சிறுகூடல் பட்டி முதல்
சிகாகோ நகரம் வரை
புவியுலகில் வருகை செய்து
கவியுலகை ஆட்சி செய்த
கவியரசர் சரித்திரத்தை
கவிதையிலே சுருக்கிச்சொல்ல
அடிபொடி நான் ஆசைகொண்டு
முடிந்தவரை முயலுகின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனைப் பொறுத்தருள்வீர்!
விசாலாட்சி ஆச்சிக்கும்
சாத்தப்பனார் அப்பச்சிக்கும்
எட்டாம் பிள்ளையாக
எழிலரசர் பிறந்தாராம்!
செம்மண் பூமியிலே
செங்கமலம் பூத்ததாக
முத்தையா என்றழைத்து
முத்தமழை பொழிந்தனராம்!
பிள்ளையில்லா ஒருவருக்குப்
பிள்ளையாகிப் போகிடவே
ஏழாயிரம் ரூபாய்க்கு
நாராயணன் ஆனாராம்!
எட்டா உயரம் தொட்ட
செட்டிநாட்டுக் குலமகனோ
எட்டாம் வகுப்போடு
ஏட்டுக்கல்வி துறந்தாராம்!
ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடிய ஆணழகன்
மன்மதக் கலைபயின்றே
மணமகனாய் ஆனாராம்!
முத்தார மணமுடித்த
வித்தகக் கவிஞனவன்
சதிபதி கவிச்சரத்தில்
பதினைந்து படைத்தாராம்!
கவிஞன் மனம் சிரித்தால்
கலைமகள் தோன்றிடுவாள்!
கவிஞன் சினம் கொண்டால்
கலைஞரும் தோற்றிடுவார்!
பாமரர் நகைத்திடவும்
பாடல்கள் எழுதியுள்ளார் !
படித்தவர் வியந்திடவும்
படைப்பினைத் தந்துள்ளார்!
அண்ணாவின் கொள்கையிலே
தன்னையே இணைத்தவராய்
ஆத்தீகம் தவறென்று
நாத்தீகமும் பேசியுள்ளார்!
வம்பு வழக்காட
கம்பனைப் படிக்கையிலே
கம்பனின் வரிகளிலே
தம்மையே இழந்துள்ளார்!
உண்மை தெரிந்ததிலே
உள்ளம் தெளிவடைந்து
கடந்த பாதையெல்லாம்
கவிதையாய் வார்த்துள்ளார்!
திருவாசகத் திருக்குறளாய்
திருமந்திரத் தேவாரமாய்
இலக்கிய இதிகாசமாய்
ஐம்பெருங் காப்பியமாய்
தமிழ்க்கடல் முழுவதையும்
தாகம்தீரக் குடித்துவிட்டு
எதுகை மோனையிலே
எளிமையாய்ப் புரியவைத்தார்!
இந்து மத அர்த்தங்களும்
இயேசுவின் காவியமும்
புவியுலகம் உள்ளவரை
கவியரசைப் போற்றிடுமே...
பெருங்கவி பல படைத்த
அருட்(ங்)கவி கண்ணதாசர்
கற்கும் அனைவருக்கும்
அட்சயப் பாத்திரமே...
No comments:
Post a Comment