07/05/2022

இலக்கியம் ஆய்வோம் – 6 (பெரிய புராணம்)

 


4 #சிறப்பு_மிகுந்த_நாயன்மார்கள்_7

அது என்ன சிறப்பு மிகுந்த நாயன்மார்கள்? எனில் மற்றவர்களுக்கு சிறப்பில்லயா என்ன?
இருக்கிறது. ஆனால் இவர்கள் பக்திப் பரவசத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் சிவன்மேல் அல்லது சிவனடியார்மேல் அன்பு செய்த நாயன்மார்கள். அவர்களைப்பற்றி இங்கே ஒவ்வொருவராகப் பார்ப்போமா?! வாங்க போகலாம்.

4.1. #கண்ணப்ப_நாயனார்

உண்மையில் இவர்தான் முதலில் 63 நாயன்மார்களில் முதன்முதலாக கூறப்பட வேண்டியவர். காரணம், மலைமேல் இருக்கும் சிவனை அறிந்து, அவரைக்காண வேண்டுமென்று பேராவல்கொண்டு சைவக் கடவுளான சிவனுக்கு தன் இரு கைகளாலும் பன்றிக்கறியைப் பற்றிக்கொண்டு, அபிசேகம் செய்ய தன் வாயில் நீரேற்றிக்கொண்டு, சாமிக்கு பூபோட தன் தலைமயிற்றில் சொருகிக்கொண்டு தொடர்ந்து ஏழு நாட்கள் பூஜை செய்தார். ஏழாம் நாளில் சிவன் கண்ணில் இரத்தம் வந்தபோது தன் ஒரு கண்ணைப் பிடுங்கி வைத்தார். பின் மீண்டும் மற்றொரு கண்ணிலும் வடிந்தபோது கொஞ்சமும் யோசிக்காமல், அடையாளத்திற்காக தன் செருப்பணிந்த காலை சிவன் கண்ணருகே வைத்து, தன் கண்ணைக் குத்தப்போனார். அப்போது சிவன் தடுத்தாண்டு அருள் புரிந்ததாகக் கூறப்படுகிறது. நானும் இத்தனை நாயன்மார்களில் இவரைப்பற்றித்தான் சற்றே நீளமான பதிவு போட்டுள்ளேன். காரணம், இவர் பக்தி அளவிடமுடியாதது.

4.2. #அமர்நீதி_நாயனார்

ஒரு கோமணத்தைக் கொடுத்து துவைத்துத் தரச் சொன்ன சிவனடியாருக்குக் குறித்த நேரத்தில் அந்தக் கோமணத்தைக் கொடுக்க முடியாமல் போக, அதேபோன்ற வேறு ஒரு கோமணத்துக்கு நிறையாக தன் மனைவி, மக்கள், சொத்துபத்தென அல்லாமல் தன்னையும் தந்தவர்.

4.3 #கணம்புல்லர்

ஊரைவிட்டு நீங்கி தம் வீடு முதலான செல்வங்களையெல்லாம் விற்று தில்லை நடராஜர் கோவிலில் விளக்கேற்றி வந்தார். புல்லை அறுத்து அதை விற்றும் விளக்கேற்றினார். ஒருநாள் புல் விலைபோகவில்லை, இறுதியில் அப்புல்லையே திரியாக்கி விளக்கேறினார். அதுவும் இல்லாமல்போக தன் முடியை அறுத்து விளக்கேற்றினார்.

4.4. #கலியநாயனார்

இவரும் விளக்கெரித்தவர்தான். இவருக்கும் எண்ணெய் இல்லாமல் போகவே தன்னையே அரிந்து இரத்தத்தைவிட்டு விளக்கெரித்தவர்.

4.5 #குங்கிலியக_நாயனார்

பூஜைக்கு சாம்பிராணி தூபம் போட காசில்லாமல் மனைவியின் தாலியை விற்று தூபம் போட்டுள்ளார். யாராலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கம் இவர் தொட்டதும் நிமிர்ந்துள்ளது.

4.6. #திருநீலகண்டர்

சிற்றின்பத்தில் பலவீனமாக இருந்த இவர், தன் மனைவியைத் தீண்டச் சென்றபோது அவரிட்ட ஆணையை ஏற்று இறுதிவரைத் தொடாமல் வாழ்ந்தார்‌. இது யாருக்கும் வெளியே தெரியாமல் இருந்தது. சிவன் ஒரு திருவிளையாடல் புரிந்து குளத்தில் கைப்பிடித்து மூழ்கியெழும் சூழ்நிலையை உருவாக்கியபோதும் அவர்கள் இருவரும் ஒரு குச்சியின் இருபக்கமும் பிடித்து மூழ்கியெழுந்தனர். அப்போது இருவரும் முதுமையில் இருந்து மீண்டும் இளமையானதாகக் கூறப்படுகிறது.

4.7. #திருநீலநக்க_நாயனார்

சிவலிங்கம் மேல் ஊர்ந்த சிலந்தியை வாயால் ஊதித்தள்ளினார் என்னும் ஒரே காரணத்திற்காக தன் மனைவியைக் கடி,ந்துகொண்டு தள்ளி வைத்துள்ளார். பின் சிவனே கனவில் வந்து ஏற்றுக்கொள்ளக் கூறியதும் மீண்டும் ஏற்றுள்ளார்.

No comments: