17/02/2022

குறளுரையாடல் அந்தாதி



1, 3, 5, ........19
#ஒற்றைப்படை_கவிஞர்_இராசா
2, 4,6......20
#இரட்டைப்படை_கவிஞர்_அசோகன்

படைத்தவனை விட்டுப் படைபொருளைக் கேட்ட
மடையன்போல் ஏங்கும் மனம்
(1)

மனம்போல மாங்கல்யம் மாந்தரின் வாழ்வில்
குணம்போல் கொடுப்பான் இறை.
(2)

இறைவனின் கையில் எழுதுகோல் ஆனோம்
நிறைகுறை எல்லாம் அவன்
(3)

அவனாலே எல்லாம் அமைந்திடும் என்றால்
சிவனென் றிருத்தல் சிறப்பு. .
(4)

சிறப்பாய் வருமென்று செய்வதை விட்டால்
அறமில்லை அன்றோ அது
(5)

அதுதான் விதியென்று அன்றாடங் காய்ச்சி
பொதுவாய் உரைப்பான் புரி
(6)

புரியாத ஒன்றைப் புரிந்ததுபோல் எண்ணிப்
புரியாமல் பேசும் புவி
(7)

புவியினில் நாளும் புதிதாக வேடம்
அவைநடுவில் கூறுவது ஆர்(யார்)
(8)

யாரிங்கு வந்தாலும் யாரென்ன சொன்னாலும்
ஓரினம் என்றே உணர்
(9)

உணர்வுடன் ஒன்றி உருவம் இணைதல்
கனிவுடைக் காதல் களி!
(10)

களித்தேன் ருசித்தேன் கவித்தேன் அருந்தேன்
அளித்தேன் தமிழ்த்தேன் அருந்து
(11)

அருந்துவேன் என்றும் அணித்தமிழ் மண்ணில்
வருந்தவும் ஏது வழி
(12)

வழிவழி வந்த மரபை நினைந்து
விழித்தெழ என்றும் விரும்பு
(13)

விரும்பிய தெல்லாம் விரலின் நுனியில்
அரும்பிடும் நாளை அறி.
(14)

அறிய அறிய அறிவது யாதோ?!
அறிவிலி;யாம் என்னும் அறிவு
(15)

அறிவிற் பெரியோர் அறவோர் உலகில்
இறந்தும் இருப்பார் நிலத்து
(16)

நிலத்தில் இருப்பவற்றில் எப்பொருள் நிற்கும்?
உளத்தில் நிறுத்தி ஒழுகு
(17)

ஒழுகுவார் மேன்மையில் என்றும் உயர்வாய்ப்
பழகுவோர்ப் பண்பே தலை.
(18)

தலையாய நட்பில் தனித்துவம் காட்டி
மலைபோல நிற்பதே மாண்பு
(19)

மாண்புகள் வார்க்கும் மகத்துவம் யாவுமே
நோன்புகள் நூற்கும் படை!
(20)

✍️ இருவரும்

17. 02. 2022

No comments: