#முன்னுரை
எல்லாக் குறள்களும்
......... இன்னமுதே என்றாலும்
நல்லதிலும் நல்லதென
..........நான்விரும்பிச்- சொல்வேன்;
"மனத்துக்கண் மாசிலன்
..........ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"
#அந்தாதி
நஞ்சில்லா ஓர்நிலமாய் நம்நெஞ்சை மாற்றினால்
நஞ்சைபோல்* நன்மைதரும் நம்பு
(1)
*நஞ்சை- நன்செய்
நம்பித் தெளிந்தபின் நல்லோர்மேல் கொள்கின்ற
நம்பிக்கை இல்லாமை நஞ்சு
(2)
நஞ்சென்று கண்டபின்னும் நாடிடும் தீச்செய்கை
கொஞ்சமாய்க் கொல்லும் குடி
(3)
குடிக்கும்முன் அஞ்சும் குடித்தபின் விஞ்சும்
குடியால் அழியும் குணம்
(4)
குணமென்னும் ஒன்றேக் குறியீடாம் மாந்தர்
பிணமானால் இல்லை பெயர்
(5)
பெயரில்லா தெய்வத்தின் பின்செல்வோர் சூட்டும்
பெயர்போல்தான் எத்தனைப் பேச்சு?!
(6)
பேச்சும் செயலும் பிழையின்றி ஒத்திருந்தால்
தீச்சுடராய் நிற்பார் தெளி
(7)
தெளிந்த மனத்தோடு செய்கின்ற யாவும்
வெளிப்படக் காண்பர் வியந்து
(8)
வியந்து வியந்து மிரண்டிட வேண்டாம்
உயர்ந்திடலாம் நீயும் உணர்
(9)
உணர்ந்து நடப்போர்க்கே ஊழ்வினை தீரும்
நினைந்துன்னுள் நீக்கிடு நஞ்சு
(10)
28/02/2022
நான் விரும்பும் ஓர்குறள் ---------------- வள்ளுவர் திங்கள்- 200
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment