21/05/2018

பீஷ்மர்


சந்திர வம்சத்து சாந்தனு மன்னரும்
சந்தான குணவதி கங்கா தேவியும்
சத்திய மைந்தனாம் தேவ விரதனை
எட்டாம் பிள்ளையாய் ஈன்றனர் நன்றே!

சிற்றன்னை சிந்தையில் சுயநலம் வந்திட
பெற்றவர் சாந்தனு வருத்தம் கொண்டிட
மற்றவர் நலனுக்கு தன்னையேத் தந்திடும்
பற்றற்ற மைந்தனாய் மாறினார் பீஷ்மர்!

அத்தினா புரத்தின் அரியனைக் காக்கின்ற
சத்திய வாக்கினை அன்றவர் தந்ததால்
எத்தனை எத்தனை தவறுகள் நடப்பினும்
அத்தனைத் தவறையும் ஏற்றவர் ஆனார்!

அம்பிகா அம்பாலிகா அம்பை வாழ்வினில்
அன்றவர் ஆடிய சுயம்வர ஆட்டம்
காந்தாரி வாழ்விலும் தொடர்ந்து ஆடிட
காந்தார சகுனியால் போரிலும் ஆடினார்!

தன்குலம் மட்டுமே காக்கின்ற தர்மம்
தன்னலம் என்றே அறியாத பீஷ்மரும்
கண்ணனால் ஞானம் அறிந்ததன் பின்னே
உண்மையில் தர்மம் அறிந்தவர் ஆனார்!

No comments: