ஒவ்வொரு கணமும்
ஜென்நிலையைப் போதிக்கிறது
மாதக் கடைசி
29/05/2022
மொழி தெரியாத கவிதையைக் கேட்டு மகிழ்ந்த தருணம்
கேள்விகள் பத்து
#கேள்விகள்_பத்து
சாராயம் பீரெல்லாம் தப்பில்லை என்றா;நீர்
தாராளம் காட்டுகின்றீர் தந்து!
(1)
வாயில் வடைசுட்டே வைத்திடலாம் என்றா;நீர்
வாயினிக்கச் சொல்கின்றீர் வந்து!
(2)
தேர்தலுக்கு முன்னாலே தீர்த்திடலாம் என்றா;நீர்
நேர்மையின்றி பேசுகின்றீர் நின்று!
(3)
ஆண்டவர்கள் தப்பென்றே ஆண்டிடலாம் என்றா;நீர்
வேண்டியதைச் செய்யவந்தீர் வென்று!
(4)
நெஞ்சத்து நீதியும் விற்பனைக்கே என்றா;நீர்
அஞ்சாமல் சொன்னீர்கள் அன்று!
(5)
ஊதிப் பெருக்கிடவே ஊடகங்கள் என்றா;நீர்
சேதிபலச் சொல்கின்றீர் சேர்ந்து!
(6)
யாரென்ன சொல்வார்கள் எம்முன்னே என்றா;நீர்
ஊரெல்லாம் விற்கின்றீர் கள்!
(7)
நக்கீரர் எல்லோரும் மௌனித்தார் என்றா;நீர்
இக்கட்டில் வைத்துள்ளீர் கள்!
(8.)
ஜால்ராக்கள் உள்ளவரை சந்தோஷம் என்றா;நீர்
சால்பின்றி செய்கின்றீர் கள்!
(9)
போசாக்கு பானமெல்லாம் போதையில்லை என்றா;நீர்
போய்சாக விற்கின்றீர் கள்!
(10)
செ. இராசா
26/05/2022
அரும்பு மீசை காலத்தில்
அரும்பு மீசை காலத்தில்
பெரிய மீசை வேண்டுமென
அடிக்கடி சிரைத்த நாம்தான்;
கட்டை மீசை காலத்தில்
வைத்த மீசையை
மீண்டும் குறைக்கிறோம்...
செ. இராசா
கொடுஞ்சொல் வேண்டாம் ---- குறள் வெண்பாக்கள்
#கொடுஞ்சொல்_வேண்டாம்
#குறள்_வெண்பாக்கள்
சொல்லவும் கூசுகின்ற சொற்களைக் கூறுபவர்
நல்லவரே இல்லை நகர்
(1)
கொல்லும்சொல் கூறிவிட்டு குற்றமென்ன இஃதென்போர்
சொல்லும்சொல் யாவும் சுடும்
(2)
தீஞ்சொல் உதிர்த்துத் திமிராய்த் திரிபவர்மேல்
வாஞ்சை அடைந்தால் வலி
(3)
பெருமை உடையவர்கள் பேசுகின்ற பேச்சில்
எருமைக்கும் இல்லை இடம்
(4)
பொல்லாசொல் சொல்லிப் புறமுதுகில் குத்துபவர்
நல்லோர்போல் தோன்றும் நரி
(5)
வசைபாடி எப்போதும் வைகின்ற வாயில்
அசைபோட வேண்டும் அவல்(ள்)
(6)
அவச்சொற்கள் பேசிட அஞ்சாத வாயில்
சிவச்சொல்லால் இல்லை பயன்
(7)
குறைகளைச் சொல்லியே கும்பி நிறைப்போர்
நிறைகளைக் காணார் விடு
(8)
சொந்தமும் பந்தமும் சுற்றமும் எல்லாமும்
நிந்திப்போர்க் கென்றும் நிழல்
(9)
நல்ல உணவோடு நஞ்சிருந்தால் என்னாகும்?
அல்லசொல்லும் அப்படித்தான் அங்கு!
(10)
செ. இராசா
25/05/2022
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்
24/05/2022
கடலைவிடப் பெரிசுங்க....
22/05/2022
எனக்கான மேடை ஒன்று
எனக்கான மேடை ஒன்று- அது
எங்கே இருக்கிறது?!
அதற்காகத்தானே இன்று- இந்த
ஜீவன் துடிக்கிறது...!!!
உனைக்காணும் ஒரு நொடி
21/05/2022
அடியே அழகே
அடியே அழகே
.....அரும்பாக் கவியே
.......உனை நான் செதுக்க வாறேன்டி
அடியே இசையே
......எழும்பா விசையே
........உனை நான் இசைக்கப் போறேன்டி..
காகிதமா இருந்தாக்க யாருக்கென்ன இலாபம்?
காவியமா மாத்திடநான் காதலிச்சாப் போதும்
காகிதமா இருந்தாக்க யாருக்கென்ன இலாபம்?
ஓவியமா மாத்திடநீ ஓடிவந்தாப் போதும்..
அடியே அழகே.....ஆசைக் கவியே
அடியே இசையே....மேஸ்ட்ரோ விசையே...(2)
அடடா அழகா
...குறும்பாக் குமரா
.......இதுதான் கலக்கல் நடையாடா?!
அடநீ பொறுடா
......அலும்பைக் குறைடா
........ இல்லைன்னா விழுகும் அடிபோடா...(2)
இருந்தாலும் நீதான்டா என்னோட ஆளு
விருந்துண்ணும் முன்னாலே வேணாண்டா மோரு
வரும்போது வந்தாதான் வாழ்த்திடும் ஊரு
வரம்பநாம் மீறுனால் தூத்திடும் பாரு
அடடா அழகா...குறும்பாக் குமரா
அடநீ பொறுடா......அலும்பைக் குறைடா..(2)
✍️செ. இராசா
19/05/2022
நீதித்தாய் கண் திறந்தாள்...
18/05/2022
வரலாற்று வெண்பாக்கள்
#வரலாற்று_வெண்பாக்கள்
காங்கிரசார் ஆடிய கண்றாவி ஆட்டத்தால்
தாங்கொண்ணாப் பேரிழப்பு தான்!
(1)
பாக்கிஸ்தான் வாலறுக்க பார்த்திருந்த வல்லரசு
தாக்கியது வங்காளம் சென்று
(2)
இந்திரா காந்தியினால் இந்தியா வென்றதினால்
வங்காள தேசமெனும் நாடு
(3)
வங்காள தேசத்தை வைத்துவந்த ஓட்டெடுப்பில்
சிங்களத்தான் நிற்கவில்லை சேர்ந்து
(4)
சிங்களத்தான் வாலறுக்க சிந்தித்த இந்திரா
சங்கூதத் திட்டமிட்டார் சார்ந்து
(5)
உள்நாட்டுப் போரினை ஊதிப் பெரிதாக்க
அள்ளியள்ளித் தந்தார்கள் அன்று
(6)
காலத்தின் ஓட்டத்தில் காணாமல் சென்றுவிட
ஞாலத்தின் மாற்றத்தில் மைந்து!
(7)
தாயைப்போல் இல்லாத் தமையனார் செய்தபிழை
நாயைப்போய் ஏவிவிட்டார் வந்து!
(8.)
முன்வினைப் பாவமும் மூழ்ந்தெழுந்த சாபமும்
தன்வினையால் சுட்டதே சான்று
(9)
சட்டமும் நீதியும் தண்டனையைத் தந்தபின்னே
விட்டுவிடல் தானே முறை!
(10)
செ.இராசா.
வடிவானவள் .....வெடியாயென ...........வருவாளெனில் யாவும்
17/05/2022
தொட்டுப் பணிகின்றேன் தாள்!
16/05/2022
பச்சை
#பச்சை
இக்கரைக்கு அக்கரை பச்சையென்றால்
இதில் பச்சையென்பது
வளத்தைக் குறிக்கும்!
அவர் சொல்வது பச்சைப் பொய்யென்றால்
அதில் பச்சையென்பது
அளவைக் குறிக்கும்!
இவர் பச்சையாய்ப் பேசுகிறார் என்றால்
இங்கே பச்சையென்பது
கெட்ட வார்த்தையாகும்!
பாவம் பச்சைப்புள்ளை என்றால்
அங்கே பச்சையென்பது
பிஞ்சுக் குழந்தையாகும்!
அதுவே...
பச்சையமுள்ள இலையென்றால்
நிறமியைக் குறிக்கும்!
பச்சைக் கொடியென்றால்
இனத்தைக் குறிக்கும்!
பச்சை விளக்கென்றால்
சமிக்ஞையாகும்!
பச்சை மையென்றால்
அதிகாரமாகும்!
எனில்....
இந்த பச்சைக்குத்தான்
எத்தனைக் குறியீடுகள்?
எத்தனை மதிப்பீடுகள்?
எத்தனை அலங்காரங்கள்?
எத்தனை அடையாளங்கள்?
எதனால் இப்படி?
ஓ...
புவிக் காகிதம் மேல்
மழைத் தூரிகை வரைந்த ஓவியத்தில்
உயிர்ப்புடன் ஒளிர்வது
பச்சை நிறம் என்பதாலா?
செ. இராசா
காலமும் நேரமும் வெண்பாக்கள்
15/05/2022
முள்ளின்மேல் நின்றுகொண்டு
13/05/2022
தொட்டதெதுவும் துலங்கவில்லை
அந்த நாட்கள்
12/05/2022
உண்டோம் உறங்கினோம்
11/05/2022
எங்கே போனீங்கோ- நீங்கோ
அதிசயமே...
அடுத்தவர் வரிகளை
அப்படியே வைக்கும் பதிவுகளில்
ஏனோ..
எழுதியவர் பெயர் மட்டும் விடுபட்டு விடுவது
அதிசயமே...
ஆணியின் கேள்வி
10/05/2022
தீ வெண்பாக்கள்
#தீ_வெண்பாக்கள்
மக்களின் சாபத்தில் மன்னர்கள் வீழ்கையில்
உக்கிரமாய் மாறும் உணர்வு!
(1)
கண்ணகிகள் விட்டகண்ணீர் கானலில்லை என்பதனை
கண்டதின்று வையகமே காண்!
(2)
பக்சேக்கள் செய்தபலி பாவங்கள் அத்தனைக்கும்
தக்கதொரு தீர்வுதான் சாவு!
(3)
மந்திர மாந்த்ரீக மாயைகள் எல்லாமும்
சொந்தவினை போக்கிடுமா சொல்?
(4)
புத்தரின் பல்காக்கும் புண்ணிய பூமியில்
புத்தன்சொல் காத்தனரா சொல்?
(5)
அகிம்சை வழிசென்றோர் ஆயுதத்தைத் தூக்க
வகுத்தோர் எவரென்று சொல்?
(6)
இனத்திற்குள் ஒற்றுமை இல்லாமல் செய்து
தனக்கென வாழ்ந்தவர்யார் சொல்?
(7)
வெற்றியெனச் சொல்லி வெறிகொண்டு கொக்கரித்தாய்...
பற்றி எரியுது பார்!
(8)
அறமின்றி ஆடும் அனைவருக்கும் பாடம்
இறக்கும்முன் செய்வான் இறை!
(9)
பிரித்தாளும் சூழ்ச்சியால் பேயரசு செய்தால்
எரிமூட்டிக் கொல்வான் எமன்!
(10)
செ. இராசா