தமிழ்த்தாய் வாழ்த்து
ஆதியிலே அகத்தியமாய்
அதற்கடுத்தத் தொல்காப்பியமாய்
திருவள்ளுவரின் திருக்குறளாய்
திருமூலரின் திருமந்திரமாய்
கம்பரின் காவியமாய்
கவியரசின் கவிதைகளாய்
தரணியிலே சிறந்தோங்கும்
தமிழ்த்தாய்க்கு எம் முதல் வணக்கம்
அவை வணக்கம்!








அன்னைத் தமிழ்போற்றும்
....ஆன்றோர்கள் மத்தியில்
என்னையும் ஏற்றிவிட்டீர்!
.....ஏறிவிட்டேன்- மன்னிப்பீர்!
பண்ணைத் தமிழவைமுன்
....பாடுகின்ற வாய்ப்புவந்தால்
மண்ணும் உயரோதோ
....விண்!
சபைக்கு எம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு இதோ எம் கவிதை...
விற்பனைக்கல்ல










இந்தக் கவித்தோட்டத்தில்
எல்லாவித மலர்களும் உண்டு!
ஆம்..
புதுப்புது நிறங்களில் பூக்கும்
நவீனப்பூக்களும் உண்டு!
மரபியல் மாறாமல் பூக்கும்;
வெண்பாப் பூக்களும் உண்டு!
சிறிதாய்ப் பூக்கும்
குறும்பாப் பூக்களும் உண்டு!
பெரிதாய்ப் பூக்கும்
விருத்தப்பா பூக்களும் உண்டு!
இங்கே எல்லா மலர்களும்
ஒரே மாதிரி மலர்ந்தாலும்
எல்லாமும் ஒரிடம் சேர்வதில்லையே
சில இறைவனுக்காக
சில மனிதர்களுக்காக
சில அஃறிணைகளுக்காக
சில எதற்காகவோ?!
என்னைப் பொறுத்தவரையிலும்
மலர்களுக்குள் பேதமில்லை
எல்லா மலர்களும்
அவை அவையில் தனித்துவமானதே.
ஆனால்...
அதை அனுபவிப்பர்கள்தான்
நிறை குறை பார்க்கிறார்கள்
என்ன செய்ய?!!
இந்தத் தோட்ட மலர்கள்
மரண ஊர்வலம்போனால்கூட
நான் கவலைப்படுவதில்லை
எங்கேயும் போகாமல்
இங்கேயே வாடி வதங்கும்போதுதான்
பெரிதும் கவலை கொள்கிறேன்..
இந்தத் தோட்ட மல்லிகளை
அதிகம் நேசிப்பவன் நான்தான்
அதற்காக
மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை
வெறுக்குமளவு நானொன்றும்
கல் நெஞ்சக்காரனல்ல
பூ நெஞ்சக் காரனே..
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் என்னதான்
ராப்பூ பாப்பூ என்ற
நெகிழிப் பூக்களை
இப்போது கொண்டாடினாலும்
கிராமிய மணம் கமழும்
நாட்டுப்புறப் பூக்கள்தான்
எப்போதும் வாடாதென்பதை
மறந்து விடாதீர்கள்!
இயல்பு(பூ) இல்லாமல்
வெறும் இசைப்பு(பூ) மட்டுமிருந்தால்
பயனுண்டா என்ன?
இல்லை
இரு பூக்களும் இணைந்தால்தான்
இனிதாகும் ஓர் மாலை..
இல்லையேல் அது வெறும் பீழை..
இந்தத் தோட்டத்தைச்சிலர்
இலக்கியப் பூஞ்சோலை என்பர்!
இல்லை இல்லை
இது கலோக்கியல் பாச்சோலை என்பர்சிலர்!
இன்னும் சிலரோ
இது திரையிலும் மணக்கும்
கானகக் கவிச்சோலை என்பர்!
வேறு சிலரோ
இது தனித்துவமாய் மணக்கும்
கானா ரகச்சோலை என்பர்!
நீங்கள் எப்படி வேண்டுமானாலும்
சொல்லிக்கொள்ளுங்கள்...
இது எல்லாமும் பூக்கும்
தமிழ்ச் சோலையே
தமிழ்ப்பாச் சோலையே...
இச்சோலையில் பூக்கும் பூக்களில்
எல்லாவற்றிற்கும் ஓர் விலையுண்டு!
அதே சமயத்தில்
எல்லாமும் விற்பனைக்கும் அல்ல..
ஆம்...
அவை
அவை......உங்களுக்கானவையே...
நம் மக்களுக்கானவையே...
நன்றி வணக்கம்!