28/06/2024

எதிர்பார்க்கும் இலக்கொன்றை

 

மனமே மனமே மனமே மனமே
மனமே மனமே மனமே மனமே 
 
எதிர்பார்க்கும் இலக்கொன்றை
எதிர்நோக்கும்போதே
எதிரான கருத்தாலே
ஏமாற்றம் ஆகும்!
 
எதிர்காலக் கணக்கொன்றில்
நிலையாகும்போதே
எதிர்பார்க்கும் இலக்கென்றும்
எளிதாகக் கூடும்!
 
நம்பு நம்பு... நம்பினால் உண்டு
நம்பு நம்பு... நீ முதல் நம்பு!
 
✍️செ. இராசா

26/06/2024

குடியால்வரும் நிதிவேண்டிடும்

குடியால்வரும் நிதிவேண்டிடும்
......குடியாட்சியின் கொள்கை
குடிகூட்டியே நிதிகூட்டிடும்
......கொலைபாதகக் கொள்ளை!

குடியால்வரும் படுபாதகம்
......குறையாதிடா போதும்
குடிமூடிட முடியாதென
......குடியாளுமைக் கூறும்!

குடிபாரென குடிஊற்றியே
......கொடுப்பாரவர் வாழ..
குடிபோதையில் குடியேற்றியே
.......மிதப்பாரிவர் சாக..

குடியேபிணி அதுவேசனி
........அறியாமலே வீழ்ந்தோம்
குடியாலினி வருமோர்நிதி
........இனியாயினும் வேண்டாம்!

✍️செ. இராசா

25/06/2024

ஆண்டுகள் ஓடியும்

ஆண்டுகள் ஓடியும்
....ஆயுளைத் தாண்டியும்
.......ஆனது யாது தாயே?
ஊண்மிகை உண்டதும்
....ஊழ்வினை தீர்ந்ததும்
....ஓய்ந்ததே வாழ்வு தாயே?!
மீண்டுமோர் வாழ்வென
.....மீண்டுமோர் வாழ்வினி
.......வேண்டிட மாட்டேன் தாயே!
வேண்டுவேன் ஓர்வரம்
.....வெற்றியைக் கோரியே
..........வேதனை தீரும் தாயே!

பாரதம் தாண்டியும்
....பாக்களை ஏற்றிய
.......பாவலன் யாரு தாயே?
பா-ரதம் ஓட்டியப்
.....பாரதி போயினும்
.......பாமகன் உண்டு தாயே!
மா-ரதம் வாங்கிடும்
....மாபெரும் ஆசைகள்
......வந்ததே இல்லை தாயே!
பூரதம் போலொரு
....என்னரும் செந்தமிழ்
.......என்னையும் தாங்கு(ம்) தாயே!

பற்றினை நீக்கிடப்
....பற்றினேன் உன்னையே
......பற்றிலான் ஆக்கு தாயே!
கற்றிடும் ஆசையில்
...கற்றிடக் கற்றிடக்
......கற்றிலேன் ஆனேன் தாயே!
உற்றவர் யாரென
....உற்றுநான் நோக்கையில்
......வெற்றிடம் அங்கு தாயே!
வற்றிடும் போதிலும்
.......நற்றவம் செய்கிறேன்
........ அற்புதம் செய்யு(ம்) தாயே!

✍️செ. இராசா

23/06/2024

சிறுசிறு பிரச்சினையை

சிறுசிறு பிரச்சினையை
...சிந்தனையில் ஏற்றாமல்
......சீக்கிரமே ஏறி வருவாய்!

சிறுமதி படைத்தோரை
...எள்ளளவும் எண்ணாமல்
.‌.....தீர்க்கமுற ஓர்ந்து தெளிவாய்!

மறுமுறை விழுந்தாலும்
...நம்பிக்கை வீழாமல்
.....நாயகனாய் மீண்டும் எழுவாய்!

பெறுமதி குறையுமெனில்
...பேரளவில் பேசாமல்
......பின்வாங்கி முன்னர் விரைவாய்!

✍️செ. இராசா


அமைதி

பெண் பார்க்கும் படலத்தில்
அமைதி என்றால்
சம்மதம் என்று அர்த்தம்!

போர்புரியும் தருணத்தில்
அமைதி என்றால்
சமாதானம் என்று அர்த்தம்!

ஆர்ப்பரிக்கும் அலைகள்
ஆழ்கடலில் அமைதியுறும்!
ஆர்ப்பரிக்கும் தலைகள்
ஆடி முடிந்தால் அடங்கிவிடும்!

வெந்த பூரியில்
சப்தம் வருவதில்லை; அஃதே
அமைதிப் பூங்காவில்
இரைச்சல் இருப்பதில்லை....

இருளின் அமைதியை
ஒளி கிழிக்க லாம்
ஆனால் காயப்படுத்துமா என்ன?

உலக அமைதிதான்
ஐநாவின் இலக்கு;
ஆனால் பாவம்
அமைதிதான் அங்கே
விதி விலக்கு!

உலக அமைதிதான்
மகரிஷியின் இலக்கும்
ஆனால்
தனிமனித அமைதியே
அதற்கான விளக்கு!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் !

கண்மூடி இருப்பவரெல்லாம்
அமைதியாய் இருப்பதாய் அர்த்தமில்லை...
அவர்கள் மனத்திரைக்குள்
ஆயிரம் படம் ஓடலாம்...

அஃதே
கண்திறந்து இருப்பவரெல்லாம்
விழிப்பு நிலையில் இருப்பதாகவும்
அர்த்தமில்லை
சில பள்ளி மாணவர்கள்போல்
விழித்தும் உறங்கலாம்!

அமைதி என்பது
புலன் சார்ந்ததோ
இடம் சார்ந்ததோ அல்ல
அது; முற்றிலும்
அகம் சார்ந்ததே..!!

ஆம்...
அகம் திறந்தால்
சமாதிநிலை ஆகும்
அகம் கொதித்தால்...?
சமாதியே நிலையாகும்!

அமைதி! அமைதி!! அமைதி!!!

✍️செ. இராசா

20/06/2024

கள்ளக்குறிச்சி

 


கள்ளக்குறிச்சி
கள்ளுக் குறிச்சியானதாம்; ஆமாம்
கள்ளக்குறிச்சி மட்டுமா ஆனது?
இது ஏதோ
திடீரென்று நடந்ததாய்
தீர்வுரை எழுதி விடாதீர்?
எப்போதும் நடக்கிறது
இப்போது தெரிகிறது
அவ்வளவே...
 
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு ஆட்சி; ஆனால்
எல்லா முறையும் ஒரே காட்சி....
ஆமாம்...
இதற்கு யார் காரணம்?
குடித்த நபர்களா; இல்லை
கொடுத்த நபர்களா?!
கண்டுகொள்ளா காவல்துறையா? இல்லை
காட்சிபடுத்தா ஊடகத்துறையா?
நாடகம்போடும் அரசாங்கமா? இல்லை
வேடம்போடும் எதிர்க்கட்சிகளா?
 
ஒன்றைக் கூறுங்கள்?
நாட்டுச்சாராயம் தவறென்றால்: தமிழ்
நாட்டுச்சாராயம் (TASMAC) சரியா?
அந்தச் சாராயத்தில் மரணமென்றால்
இந்தச் சாராயத்தில் இல்லையா?!
ஒருவேளை..
இந்தச் சாராயம் விலை குறைந்திருந்தால்
அந்தச் சாராயம் வந்திருக்காதோ?!
 
ஆமாம்....
எது நல்ல சாராயம்?
அரசாங்கமே விற்கும் சாராயமா?
ஆனாலும்;
திருட்டு மாங்காய்க்கே
மவுசு அதிகம்போல;
அட..
சும்மாவா
செத்தாலும் பத்துலெட்சமாம்...!!!
அப்புறமென்ன?
 
ம்ம்... சொல்லுங்க...
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
சாராயத்தை ஓழித்தே தீருவோம்!
 
✍️செ. இராசா
#TASMAC: Tamil Nadu State Marketing Corporation Limited

19/06/2024

கொட்டாத கொட்டடி கொட்டி

 


கொட்டாத கொட்டடி கொட்டி
தட்டாத தாளமுந் தட்டி
எட்டாத மேடையும் எட்டி
..............வெற்றியத் தட்டு...டும் டும்!

காக்கின்ற தெய்வம் போற்றி
வார்க்கின்ற ஆசான் போற்றி
பார்க்கின்ற பெற்றோர் போற்றி
............சொல்லிடு போற்றி...டும் டும்!

ஐம்பூதம் எல்லாம் போற்றி
அறவேதம் எல்லாம் போற்றி
தமிழ்நாதம் எல்லாம் போற்றி
..........சொல்லிடு போற்றி...டும் டும்!

எளியோரும் வாழ்ந்திட வேண்டி
வலியோராய் மாறிட வேண்டி
மொழிவோமே கொட்டடி கொட்டி
.......கொட்டடி கொட்டி...டும் டும்
.......கொட்டடி கொட்டி...டும் டும்
.......கொட்டடி கொட்டி....டும் டும்.

✍️செ.‌இராசா

18/06/2024

மதராஸ் வெண்பா



அவகோடோ ஜூஸைப்போல்
.....அம்சமா கீற
அவதான்டா என்னோட
.....ஆளு- மவனே
அவளாட்டம் யாராச்சும்
.....ஆக்டேதும் செஞ்ச
அவளோதான் விட்டுவிடும்
......அள்ளு!

✍️செ. இராசா

பிரைட்டக்_கூட்டுனா நீ ஃபிகராத் தெரியுற

 தொகையறா
சொம்மா பார்க்க சொல்ல
சொமாராத்தான் கீறா.. ஆனால்
டீபி ஸ்டேடஸ் குள்ள
என்னாமா....வாறா

ப்ரைட்டோ... டார்க்கோ..
ஹைட்டோ...சார்டோ...
என் பியூட்சர் சகிநீ
என் வதைநீ...
இல்லை தேவதைநீ
ஆ..ஆ...ஆங்...
 

பல்லவி 

பிரைட்டக் கூட்டுனா நீ ஃபிகராத் தெரியுற
டார்க் மோடுல செம்ம மாசு காட்டுற
ஸ்டேடஸ் மாத்தியே என் பீப்பி ஏத்துற
ஹார்ட்டு பீட்டுல லவ் சாங்கு பாடுற

வாவ் வாவ் வாவ் அந்தப் பிரம்மன் எங்கடி?
வா வா வா அவன் காலைக் காட்டடி...

யோவ் யோவ் யோவ் நீ பெரிய ஆளுய்யா
நோ நோ நோ நீ அதுக்கும் மேலய்யா
 

சரணம் 1
உன்னை பார்க்கசொல்ல பத்திக்கும் ஃபயரு
கிட்ட நெருங்கிவந்தா ஸ்பீடாகும் கியரு
லிப்ஸ்டிக் இல்லாத அட்ராக்டிவ் லிப்சு
தாறு மாறாச்சு என்னோட பல்சு

ஐஸில் நீபேசும் டிகோடிங் வேர்ட்சு
ஐப்ரோ சிறகாடும் அழகான பேர்ட்ஸ்
கையால் நீசுத்தும் உன்கர்லிங் ஹேர்சு..
ஐயோ... அதுதாண்டி உசுப்பேத்தும் வாட்சு...
வா சகியே வா...என் வாசகியா வா
தீ யெனவே வா...என் தேவதையா வா

(வாவ் வாவ் வாவ்)
 

சரணம் 2
முன்னே போகசொல்ல உன்னோட ஃபிகரு
சுண்டி இழுக்குதடி...என்னாடி பவரு?!
கண்ணை மூடசொல்ல அப்போதுன் நினைப்பு
என்னைக் கெடுக்குதடி... என்னாகும் பொழப்பு?

சம்மர் ஹாட்டெல்லாம் ஹாட்டாடி யம்மா...
எம்மாம் ஹாட்டெல்லாம் ஓமுன்னே சொம்மா..
லிக்கர் கிக்வேணாம் நீபோதும் மைமா
சிக்சர் தூள்பறக்கும் என்னோட வாமா!

வா சகியே வா...என் வாசகியா வா
தீ யெனவே வா...என் தேவதையா வா

(வாவ் வாவ் வாவ்)

✍️செ. இராசா


17/06/2024

எண்ணியது கிட்டும் இயங்கு!

  


நேரிசை வெண்பா
என்னதான் செய்தாலும்
......ஏதுமிங்கே ஆவதில்லை
என்னதான் செய்யயினி?!
......என்பவர்கள்- புன்னகைத்தே
என்னதான் இன்னுமென
......என்றும் நடைபோட்டால்
எண்ணியது கிட்டும்
......இயங்கு!

✍️செ. இராசா

நீண்ட நாட்கள் இல்லை இல்லை பல வருடங்களுக்குப்பிறகு எம் கோரிக்கையை நிறைவேற்றிய இறைவனுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றி🙏

S

16/06/2024

 


வெற்றிக்கொடி கட்டிப் பறந்திட
முற்றும்இடர் விட்டுத் துறந்திட
கற்றுக்கொடு பற்றில் விடுபட வடிவேலா....

குற்றம்குறை இல்லா தொழிந்திட
சுற்றம்நிறை என்றே முழங்கிட
நிற்கும்படி எம்மை நடத்திடு வடிவேலா‌....

இன்னல்இனி இல்லை எனும்படி
இன்பச்சுடர் எங்கும் படர்ந்திட
அன்பில்;அருள் ஐயா வழங்கிட வருவாயோ..

செல்லும்:இடம் எங்கும் சிறந்திட
வெல்லும்:ஒலி எங்கும் இசைந்திட
நல்லோர்வழி சென்றே கடந்திட
அருள்வாயோ...

✍️செ. இராசா

10/06/2024

மனம் படும்பாடு


இன்னிசைக் கலிவெண்பா

இருக்கிற ஒன்றை எளிதாய்க் கருதும்
இருப்பது போனால் இழந்ததை எண்ணும்
வருகிற தென்றால் மகிழ்ந்து மலரும்
வருவது நின்றால் வருந்தித் திரியும்

ஒருஇடம் விட்டே ஒருஇடம் தாவும்
ஒருஇடம் நின்றே உறங்க மறுக்கும்
விரும்பிடும் ஒன்றை வெறுத்திட வைக்கும்
திரும்பவும் வந்தே திரும்பவும் தீண்டும்

கரும்பையும் கூடக் கசந்திட வைக்கும்
இரும்பையும் கூட இலகுவாய் எண்ணும்
அருமை எனவே அருகினில் செல்லும்
எருமை எனவே இகழவும் செய்யும்

பெருமை மிகவே பிறவுயிர் போற்றும்
உரிமை மிகவே உணவென உண்ணும்
இருமை அறிய இறையினை நாடி
ஒருமையில் போகும் உளம்!

✍️செ. இராசா

09/06/2024

 

மூன்றாம் முறையாக முன்னேறி வந்தவர்க்கு
மாண்புடன் யாம்கூறும் வாழ்த்து!

03/06/2024

எங்கே தேடுவேன்?- இறைவனை

எங்கே தேடுவேன்?- இறைவனை
எங்கே தேடுவேன்?!

சின்ன வயதில்
அன்னை சொன்ன
கண்ணைக் குத்தும் சாமி எங்கே?!
சிந்தை உயர
தந்தை சொன்ன
நம்மைக் காக்கும் சாமி எங்கே?!

கல்லில் உண்டா?
சொல்லில் உண்டா?
உள்ளதெங்கே தேடுகின்றேன்....
விண்ணில் உண்டா?
மண்ணில் உண்டா?
உண்மைதேடி ஓடுகின்றேன்...

எங்கே தேடுவேன்?- இறைவனை
எங்கே தேடுவேன்?!

இருக்குன்னு சொன்னா ஆத்திகம்
இல்லைன்னு சொன்னா நாத்திகம்
இருக்கு இல்லை
இல்லை இருக்கு
இப்படிப் புலம்புனா பைத்தியம்

எங்கே தேடுவேன்?- இறைவனை
எங்கே தேடுவேன்?!

கண்ணை மூடி
தன்னுள் ஓடி
கண்டு கொள்ள வேண்டும் என்றே
நன்றே கூறி
அன்றே ஓதி
சென்ற கோடி சித்தர்கள் உண்டே..

மார்க்கம் காட்டி
மாற்றம் காட்டி
வாழ்ந்தும் காட்டிய மாந்தர் என்றே
போற்றிப் பாடி
பூக்கள் தூவி
வாழ்த்தும் கோடி சீடரும் உண்டே...

இருந்தும்...
எங்கே தேடுவேன்?- இறைவனை
எங்கே தேடுவேன்?!

உருவத்தில் காணும் ஒருமதம்
அருவத்தில் காணும் மறுமதம்
உருவமா அருவமா
அருவுரு வடிவமா
எவ்வுரு வாயினும் சம்மதம்....

எங்கே தேடுவேன்?- இறைவனை
எங்கே தேடுவேன்?!

✍️செ. இராசா

01/06/2024

முத்தமிழ் வேந்தர்க்கெம் வாழ்த்து

 

வெண்டளையில் பேசென்று
........வேண்டுகின்ற பாவலரை
கண்டதில்லை என்றாலும்
.......கண்டுகொண்டேன்- தண்டமிழால்
அத்தனை பேர்களையும்
.......அன்புடன் சேர்த்துவைத்த
முத்தமிழ் வேந்தர்க்கெம்
........வாழ்த்து!
 
✍️செ‌ இராசா