இன்னிசைக் கலிவெண்பா
இருக்கிற ஒன்றை எளிதாய்க் கருதும்
இருப்பது போனால் இழந்ததை எண்ணும்
வருகிற தென்றால் மகிழ்ந்து மலரும்
வருவது நின்றால் வருந்தித் திரியும்
ஒருஇடம் விட்டே ஒருஇடம் தாவும்
ஒருஇடம் நின்றே உறங்க மறுக்கும்
விரும்பிடும் ஒன்றை வெறுத்திட வைக்கும்
திரும்பவும் வந்தே திரும்பவும் தீண்டும்
கரும்பையும் கூடக் கசந்திட வைக்கும்
இரும்பையும் கூட இலகுவாய் எண்ணும்
அருமை எனவே அருகினில் செல்லும்
எருமை எனவே இகழவும் செய்யும்
பெருமை மிகவே பிறவுயிர் போற்றும்
உரிமை மிகவே உணவென உண்ணும்
இருமை அறிய இறையினை நாடி
ஒருமையில் போகும் உளம்!

No comments:
Post a Comment