருடங்களாக திரையில் ஓடும் ஒரே திரைப்படம் இதுவே.....

✍️செ. இராசா
#dilwaledulhanialejayenge
#DDLJ

கார் ரிமோட்டை முடிமேல் வைத்து அழுத்தினால்

 

சில நாட்களுக்கு முன்பு அறிவுக்கும் ஞானத்திற்குமான விளக்கத்தை ஒரு நண்பர் கேட்டார். மிகச் சுருக்கமாக இப்படிக்கூறினேன்
"அறிவு என்பது அறிவது, ஞானம் என்பது உணர்வது, அதாவது மற்றவர்கள் மூலமாக அல்லது நூல்கள் மூலமாகக் கற்றுக் கொள்வதால் கிடைப்பது அறிவு....அறிந்த ஒன்றை அனுபவித்து ஆழ்மனதில் உணர்வதால் கிடைப்பது ஞானம். அறிவால் ஒரு எல்லைதான் போக முடியும். ஞானம் எல்லை இல்லாதது. உதாரணமாக....அறிவை உவமை கொண்டு உண்மையின் பக்கம் அழைத்துமட்டுமே செல்ல முடியும். ஆனால் ஞானம் அந்த உண்மையையே உணர வைக்கும்."
சரி....அதை விடுவோம். இப்ப நான் சொல்ல வந்தது என்னன்னா...நான் கற்ற ஒன்றை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவே இப்பதிவு. அட பெரிய விடயமொன்றும் இல்லீங்க...
ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய கார் ரிமோட்டை தூரத்தில் இருந்து அழுத்திய போது வேலை செய்யவில்லை. அப்ப அருகே இருந்த தம்பி இம்ரான் சொன்னாப்ல, அண்ணா...ரிமோட்டைத் தலையின்மேல் உள்ள முடியின்மேல் வைத்து அழுத்தினால் வேலைசெய்யுமென்று....அட ஆச்சரியம் போங்க... அன்றிலிருந்து அப்படியே செய்கிறேன். அதுமட்டுமின்றி நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினேன். அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள். மகரிஷியின் (காந்த) அலைதத்துவம் தெரியும் என்றாலும் நேற்று ஜெமினியில் ஒரு கேள்வியாகக் கேட்டுவைத்தேன் அதன் பதிலை நீங்களே பாருங்களேன்....
#கார்_ரிமோட்டைத் தலையில் முடிமேல் வைத்து அழுத்தினால் நன்றாக அதிக தூரம் வேலை செய்கிறதே எப்படி?*
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி! 🚗
உங்கள் கார் ரிமோட்டைத் தலையின் மீது வைத்து அழுத்தும்போது அது சாதாரணமாக வேலை செய்வதை விட அதிக தூரத்திற்கு வேலை செய்வதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளது. இது உங்கள் தலையின் மீதோ அல்லது முடியின் மீதோ உள்ள மாய சக்தி அல்ல, ஆனால் உங்கள் உடலால் தூண்டப்படும் ஒரு இயற்பியல் விளைவு.
கார் ரிமோட் சாவிகள் (Key Fobs) திறக்க அல்லது பூட்ட வானொலி அலைகளை (Radio Waves) பயன்படுத்துகின்றனs. இந்த அலைகள் ஒரு வகை மின்காந்த அலைகள் (Electromagnetic Waves).
#அலைகளை_அதிகரிக்கும்_விளைவு (Antenna Effect)*: உங்கள் உடல், குறிப்பாக நீங்கள் ரிமோட்டைத் தலையில் வைக்கும்போது, ரிமோட்டின் சிறிய ஆண்டெனாவுக்கு (Antenna) ஒரு பெரிய விரிவாக்க ஆண்டெனா (Extended Antenna) போல் செயல்படுகிறது.
*#ஆண்டெனா_விரிவாக்கம்*: உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் அயனிகள் (ions), ரிமோட் வெளியிடும் பலவீனமான வானொலி சமிக்ஞையை (signal) ஏற்று, அதை ரிமோட்டிலிருந்து வெளியேறும்போது மேலும் வலுவாகவும், அதிக திசைக் கட்டுப்பாடுடனும் (Directional) இருக்க உதவுகிறது.
> சுருக்கமாக: உங்கள் உடல் வானொலி அலைகளைச் செலுத்தும் ஒரு கடத்தியாக (Conductor) செயல்பட்டு, ரிமோட்டின் சமிக்ஞையின் வீச்சை (Range) அதிகரிக்கிறது.
மனித உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. இந்த நீர்ச்சத்துதான் இந்த விளைவுக்கு முக்கியக் காரணமாகும்.
* மின்காந்த அதிர்வு: தலை போன்ற நீர்ச்சத்து நிறைந்த பகுதி, ரிமோட்டின் சமிக்ஞையைப் பிடித்து, அதைப் பல திசைகளிலும் சிதறடிப்பதற்குப் பதிலாக, ரிமோட்டை நோக்கியே அதிர்வுறச் செய்து (Resonate) அனுப்புகிறது.
* சமிக்ஞை வலுவடைதல்: இது ரிமோட்டிலிருந்து வெளிவரும் சமிக்ஞையின் சக்தியை உண்மையில் அதிகரிக்கவில்லை என்றாலும், கார் ரிமோட்டிற்குப் பயணிக்க வேண்டிய சமிக்ஞைத் திசையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது. இதனால் கார் சிக்னலை மிகவும் தெளிவாகப் பெறுகிறது.
கவனிக்க வேண்டியவை
அதிக தூரம் வேலை செய்ய வேண்டும் என்றால், ரிமோட்டை நெற்றி அல்லது கன்னத்தில் வைப்பதை விட, நீங்கள் ரிமோட்டைத் தொடாமலே தலைக்கு மேல் தூக்கிப் பிடிப்பது கூட ஆண்டெனா விளைவுக்குப் போதுமானதாக இருக்கலாம். உங்கள் உடலை அதிகப்
படியான ஆண்டெனாவாகப் பயன்படுத்துவதே முக்கிய விஷயம்.
வேறொரு தொழில்நுட்பம் அல்லது அறிவியல் தொடர்பான கேள்விக்கு நான் உதவ முடியுமா?
நன்றி ஜெமினி.... மற்றும்
நன்றி உறவுகளே...🙏

விபத்துதந்து விரைவிலன்று

 

சபலமென்ற ஒன்றுவந்து
.....தன்மைமாறும் முன்னரே
சடுதியாக ஓடிவந்து
.....காக்குமெந்தன் ஈசனே!
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
விபத்துதந்து விரைவிலன்று
....போகயெண்ணும் முன்னரே
விழிப்புதந்து விதியைமாற்றி
....ஒளியைத்தந்த நேசனே!
ஓம் நமசிவாய...
உபயமொன்று செய்வதற்கு
.....நானுமொன்றைத் தந்திடின்
உயிருமுந்தன் உடலுமுந்தன்
.... என்ன:ஈய ஈசனே!
ஓம் நமசிவாய
அபயமென்று வந்துவிட்டால்
....அள்ளியள்ளித் தருவியே
அற்பமைந்தன் கேட்பதென்ன?!
.... அர்த்தமாக்கு ராசனே!- எம்மை
......அர்த்தமாக்கு ஈசனே!!
✍️செ. இராசா

26/11/2025

வாராரு வாராரு வைர அண்ணன்

 

வெற்றிவேலு முருகனோட பக்தரு அண்ணன்
மருதுபாண்டி வம்சத்தோட வீரரு
வேங்கபோல வேகங்கொண்ட வேந்தரு
அண்ணன்
தென்பாண்டி நாட்டோட மைந்தரு
வாராரு வாராரு வைர அண்ணன்
அண்ணன்
வாரி வாரித் தருவதில் வாழும் கர்ணன்
சிவகங்கச் சீமையோட சிங்கமே- நீங்க
தென்னாட்டின் அடையாளம் என்றுமே
அண்ணன் மனசு சுத்தமான தங்கமே- அவரு
பேரப்போல ஜொலிஜொலிக்கும் வைரமே.....
அள்ளித்தரும் வள்ளல்பாரி நெஞ்சமே...நாங்க
சொல்வதெல்லாம் மிகையில்ல கொஞ்சமே...
துள்ளிவரும் ஜல்லிக்கட்டு வீரமே-அண்ணன்
சிரிச்சாலே ஓடும்மனப் பாரமே
வாராரு வாராரு வைர அண்ணன்
அண்ணன்
வாரி வாரித் தருவதில் வாழும் கர்ணன்
கட்சிதாண்டி பழகுகின்ற உள்ளமே - நீங்க
காட்டுகின்ற அன்பில் இல்லை கள்ளமே
அத்தனைபேர் தேடிவாரார் தஞ்சமே-
அண்ணன்
மனசுக்குள்ள என்றும் இல்லை வஞ்சமே..
பாரபட்சம் பார்த்திடாத பாசமே -அண்ணன்
பார்வையில அனைவருமோர் தேசமே
கூடவர தப்புமட்டும் அஞ்சுமே- அண்ணன்
கோபுரத்தில் மின்னுகின்ற கலசமே!
வாராரு வாராரு வைர அண்ணன்
அண்ணன்
வாரி வாரித் தருவதில் வாழும் கர்ணன்

தமிழகத்தின் செல்லப் பிள்ளை யாரு?

 

தமிழகத்தின் செல்லப் பிள்ளை யாரு?- SK
திறமையால ஜெயிச்சு வந்த ஸ்டாரு
நகைச்சுவையால் கட்டிப் போட்ட தாரு- அண்ணன்
நடிச்சதெல்லாம் பட்டைய கிளப்பும் பாரு!
ஏய்..
அடக்கத்தோட விளக்கம்
அண்ணனப் பார்த்தா விளங்கும்
முடிஞ்சவரைக்கும் முயன்றா
முயற்சி பலனக் கொடுக்கும்
யாரு யாரு யாரு யாரு
எஸ்கே அண்ணன் யாரு?!
யாரு யாரு வேற யாரு
அண்ணன் நம்ம ஸ்டாரு...
சரணம்..
மெரினாவுல கடலை போட்டார் அன்று
மதராஸியா மாறிவிட்டார் இன்று
எதிர்நீச்சல் போட்டதால தானே
மாவீரனா ஜெயிச்சுநின்னார் அண்ணே...
சீமராஜா ஆனாலும்
வேலைக்காரன் போலிருக்கும்
ரெமோபோல இருந்தாலும்
டானப்போல வசூலிருக்கும்
அமரனாக இருப்பீங்க அண்ணா - அதுக்கு
பராசக்தி துணையிருப்பா நன்னா....
யாரு யாரு யாரு யாரு
எஸ்கே அண்ணன் யாரு?!
யாரு யாரு வேற யாரு
அண்ணன் நம்ம ஸ்டாரு...
SK அண்ணன் நம்ம ஸ்டாரு
✍️செ.இராசா

24/11/2025

படி படி படி

 


படி படி படி
படிப்ப விரும்பிப் படி
படி படி படி
படிப்பு தானே படி

படிப்படியாப் படிப்படியாப்
படியேறிப் போகனும்னா
படிக்கனுங்க நல்லா படிக்கனுங்க
படிப்படியாப் போனாலும்
படிச்சதுபோல் தெளிவுடனே
நடக்கனுங்க நல்லா நடக்கனுங்க

மத்தவுங்க வாழ்க்கையைத்தான்
வாழ முடியுமா?!
புத்தகத்தால் சாத்தியமே படிச்சுப் பாருங்க...
அத்தனையும் படிப்பதால என்ன லாபங்க?
தத்தளிக்கும் நேரத்துல உதவும் பாருங்க...

கற்பனையத் தூண்டுகிற
புனைவும் வேணுங்க
கற்றுணரச் செய்கின்ற
நூலும் தேவைங்க...

நாம புரட்டும் நூலல்லாம் நூலு இல்லீங்க.‌
நம்மலப் புரட்டும் நூலதுவே நூலு தானுங்க...

அரசியலோ ஆன்மீகமோ
இலக்கியமோ இலக்கணமோ
வரலாறோ அறநூலோ
கவிதையோ காவியமோ
நாவலோ நவீனமோ
அறிவியலோ புனைவுகளோ
படியுங்க படியுங்க
நமக்காகப் படியுங்க

படி படி படி
படிப்ப விரும்பிப் படி
படி படி படி
படிப்பு தானே படி

நமக்காகப் படியுங்க...

