115வது கவிச்சரம்
******************
💐🌸💐🌸💐🌸💐🌸💐
தமிழ்த்தாய் வாழ்த்து
*******************
ஆதியிலே அகத்தியமாய்
அதற்கடுத்த தொல்காப்பியமாய்
திருவள்ளுவனின் திருக்குறளாய்
திருமூலரின் திருமந்திரமாய்
கம்பரின் காவியமாய்
கவியரசரின் கவிதைகளாய்
தரணியிலே சிறந்தோங்கும்
தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்!
கவிச்சரத் தலைமை வணக்கம்
**************************
அறிவில் திருமகனார்
அறிவியல் தமிழ்மகனார்
அப்துல்கலாம் ஐயாவின்
அணிந்துரையில் வெளிவந்த
“அறிவியல் பூங்கொத்து” ஆசிரியர்
திருஞானம் ஐயாவை
ஒருமனதாய் வாழ்த்துகின்றேன்!
இருகரத்தால் வணங்குகின்றேன்!
அவை வணக்கம்
****************
ஆலம் விழுதுபோல்
ஞாலத்தில் காலூண்றி
இரண்டு கிளைகளை
இலங்கையிலே பரவவிட்டு
பத்தாவதாய் வரவிருக்கும்
புதுக்கோட்டை அமைப்பிற்கும்;
அத்தனை அவைகளுக்கும்
அடியேனின் வணக்கங்கள்!
நட்பு
*****
ரத்த உறவுகளில் இல்லாத ஒன்று!
ஒத்த உணர்வான நட்புக்கே உண்டு!
ஒன்றும் எதிர்பாரா நல்லோரின் நட்பு!
என்றும் அமைந்தாலே அதுதானே சிறப்பு!
வர்ணம் பாராத அன்பானோர் நட்பு!
கர்ணன் போலான ஆன்றோரின் நட்பு!
உடன் இருத்தல்
***************
உடலோடு உறைகின்ற உயிர்போலே
உணர்வோடு ஒன்றானோர் நட்பாலே
உடமைகள் கைவிட்டுப் போனாலும்
உண்மையில் இழந்ததாய் ஆகாதே...!!!
கோடிகளில் செல்வங்கள் சேர்த்தாலும்
கோட்டையில் கோலாச்சி இருந்தாலும்
நன்நட்பு இல்லாது போனாலோ
தன்னுயிரை காப்பாற்ற முடியாதே....!!!
நன்றி நவில்தல்
***************
என்னால் முடிந்ததை நான்
எப்படியோ சொல்லிவிட்டேன்!
நன்றாய் இருந்தெதனில்
நற்றமிழின் பெருமையென்பேன்!
ஏதோ இருந்ததெனில்
எளியோனின் பிழையென்பேன்!
பிழையைப் பொருத்தருள
பிரியமுடன் வேண்டுகிறேன்!
நன்றி! நன்றி!!
No comments:
Post a Comment