24/05/2022

கடலைவிடப் பெரிசுங்க....

 





கடல் அன்னையை வாழ்த்தி மீனவர்கள் பாடுவதுபோல் ஒரு பாடல் எழுதி, அதை நானே பாடியும் இருந்தேன். அது நம் இலங்கை சுதாகரன் அண்ணா இசையில் மிகவும் சிறப்பான முறையில் மெருகேற்றம்பெற்று நேற்று கையில் கிடைத்தது. அதற்கான காணொளி தயாரிப்பில் இறங்கியபோது நானும் நண்பர் மற்றும் பொறியாளருமான விஜியும் சேர்ந்து முதலில் அல்கோர் கடற்கரைபோய் மீனவர்களைத் தேடினோம். இன்று மணல்புயல் இருந்ததால் யாரும் மீன் பிடிக்கப்போகவில்லை என்பதால் அங்கே யாருமே இல்லை.
 
சரியென்று தோகா கடற்கரை சென்றபோது அங்கே இருந்த சில நம்மவூர் (கடலூர்) மீனவர்களை சந்தித்து பாடலைப்பற்றி விளக்கி காணொளிகள் இருந்தால் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். மாலை வீட்டிற்கு வாருங்கள் என்று கூறிவிட்டு தங்களிடம் இருந்த மீன்களையெல்லாம் அப்படியே அள்ளிக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் என்னங்க உறவு? நம் தாய்மொழியைத் தவிர....
 
அன்பையும் மீனையும் அள்ளிக் கொடுக்கும் அந்த மனதே....மீண்டும் அவர்களைப்பார்க்க மாலையில் எங்களை உந்தியது.
ஒரு சிறிய அறையில் எட்டுக்கும் மேற்பட்டவர்கள் வெளியே சமைத்தபடி உள்ளே புன்முறுவலோடு வாங்க...வாங்க....என்று வரவேற்றார்கள். பாடலை போட்டுக்காட்டினோம். சில காணொளிகள் மட்டும் இருந்தது. அனைத்தையும் டெலிட் செய்துவிட்டார்களாம். எப்படியாவது ஊரிலிருந்தாவது மற்றவைகளை அனுப்பி வைப்பதாகச் சொன்னார்கள்.
 
வெளியே அழைத்துச் சென்று ஒரு பெங்காளி உணவகத்தில் தேனீர் அருந்தினோம். அப்போது குமார் அண்ணன் மிகச் சுருக்கமாக நிறைய தகவல்களைப் பகிர்ந்தார்கள்.
 
அதாவது, அவர் கத்தார் வந்து 22 வருடங்கள் ஆகிறதாம். அந்த குட்டிப் படகில் நான்கு மீனவர்களும் இரண்டு அல்லது ஒரு கத்தாரி முதலாளியுமாக மீன் பிடிக்கச் செல்வார்களாம்.
 
குமார் அண்ணாதான் கேப்டனாம். தன் இரண்டாவது பையன் சேது போன வருடம்தான் ஊரில் இருந்து வந்தானாம். அவனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்க வேண்டுமென்பதற்காக நீச்சலேதும் கற்றுக்கொடுக்காமல் வளர்த்தாராம். மீன் குஞ்சுக்கு கற்றாக் கொடுக்க வேண்டும். அவன் நீச்சலில் மிகவும் சாதனையே படைத்துள்ளானாம். அவனும் அப்பாவுக்குத் துணையாக கத்தாருக்கு வந்துவிட்டான். அந்த அறையில் உள்ளவர்களில் எந்தக் கெட்ட பழக்கங்களும் அவருக்கு மட்டும் இல்லையென்று சொன்னார். அதாவது பாக்கு, தண்ணி மட்டுமில்லை பபுள்கம்கூட மெல்ல மாட்டாராம். (இன்றுதான் பபுள்கம் மெல்லுவதும் கெட்ட பழக்கம் என்று அறிந்து கொண்டேன்).
 
இந்தச் சிறு படகில், அனுமதியுடன் பக்ரைன் போய் வந்துள்ளார்கள். சவுதி துபாய் பார்டரெல்லாம் போய் அங்கிருந்து வேகமாய் ஓடியும் வந்துள்ளார்கள். ஏன் கத்தாரி உங்களிடம் வருகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் ஆச்சரியம் அளித்தது. நான்கு வருடங்களுக்கு முன்புவரை கத்தாரி இல்லாமல்தான் போய் வந்துள்ளார்கள். ஒருசமயம் ஈரான் நாட்டைச் சேர்ந்த சிலர், நம் தமிழக மீனவரோடு பயணிக்கையில், நம்மவர் கழுத்தில் கத்தி வைத்து, கட்டிப்போட்டுவிட்டு ஈரான் போய் இறங்கியபின், ஜிபிஸ் கருவியையெல்லாம் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்களாம். நம்ம ஆள், அங்கிருந்து மீண்டும் திரும்ப நினைத்தால், பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் தத்தளித்து, எப்படியோ வேறு ஒரு படகு மூலம் தகவல் அனுப்பி பின் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்பின்தான் சட்டம் மாறியுள்ளது. ப்பா.. எவ்வளவு பெரிய நிகழ்வை எவ்வளவு சுருக்கமாச் சொல்லிவிட்டார். 
 
நேற்றுவரை யாரென்றே தெரியாத அந்த மீனவ நண்பர்களின் அந்த மெய்யன்பில் மணக்கும் பேரன்பு இருக்கிறதே...அது கடலைவிடப் பெரிசுங்க....
 
✍️செ. இராசா

No comments: