02/10/2018

கற்றுக் கொண்டவன்- ஒரு பாடல்


(ஒருவர் சூழ்நிலை சொல்ல....அதற்காக எழுதியது)

கற்றுக் கொண்டதையும்- தமிழில்
பெற்றுக் கொண்டதையும்- பிடியில்
சற்றும் நழுவாமல்- வாழ்வில்
முற்றும் கடைபிடித்தான்!

ஈன்றோர் கையிருப்பில்- தினம்
திண்போர் இருக்கையிலே- தமிழ்ச்
சான்றோர் சொன்னதுபோல்- இவன்
தனியாய்த் தெரிகின்றான்!

கடமையின் பெயராலே- பலர்
கடன்கள் வாங்கையிலே- அது
மடமைச் செயலென்றே- இவன்
உடன்பட மறுக்கின்றான்!

லஞ்சம் பெறுவதில்லை-யாரையும்
தஞ்சம் புகுவதில்லை- யாரும்
பங்கம் செய்தாலும்- இவனோ
வஞ்சம் வைப்பதில்லை!

கொட்டிக் கொடுக்கையிலும்- சிலர்
திட்டித் தீர்க்கையிலும்- என்றும்
விட்டுக் கொடுப்பதினால்- இவன்
கெட்டுப் போவதில்லை!

(வேறு)

உண்மை நேர்மை என்பதிலே
என்ன பயனெனக் கேட்போரே..
உண்மை தந்திடும் வலிமைகளே
நன்மை பயனென அறிவீரோ....

கற்றுக் கொண்டதையும்- தமிழில்
பெற்றுக் கொண்டதையும்- பிடியில்
சற்றும் நழுவாமல்- வாழ்வில்
முற்றும் கடைபிடித்தால்- நாமும்
வெற்றியைத் தொட்டிடுவோம்!

No comments: