30/05/2018

இளைஞனே வா...விவேகானந்தரைப்படி


இருண்ட இதயம் பிரகாசமாகி
சோர்ந்த இதயம் சுறுசுறுப்பாகும்!

தன்னம்பிக்கை தானாய்ப் பிறந்து
இறைநம்பிக்கை தேனாய்ப் பாயும்

தரித்திரம் தொலைந்துபோயி
சரித்திரம் உனதாய் மாறும்!

நாடி நரம்புகள் முறுக்கேறி
கோடி வரம்புகள் வசமாகும்!

உண்மை உணர்வுகள் உரமாகி
நன்மை நலனே உரித்தாகும்!

ஞானம் உன்னுள் உருவாகி
ஞாலம் முழுதும் உனதாகும்!

இளைஞனே வா..விவேகானந்தரைப்படி

குறளின் குரலில்--கைக்குள்ளே கொலைக்கருவி



கோட்சேவின் கைகளுக்குள்
கொலைக்கருவி மறைந்ததைப்போல்
பல் இளிக்கும் தலைவருக்குள்
பலி உணர்வு இருக்குதய்யா..

கோட்சேவின் வணக்கத்திலே
அண்ணலுயிர் போனதைப்போல்
கொடுங்கோலர் வணக்கத்திலே
இன்றுமுயிர் போகுதய்யா...

ஆட்டிற்கு உணவளித்து
கழுத்தறுக்கும் மனிதரைப்போல்
ஓட்டிற்கு பணமளித்து
கழுத்தறுக்கும் கயவரைய்யா...

உயரத்தில் பறக்கையிலே
பிணம்தேடும் கழுகினைப்போல்
உயரத்தில் இருக்கையிலும்
பணம்தேடும் கூட்டமையா..

✍️செ. இராசா

💐💐💐💐
திருக்குறள்
🌸🌸🌸🌸

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

விளக்கம்

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட
அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள் கண்ணீர் கொட்டி
அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

29/05/2018

இறந்த வீரர்களின் தியாகம்



இறந்த வீரர்களின் தியாகம்
இந்த பூட்டில் தெரிகிறது
சிவப்பு நிறமாக

27/05/2018

செய்ந்நன்றி


தேரோட்டி மகனுக்கு
வில்போட்டி எதற்கென்று- பலர்
சொல்கூட்டி இகழ்ந்தபோதும்;
கோத்தகுதி இல்லையென்றும்
குலத்தகுதி இல்லையென்றும்- சிலர்
களம்நுழைய தடுத்தபோதும்;

கர்ணனை நண்பனென்றும்
அங்கதேச அரசனென்றும்
அன்போடு நாடளித்தே
அகம் மகிழ்ந்தான் துரியோதனன்!

காலத்தினால் அவன் செய்த
ஞாலத்தின் பேருதவி
அதுவென்றே எண்ணியெண்ணி
அவனோடு பயணித்து
செஞ்சோற்றுக் கடன் தீர்த்தே
செங்கதிரோன் மகன் இறந்தான்!

செய்ந்நன்றி செய்ததிலே
அவனுக்கினை யாருமுண்டோ?!!

எடுபிடி அரசே...



எடுபிடி அரசே எடுபிடி அரசே- நீ
எடுப்பார் கைப்பிடி அரசே..
அடிமை அரசே அடிமை அரசே- நீ
அடிப்பார் கால்பிடி அரசே...

அடிதடி அடாவடி செய்கிற நீயும்
மடிவாய் எடுபிடி அரசே..
அறப்படி ஆட்சியை நடத்தா நீயும்
அழுவாய் எடுபிடி அரசே............(1)

மற்றோர் சொல்படி நடக்குற நீயும்
மரிப்பாய் எடுபிடி அரசே...
கற்றோர் சொல்படி நடக்கா நீயும்
கதறுவாய் எடுபிடி அரசே............(2)

அதிரடிப் படையால் சுடுகிற நீயும்
அழிவாய் எடுபிடி அரசே...
சரவெடிக் குண்டால் துளைக்கிற நீயும்
சரிவாய் எடுபிடி அரசே...............(3)

கெடுபிடி செய்தே மடக்குற நீயும்
கெடுவாய் எடுபிடி அரசே...
தடிஅடி கொடுத்தே தடுக்குற நீயும்
எடுபட்ட சீச்சீ அரசே................(4)

✍️செ. இராசா

25/05/2018

அணுவோடு நானும்.



அலை அதிகம் இல்லாக் கடலில்
அமைதியாக ஒரு ஓரத்தில் நான்...

இந்த பிரபஞ்சத்தின் ஒரு துளியாய்
இல்லை.. இல்லை....ஒரு தூசியாய்..

ஆம்...அணுவிலும் அணுவாய்
மகள் அணுவோடு நானும்....

24/05/2018

நடப்பது சகுனி ஆட்டம்



அதிகார போட்டியின்
சதுரங்க ஆட்டம்...
ஆடியவன் துரியோதனன்!
ஆட்டுவித்தவன் சகுனி!

சகுனியின் பகடையில்
சகலமும் சரிந்தது!
துரியோதனன் ஆணையில்
துர்வினை நடந்தது!

அமைதி குலைந்து
அநீதி அரங்கேறியது!
கடமைக்கு மட்டும்
கண்டனக்குரல் ஒலித்தது!

உண்மையும் தர்மமும்
ஊரைவிட்டே ஓடியது!
நேர்மையும் நியாமும்
நீதிக்குப் போராடியது!

அறவழிப் போராட்டம்
அடுத்த கட்டம் போனது!
படுபாவியின் சூழ்ச்சிகளால்
அப்பாவிகள் உயிர்போனது!

ஆயினும்...

உண்மை தலைகுனியவே- அன்று
கண்ணன் ஓடிவந்தான்!
சூழ்ச்சியில் வென்றவரை- அவன்
சூழ்ச்சியால் வெற்றிகொண்டான்!

ஆனால்...

அரசியல் சதுரங்கம்
அன்றோடு முடியலையே...
ஆடிடும் சகுனிகளின்
கொட்டமும் அடங்கலையே..

துரியோ நாதிகளின்
துரோகங்கள் குறையலையே...
துணிகளை உருவுகின்ற
துச்சாதனர் மாறலையே.....

உண்மை மாய்ந்த பின்னும்- அந்தக்
கண்ணன் வரவில்லையே
உயிர்கள் மடிந்த பின்னும்- அந்த
இறைவனைக் காணலையே...

என்ன....கொடுமை இது?!
என்ன.....கொடுமை இது?!

சகுனிகள் பெருகியதால்
சதிச்செயல் பெருகியதோ?!
உரிமையைக் கேட்டதினால்-
உயிர்ப்பலி நடக்கிறதோ?!!

அடிமை ஓநாய்களின்
ஆட்சியும் வீழாதோ?!!
கொடுமை நடக்காத
ஆட்சியும் வாராதோ?!

✍️செ. இராசா

கவிச்சரம் ---பெண்ணுரிமை-----கல்வி



தமிழ்த்தாய் வாழ்த்து
********************
அறிஞரும் பொறிஞரும்
அறிவில் சிறந்தோரும்
கவிதை புனைந்திட
கருவிதை வழங்கிடும்
தமிழின் அன்னையை
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்!

💐💐💐🙏🙏🙏💐💐💐

கவிச்சரத் தலைமை வணக்கம்
*****************************
கவி தா என்று அழைத்தாலே
கவி தரும் திறமை படைத்தவரே!
கவிக்கரு எதுவென இருந்தாலும்
கவிகள் புனைவதில் வல்லவரே!
கவிஞர்கள் பயணிக்கும் பட்டறையில்
கவிதைகள் கதைகள் படைப்பவரே!

கவிச்சரத் தலைமை ஏற்றிருக்கும்
கவிதாராசா கவிஞரே- நல்ல
கவியால் உலகை வென்றிடவே
கவிதாவின் ராசாநான் வாழ்த்துகின்றேன்!

💐💐💐🙏🙏🙏💐💐💐

அவை வணக்கம்
****************
சுயநலம் எதுவும் இல்லாமல்
பொதுநலம் ஒன்றே குறிக்கோளாய்
இணையத்தில் மட்டும் இல்லாமல்
இலக்கியம் போற்றிடும் பேரவையாய்
விழுதுகள் பரப்பிடும் அவையினை நான்
விழுந்து வணங்கி போற்றுகின்றேன்

🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏

பெண்ணுரிமை
**************
உனக்கு உரிமை வேண்டுமென்று
இனியும் உலகைக் கேட்காதே!

நீயே எழுந்து தலைநிமிர்ந்து
நீதியின் கதவினைத் தட்டிடுவாய்!

வளர்ச்சியைத் தடுத்திடும் களைகளை நீ
வேரோடு புடுங்கி எறிந்திடுவாய்!

குறுக்கே யாரும் வந்துநின்றால்
குடலை உருவிட துணிந்திடுவாய்!

🧕👮🏻‍♀️👮🏻‍♂️👷‍♀️🧕👮🏻‍♀️👮🏻‍♂️👷‍♀️🧕👮🏻‍♀️👮🏻‍♂️👷‍♀️

கல்வி
******
உலகைக் கையினில் கொண்டுவர-நல்ல
உயர்நிலைக் கல்விகள் பயின்றிடுவாய்!
அறிவில்லா அரசியல் மூடர்களை-நல்ல
அறிவால் நீயும் அரிந்திடுவாய்!

நிலாச் சோறு ஊட்டாமல்- இனி
நிலாவிற்கு சென்று ஊட்டிடுவாய்!
செவ்வாய் தோசமாய் எண்ணாமல் - நீ
செவ்வாயில் சுயமியில் சிரித்திடுவாய்!

📕📗📘📙📒📔📕📘📙📙📔📓📒

நன்றி நவில்தல்
***************
ஒத்த கருத்துடையோர்
ஒருங்கிணைந்த சபையினிலே
மெத்த படிக்காத
அறிவிலியென் கவிதையினை
அரங்கேற்றம் செய்வதற்கு
அனுமதித்த அனைவரையும்
மனம் மொழி மெய்களாலே
மனதார நன்றி சொல்லி
மகிழ்வோடு வணங்குகிறேன்!
மலர்தூவி வாழ்த்துகின்றேன்!

🌺🌹🌷💐🌸🌼🌻🌼🌸🌹🍁🌹💐

நன்றி! நன்றி!!

🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