21/11/2025

பாக்க சொல்ல

 

பாக்க சொல்ல
பாசங் காட்டி உருகுறான்!- தட்டிக்
கேக்க சொல்ல
கேட்ட இழுத்து மூடுறான்!
பூவுக் குள்ள
புயலுக் காத்தப் புகுத்துறான்!- இதயத்
தீவுக் குள்ள
தீய மூட்டி சிதைக்கிறான்!
பழச மறக்கும் உறவு
பழக்கத்துக்கு எதுக்கு?
விலக நினைக்கும் உறவு
விலகுமுன்னே விலக்கு
காலமுள்ள காலம்வர தொடரும் என்றாங்க
கானல்நீர கங்கையென்று கண்டு கொண்டேங்க
கற்பப்போல நட்புயென்று கவிதை சொன்னாங்க
கற்பனைய உண்மையென்று நம்பி விட்டேங்க
எடுத்துக் காட்டு இவுங்கதான்னு
பலரும் சொன்னாங்க
அடுத்த பாகம் அறியுமுன்னே
நகர்ந்து போனாங்க
பழச மறக்கும் உறவு
பழக்கத்துக்கு எதுக்கு?
விலக நினைக்கும் உறவு
விலகுமுன்னே விலக்கு
விலக நினைக்கும் உறவு
விலகுமுன்னே விலகு...
✍️செ. இராசா

18/11/2025

புறப்படு பெண்ணே புறப்படு

 


புறப்படு பெண்ணே புறப்படு
...புயலென நீயும் புறப்படு
மறுப்பவர் மறுப்பினும் புறப்படு
...வாழ்க்கையே மாறும் புறப்படு

விடுவிடு கவலையை விடுவிடு
....விலங்கிடும் விதிக்கு விடைகொடு
எடுஎடு.. ஆயுதம் எடுஎடு..
.....எல்லையை மீறினால் எடுஎடு

பொறுத்தது போதும் புறப்படு
...புதுவிதி செய்யப் புறப்படு
அறமுடன் நீயும் புறப்படு
....அகிலமே நிற்கும் புறப்படு

இடதுகை

 


என்னதான்
ஒரே நேரத்தில் பிறந்திருந்தாலும்
ஒரே அங்கத்தில் சேர்ந்திருந்தாலும்
வலதுகைக்குள்ள மரியாதை; ஏனோ
இடதுகைக்கு இல்லை தானே?!

உணவு உண்ண வலது
பூஜை செய்ய வலது
எழுதக்கூட வலது
கழுவ மட்டும் இடதா?!
யார் செய்த கணக்கிது?

வலது சாரி என்றால்
ஆதரிப்போர்
இடதுசாரி என்றால்
எதிர்ப்போரா?!
யார் வரைந்த நீதியிது?!

கைகொடுக்க வலதுகை
கால்வைக்க வலதுகால்
இப்படி
வலதுக்கே முதன்மை என்றால்
இடதென்றும் இரண்டாவதுதானா?!

அருவருப்பை நாகரிமாகக் கூற
இடக்கரடக்கல் என்போர்; ஏன்
வலக்கரடக்கல் என
வார்த்தை கூட வைக்கவில்லை?!
இலக்கியமும் வதைக்கிறதா?!

இரு கைகளால்
இறைவனை வழிபடலாம்
இரு கைகளால்
யாசகம்கூட கேட்கலாம்
ஆனால்
இடது கையால் மட்டும்
எதையும் பரிமாறக் கூடாது?
யார்செய்த நியாயம் இது?!

இணைந்தால் சரி
தனித்தால் தவறா?!
என்ன அநியாயம் இது?!

வலதுகை அடிப்பட்டால்தெரியும்
இடதுகையின் சேவை..
இடதுகை அடிபட்டால் தெரியும்
இடதுகையின் பெருமை...

இனியாவது
இடதைப் போற்றுங்கள்
இடதையும் போற்றுங்கள்....🙏

✍️செ. இராசா