#பச்சை
இக்கரைக்கு அக்கரை பச்சையென்றால்
இதில் பச்சையென்பது
வளத்தைக் குறிக்கும்!
அவர் சொல்வது பச்சைப் பொய்யென்றால்
அதில் பச்சையென்பது
அளவைக் குறிக்கும்!
இவர் பச்சையாய்ப் பேசுகிறார் என்றால்
இங்கே பச்சையென்பது
கெட்ட வார்த்தையாகும்!
பாவம் பச்சைப்புள்ளை என்றால்
அங்கே பச்சையென்பது
பிஞ்சுக் குழந்தையாகும்!
அதுவே...
பச்சையமுள்ள இலையென்றால்
நிறமியைக் குறிக்கும்!
பச்சைக் கொடியென்றால்
இனத்தைக் குறிக்கும்!
பச்சை விளக்கென்றால்
சமிக்ஞையாகும்!
பச்சை மையென்றால்
அதிகாரமாகும்!
எனில்....
இந்த பச்சைக்குத்தான்
எத்தனைக் குறியீடுகள்?
எத்தனை மதிப்பீடுகள்?
எத்தனை அலங்காரங்கள்?
எத்தனை அடையாளங்கள்?
எதனால் இப்படி?
ஓ...
புவிக் காகிதம் மேல்
மழைத் தூரிகை வரைந்த ஓவியத்தில்
உயிர்ப்புடன் ஒளிர்வது
பச்சை நிறம் என்பதாலா?
செ. இராசா
No comments:
Post a Comment