07/05/2022

இலக்கியம் ஆய்வோம் – 7 (பெரிய புராணம்)

  


இதுவரையிலும் நாம் பார்த்த நாயன்மார்கள்வேறு. இனிமேல் நாம் பார்க்கப்போகும் நாயன்மார்கள்வேறு. உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்து இலக்கியம் படைத்த சேக்கிழாருக்கு முதலில் நன்றிகூறிக்கொண்டு இப்பதிவைத் தொடர்கிறேன். இங்கே இவர்கள் செய்த செயல் சரியா தவறா என்பதை ஆராய்ந்து பார்க்குங்கால் இவர்களெல்லாம் எப்படி நாயன்மார்கள் ஆனார்கள் என்னும் சந்தேகம் அனைவருக்கும் எழுவது தவிர்க்கமுடியாததே. இருப்பினும் அனைத்தையும் பகுத்தறிந்து மெய்யுணர்வோடு இப்பதிவை அணுக வேண்டுகிறேன்.

5.1. #எறிபத்த_நாயனார்

ஏற்கனவே கூறியபடி இவர் கதையும் #புகழ்சோழர் என்னும் நாயன்மார் கதையும் ஒரே நிகழ்வை அடிப்படையாகக் கொண்டவையே.
மீண்டும் பதிவிடுகிறேன்.....

சிவபூசைக்குரிய பூக்களைப் புகழ்ச்சோழரின் யானை தட்டிவிட்டதுகண்டு கோபம் கொண்ட எறிபத்த நாயனார் அந்த யானையையும் எதிர்த்துவந்த நான்கு பாகன்களையும் வெட்டி வீழ்த்தினார். இதைக் கேள்விப்பட்ட சோழன் மிகவும் மனம் நொந்து தானே பொறுப்பேற்று தன் கழுத்தை வெட்டிக் கொள்ளப் பாய்ந்தான். அப்போது எறிபத்த நாயனாரோ "நானே. தவறிழைத்தேன் என்னைக் கொல்லுங்கள்" என்றார். அப்போது சிவனின் அசரீரியில் அவன் திருவிளையாடல் இஃதென்று விளக்கப்பட்டு யானையும் பாகன்களும் நலமோடு திரும்பினர் என்பது வரலாறு.

பூக்கள் கீழே விழுந்ததற்காக நான்கு பாகன்களையும் யானையையும் கொல்லும் அளவு கோபம் கொண்ட ஒரு நபர் எப்படி நாயன்மாராக முடியும் என்னும் கேள்வி எழாமல் இல்லை.உயிர்ப் பெற்று வந்தது என்பதெல்லாம் ஒருவகை சமாதானமாக இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. எது எப்படியோ கதை இதுதான்.

5.2 #செருத்துணை_நாயனார்

இவரும் பூ சம்பந்தமான நிகழ்வில்தான் கோபம் கொள்கிறார். ஒருநாள் ஆலயத்தில், பூஜைக்கு சாத்தவேண்டியே பூ ஒன்று கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கே வந்த அரசியார் ஒருவர் அப்பூவை மோந்து பார்த்துள்ளார். அதைக் கண்ட நாயனார் ஆத்திரத்தில் அரசியாரின் மூக்கை அறுத்துள்ளார். (என்னங்க இது?!)

5.3 #கழற்சிங்கர்.

அட....செருத்துணை நாயனார் மூக்கை அறுத்தாரில்லையா. அப்போது அங்கே ஓடிவந்த அந்த அரசியின் கணவரான கழற்சிங்கர் என்ன செய்தார் தெரியுமா?... நீ என்ன ஆளய்யா மூக்கை அறுத்துள்ளாய்?! கையால் எடுத்துதானே..அரசி மூக்கை மோந்தாள். எனில் நீ கையைத்தானே முதலில் வெட்ட வேண்டுமென்று அரசியின் கையை வெட்டியுள்ளார். (அதானே....)
அட..ஆமாங்க....இவரும் நாயன்மார்தான்.

5.4 #கலிக்கம்ப_நாயனார்

ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் கன்னிபூஜை அல்லது பஜனை போடும்போது பாதபூஜை செய்வார்கள் இல்லையா?! அதேபோல் சிவனடியார்களுக்குப் பாத பூஜை செய்திருக்கிறார் நம்ம கலிக்கம்பர். அப்போது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்றியுள்ளார் அவர் மனைவி. ஒவ்வொருத்தராக ஊற்றிக்கொண்டே வரும்போது ஒருவரின் காலில்மட்டும் ஊற்றச் சற்றேத் தயங்கிள்ளார் அவரின் மனைவியார். காரணம் வேறொன்றுமில்லை, அந்த சிவனடியார் ஆரம்ப காலத்தில் இவர்கள் வீட்டில் வேலைபார்த்த ஆள்தான். அதனால்தான். இவரா அவரென்று யோசித்துள்ளார். இதைக்கவனித்த நம்ம கலிக்கம்பர் என்ன செய்தார் தெரியுமா? தண்ணீர் ஊற்ற யோசித்த மனைவியின் கையை ஒரே வெட்டு.... அவ்வளவுதான்.

No comments: