அதிகார போட்டியின்
சதுரங்க ஆட்டம்...
ஆடியவன் துரியோதனன்!
ஆட்டுவித்தவன் சகுனி!
சகுனியின் பகடையில்
சகலமும் சரிந்தது!
துரியோதனன் ஆணையில்
துர்வினை நடந்தது!
அமைதி குலைந்து
அநீதி அரங்கேறியது!
கடமைக்கு மட்டும்
கண்டனக்குரல் ஒலித்தது!
உண்மையும் தர்மமும்
ஊரைவிட்டே ஓடியது!
நேர்மையும் நியாமும்
நீதிக்குப் போராடியது!
அறவழிப் போராட்டம்
அடுத்த கட்டம் போனது!
படுபாவியின் சூழ்ச்சிகளால்
அப்பாவிகள் உயிர்போனது!
ஆயினும்...
உண்மை தலைகுனியவே- அன்று
கண்ணன் ஓடிவந்தான்!
சூழ்ச்சியில் வென்றவரை- அவன்
சூழ்ச்சியால் வெற்றிகொண்டான்!
ஆனால்...
அரசியல் சதுரங்கம்
அன்றோடு முடியலையே...
ஆடிடும் சகுனிகளின்
கொட்டமும் அடங்கலையே..
துரியோ நாதிகளின்
துரோகங்கள் குறையலையே...
துணிகளை உருவுகின்ற
துச்சாதனர் மாறலையே.....
உண்மை மாய்ந்த பின்னும்- அந்தக்
கண்ணன் வரவில்லையே
உயிர்கள் மடிந்த பின்னும்- அந்த
இறைவனைக் காணலையே...
என்ன....கொடுமை இது?!
என்ன.....கொடுமை இது?!
சகுனிகள் பெருகியதால்
சதிச்செயல் பெருகியதோ?!
உரிமையைக் கேட்டதினால்-
உயிர்ப்பலி நடக்கிறதோ?!!
அடிமை ஓநாய்களின்
ஆட்சியும் வீழாதோ?!!
கொடுமை நடக்காத
ஆட்சியும் வாராதோ?!
✍️செ. இராசா
No comments:
Post a Comment