08/04/2019

ஒரு மரம் மட்டுமா போதிமரம்--150வது களஞ்சியம் கவிதைப் போட்டி- 30வது வெற்றிக் கவிதை


கிடைத்த இடம்: முதலிடம்
நடுவர்: திரு. கோபிநாத் அவர்கள்
அமைப்பு: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼


ஒரு மரம் மட்டுமா போதிமரம்?!!!
அனைத்து மரங்களுமே போதிமரம்: ஆம்
முன்பும் போதித்தது
இன்றும் போதிக்கின்றது
இனியும் போதிக்கும்

ஆமாம் என்ன போதித்தது?

வெட்டினாலும் தாங்குகின்ற
பொறுமையைப் போதித்தது!

வெட்ட வெட்டத் துளிர்க்கின்ற
தன்னம்பிக்கையைப் போதித்தது!

மழைதரும் காரணியாய்
செய்ந்நன்றி போதித்தது!

வளைத்தாலும் வளையாத
நேர்மையைப் போதித்தது!

இலையுதிர் காலத்தில்
நிலையாமை போதித்தது!

இறந்தாலும் வாழ்கின்ற
புகழுடைமை போதித்தது !

தன்வேரில் நீருறிஞ்சி
நுனிவரைக்கும் எடுத்துச்சென்று
தன்னையே நிமிர்த்துகின்ற
அறிவினைப் போதித்தது!

அடிவேரில் கிளைபரப்பி
பெருங்காற்றில் தலையாட்டி
அழிவினைத் தாங்குகின்ற
ஆற்றலைப் போதித்தது!

எவ்வுயிரும் இளைப்பாறும்
பல்லுயிர்ப் புகலிடமாய்
என்றென்றும் தருகின்ற
ஈகையைப் போதித்தது!

மரங்கள் அனைத்தும் நல்வரங்களே!
வரங்கள் அனைத்தும் நல்வாழ்க்கையே! 

✍️செ. இராசா
*************£******************
குறிப்பு:
*******
அன்பு நண்பர்களே,
இது என் 30வது வெற்றிக் கவிதையாகும். உண்மையில் என்னை மிகவும் ஊக்கப்படுத்திய தமிழ்ப்பட்டறையை நான் என்றும் மறக்க இயலாது. மேலும் நான் வேறு எந்த தளத்திலும் போட்டிக்காக எழுதியதே இல்லை என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இனிமேல், அடியேன் போட்டியில் கலந்து கொள்ளாமல் பிறரை ஊக்கப்படுத்த மட்டுமே நினைக்கின்றேன். என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2278242619161308?sfns=mo

No comments: