ஒவ்வொரு தனி மனிதனையும் (ஒவ்வொரு “நான்” னையும்) சுற்றி ஒவ்வொரு வட்டங்களாக போட்டால் பெரும்பாலும் பின்வருமாறு அமையும்.
1. குடும்பம்
2. சுற்றம், நட்பு மற்றும் தெரிந்த நபர்கள்
3. சமூகம் மற்றும் தெரியாத நபர்கள்
4. அனைத்து பிற உயிரினங்கள் மற்றும் அனைத்து உயிரற்ற பொருட்கள்
இந்த வட்டங்களில் உள்ள அமைப்பு முறைகளை அவரவர்களுக்கு தகுந்தவாறு
மாற்றிகூட அமைத்துக்கொள்ளலாம். அது முக்கியமல்ல. இந்த அனைத்து வட்டங்களும்
ஒவ்வொரு “நான்”னையும் மையமாக வைத்தே அமைகின்றன என்பதே இங்கு
மிகமுக்கியமாகும்.
இங்கே இந்த நானானது உடலாலும், மனத்தாலும்
அனைவரையும் தொடர்புகொள்வதற்காக ஒரு ஆரம் அமைத்து மற்ற வட்டங்களின்
எல்லைகளையும் விரித்துக்கொள்கிறது. அனைத்திற்கும் ஆதாரமான இந்த நானே மிக
முக்கியமாக இருப்பதால் இந்த நானை நாம் பாதுகாக்க வேண்டியது முக்கியமாக
அமைகிறது.
இந்த உயிருள்ள நானானது கடமை அல்லது தொண்டு செய்வதன்
மூலமாக உடலாலும், எண்ணங்களின் மூலமாக மனத்தாலும் இந்த உலகத்தைத்
தொடர்புகொள்கிறது. அவ்வளவு முக்கியமான இந்த உடலையும் மனத்தையும் நாம்
ஒழுங்காகப் பேணிக்காக்க வேண்டுமல்லவா?!!
உடலை நன்றாக வைத்துக் கொள்ள
யோகா மற்றும் உணவுப்பழக்கங்களும், மனதை நன்றாக வைத்துக்கொள்ள பயிற்சியும்,
நல்ல புத்தகங்களும் மற்றும் நல்லோர்களின் தொடர்பும் தேவைப்படுகிறது.
நாம் நன்றாக இருந்தால்தானே நம் குடும்பம், சுற்றம், நட்பு, சமூகம் என
அனைவரிடமும் நல்லிணக்கமாக வாழ முடியும். எல்லா உறவுகளுக்கும் மையமான நம்மை
நாம் செதுக்கும் முறையை அறிந்து கொள்ளவேண்டும் என்றுகூறி கீழே ஒரு
கவிதையோடு விடைபெறுகிறேன் உறவுகளே.....நன்றி வணக்கம்
கவிதை
*********
நான் என்பதை மையம்கொண்டே
நாம்பல வட்டங்கள் போடுகின்றோம்!
உடலும் மனமும் ஒருங்கிணைந்த
கடமையை ஆரமாய் அமைத்திடுவோம்!
ஆரத்தின் அளவைப் பொறுத்தேதான்
அமைகின்ற வட்டங்கள் சிறப்பதினால்
அதனை அழகாய் வடிவமைக்கும்
அடிப்படை அறிவை பெருக்கிடுவோம்!
இவண்
செ. இராசா