07/05/2022

இலக்கியம் ஆய்வோம் – 10 (பெரிய புராணம்)

 


#மற்ற_நாயன்மார்கள்_9

7. ஏறக்குறைய தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம்‌. இதுவரையிலும் யாம் வகைப்படுத்தியவர்கள் எல்லாம் ஏதோ ஒரு பிரிவின்கீழ் வந்துவிட்டார்கள். இதில் விடுபட்ட மற்றவர்களை எந்தப் பிரிவில் அடுக்குவதென்றே தெரியவில்லை. காரணம், இவர்களில் சிலர் கதைகளை ஏற்க முடியாமல் இருப்பதாலும் அல்லது நம்ப முடியாமல் இருப்பதாலும்தான். அதனால்தான் மற்ற நாயன்மார்கள் என்றே தலைப்பிட்டுள்ளேன். சரி... அவர்களைப்பற்றிச் சுருக்கமாக இங்கே பார்ப்போமா...வாருங்கள்.

7.1 #காரைக்கால்_அம்மையார்

கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாம்பழங்களில் ஒன்றைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டார் இந்த அம்மையார். இதையறியாமல் வீட்டிற்கு வந்த கணவனோ இரண்டாம் பழத்தைச் சுவைத்துவிட்டு மீண்டும் ஒரு மாம்பழம் கேட்கவே, என்ன செய்வதென்று தெரியாமல் ஈசனிடம் வேண்டியுள்ளார் அம்மையார். அப்போது அவன் அருளால் மாம்பழம் கிடைக்க, அதையே பரிமாறியுள்ளார். அதையுண்ட கணவன், அதன் சுவை மிகவும் அருமையாக இருப்பதென் காரணம் வினவ, அவள் நடந்ததைக் கூறியுள்ளார். அதை நம்ப மறுத்த கணவன், மீண்டும் இறைவனிடம் மாம்பழம் கேட்க பணித்துள்ளார். அப்படியே அவரும் மாம்பழம் பெறவே, இவள் தெய்வப்பெண்ணோ என்று பயந்து இவரைவிட்டே விடைபெற்றுள்ளார்.

மீண்டுமோர் மணம் முடித்துத் திரும்பிவந்த அவர், தன் புதிய குடும்பத்தோடுவந்து அவரைத் தெய்வமாகவே நினைந்து வணங்கியுள்ளார். தாங்கமுடியாத அம்மையார் பேயாய் வடிவுபெற்று தரையில் காலூன்றாமல் தலைகீழாய் நடந்து கயிலாயம் சென்று சிவனின் தாயாய் அமரும் பாக்கியம் பெற்றுள்ளார்.
(காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளது)

7.2 #திருநாளைப்போவார்

நந்தனார் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தில்லை நடராஜரை நாளை பார்க்கப் போகிறேன் என்று எப்போதும் சொன்னதால் திருநாளைப்போவார் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டுள்ளார். சேரியில் பிறந்த இவர் கோவிலுக்குள் செல்ல அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை‌. ஒருநாள் திருப்புன்கூரில் வழிபடச் சென்றபோது நந்தி மறைத்ததை எண்ணி அதை விலகுமாறு வழிபடவே, நந்தியும் விலகியுள்ளது.

அதேபோல் தில்லைக்குப் போகும் எண்ணம் ஈடேறும் வகையில் தில்லைவாழ் அந்தணரின் கனவில் சிவனே தோன்றி, நெருப்பை மூட்டுங்கள் அதில் இவர் குளித்துவருவார் என்று கூறியுள்ளார். இவரும் நெருப்பில் குளித்தபின் அந்தணராக வெளிவந்தாராம். (சாதியத்தின் உச்சபட்சப் பதிவு இது)

7.3 #கழற்றிவார்

தில்லை நடராஜருக்காக சிவபூசையில் அடிக்கும் மணியோசை இவர் காதில் எங்கிருந்தாலும் கேட்கும் பேறு பெற்றவராம்.

7.4 #கூற்றுவர்

பாண்டிய மன்னனான இவர், தன்மணிமுடி சூடும் நிகழ்வில் தில்லைவாழ் அந்தணர்களை சூடும் உரிமை வழங்குவதாக அழைக்கவே அவர்கள் சோழரைத்தவிர யாருக்கும் செய்ய மாட்டோம் என்று மறுத்துள்ளார்கள். அவர் மனம் நோகாமல் நடராஜர் திருவடிகளையே தன் முடியாகத் தலையில் சூடினாராம்‌.

7.5 #தண்டியடிகள்

குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டபோது, இவரின் கண் தெரியாத குறையைச் சுட்டிக்காட்டிய சமணர்களின்முன் சவால்விட்டு சிவனை வணங்கி கண்பார்வை பெற்றாராம். அதே சமயம் சமணர்கள் கண்பார்வை இழந்தனராம்.

7.6 #நமிநந்தியடிகள்

விளக்கெரிக்க சமணர்கள் எண்ணெய் தராமையால் தண்ணீராலேயே எரித்தாராம். ஒருமுறை திருவாரூரில் கோவில்உலா சென்றபோது அனைத்து சாதியினரும் வந்தமையால், மனைவிடம் நீராட நீர் கேட்டாராம். அப்போது அவர் சிறிது கண்ணயர்ந்த சமயம் இறைவன் வந்து திருவாரில் பிறந்தவர்கள் யாவருக்கும் தீட்டில்லை என்றதும் மனம் மகிழ்ந்தாராம்.

7.7. #நரசிங்க_முனையர்
நிர்வாண நிலையில் காமக்குறி விரைந்த நிலையில் வந்தபோதும் திருநீறணிந்த காரணத்தால் அடியாரை வணங்கியவர்

7.8 #முனையடுவார்_நாயனார்
போர்த்தொழில் செய்து பொருளீட்டி அடியார்களுக்குக் கொடுத்தவர்

7.9 #மூர்க்க_நாயனார்
சூதாடி பொருளீட்டி அடியார்களுக்குக் கொடுத்தவர்

#முடிவுரை:

இதுவரையிலும் நாம் பார்த்த நாயன்மார்களின் கதையில் இருந்து எந்த நாயன்மார்கள் உண்மையில் போற்றப்பட வேண்டியவர்கள், எந்த நாயன்மார்கள் ஆயப்பட வேண்டியவர்கள் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள வைத்த இறையருளுக்கு நன்றிகூறி இறைவனுக்கே இத்தொகுப்பைச் சமர்ப்பணம் செய்து விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம் Description: 🙏Description: 💐Description: 🙏

No comments: