சங்கத்தமிழ் கண்டத் தமிழனை
பொங்கும்கடல் கொண்டப் பொழுதினில்
வந்துக்கரம் தந்தத் தலைமகன்
…........................................வடிவேலன்!
எங்கும்தமிழ்ச் சங்கம் பரவிட
எங்கள்குலம் எங்கும் உலவிட
குன்றில்உயர் குன்றில் உறைபவன்
..........................................கதிர்காமன்!
பண்டைத்தமிழ் பண்ணில் இசைந்திட
அண்டைக்குலம் எல்லாம் அசந்திட
இன்றைக்கருள் செய்யக் குமரனைத்
............. .......................தொழுவோமே!
கொச்சைத்தமிழ் எங்கும் களைந்திட
இச்சைக்குணம் இல்லா தொழிந்திட
அச்சன்குரு அன்புச் சரவணன்
............,.........................அருள்வானே!
............,..........................அருள்வானே!
............,..........................அருள்வானே!
மலையகம் காக்கவந்த வேல்முருகா!
மாநகர் கம்பளையின் மால்மருகா!
மூவினம் போற்றுகின்ற ஓம்முருகா!
பாரினம் யாவருக்கும் ஓர்- முருகா!
வேல்முருகா ஐயா வேல்முருகா
எங்களை ஆளுகின்ற வேல்முருகா
வேலாயுதா ஐயா வேலாயுதா
கம்பளை ஆளுகின்ற வேலாயுதா
கோடிநெஞ்சில் குடிகொண்ட
......... எங்கள் சண்முகா
நாடிவந்தோர் குறைதீர்க்கும்
...........ஆதி நாயகா
வேண்டிடுவோர் பிணிநீக்கும்
...........எங்கள் வேலவா
மீண்டிடவோர் வரம்வேண்டும்
..........ஞான பண்டிதா
ஞாலமெல்லாம் அருள்செய்யும்
...........எங்கள் குருபரா
ஞானமில்லார் மனம்மாற்றும்
..........ஞால பாலகா
காலமெல்லாம் புகழ்ஓங்கும்
..........சூர வேலவா
ஆசையில்லா நிலையின்றி
..........எம்மைக் காக்கவா
(வேல்முருகா ஐயா)
பழனியில் ஆண்டியான பாலகனே!
செந்தூரில் வென்றகிரு பாகரனே!
பரங்குன்றில் தெய்வயானை கொண்டவனே!
குருவாகி சுவாமிமலை நின்றவனே!
திருத்தணியில் வள்ளியினை ஏற்றவனே!
பழமுதிர்ச் சோலைவாழும் ஆண்டவனே!
எங்கள் கம்பளையை ஆளுகின்ற வேலவனே
எங்கள் கம்பளையை ஆளுகின்ற வேலவனே
(வேல்முருகா ஐயா)
அரோகரா... அரோகரா.... அரோகரா
செ. இராசா.
நன்றி: இலங்கை சுதாகரன், எஸ்.கணேசன் & சதீஸ், கம்பளை.
No comments:
Post a Comment