
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
கத்தாரில் எத்தனையோ தமிழ் அமைப்புகள் இருந்தாலும் ஒரு விடயம் மட்டும் நன்றாகப் புரிகிறது. இங்கே அமைப்பு ரீதியாக இருந்தால் மட்டுமே முறையான அழைப்பு வருகிறது. இல்லையேல் நீங்கள் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் ஒன்று ஓரங்கட்டப் படுவீர்கள் இல்லையேல் அழைப்பே வந்தாலும் நமக்கான மதிப்பை அங்கே எதிர்பார்க்க முடியாது.
கவிதை எழுதுபவனெல்லாம் கவிஞனல்ல, கவிதையாக வாழ்பவனே கவிஞன் என்ற பாரதியின் வரிகளுக்கிணங்க உண்மையை உரக்கச் சொன்னாலும் ஓரங்கட்டப்படுகிறோமோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை.
இருப்பினும் எம்குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் எப்போதும் போலவே...
இங்கே கலை வேறு கலைஞன் வேறல்ல. கலையை மதிப்பவன் கட்டாயம் கலைஞனையும் மதிப்பான். அப்படி மதியாத இடத்தில் ஒரு கலைஞன் இருந்தால் அது அவன் கலைக்குச் செய்யும் அவமதிப்பே என்பதை உணர்ந்து, சில அமைப்பு ரீதியான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை என்று நாம் தவிர்க்கிறோமோ அன்றே அவர்களும் திருந்துவார்கள் என்பதை நாம் உணர வேண்டும் மக்களே... இல்லையேல்....கடைசிவரைக்கும் அவர்களுக்காய்க் கைதட்டும் ஒரு அங்கத்தினராக மட்டுமே இருக்க வேண்டியதுதான்.
நன்றி!
செ. இராசமாணிக்கம்
சர்க்கரை இல்லாத் தேநீர் தந்தாய்
இன்னும் இனிக்கிறதே...! என்றேன்..
நல்ல நகைச்'சுவை என்கிறாய்..
வெறும் கஞ்சிதான் உள்ளதென்றாய்
தொட்டுக்க என்ன? என்றேன்..
சிரித்தபடி அருகே வந்தாய்...
என்னாச்சு என்றேன்..
இந்தா... வெங்காயம் என்கிறாய்செ. இராசா
மறுமலர்ச்சி என்றகட்சி
......மாநிலத்தில் கண்டு
மறுமலர்ச்சி என்றாலே
.....மாற்றமெனச் சொல்லி
மறுபடியும் மாறிநின்று
.....மாறிநின்று நன்றாய்
மறுமலர்ச்சி கண்டவர்க்கெம்
..... வாழ்த்து!செ. இராசா
கரிகூட வைரமாகும் காலத்தால் ஆனால்
கரிக்கில்லை அம்மதிப்பு காண்!
(1)
அறியார் அறியார் அரிதான தொன்றை
அறிவார் அறிஞர் அகன்று
(2)
காலத்தால் பேசாமல் காலமுற்றால் பேசுவது
ஞாலத்தின் போக்கோ நவில்
(3)
மதிக்கின்ற பேரை மதிக்கின்ற மாண்பே
மதிப்பாகும் என்றும் மதி
(4)
மதியாதார் கூட மதித்திட வேண்டின்
மதிப்போடு நிற்பாய் வளர்ந்து
(5)
இகழ்ந்தின்று பார்க்கும் இளந்தாரி கூட்டம்
புகழ்ந்திட வைப்பாய்ப் புரிந்து!
(6)
வாய்ப்பு வருமென்று நாட்களைப் போக்காமல்
வாய்ப்பை உருவாக்கி வா
(7)
முயற்சித்த பின்னுமா முன்னேற்றம் இல்லை?
வியப்பில்லை எல்லாம் வினை
(8)
கற்கண்டும் கல்லும் கழுதைக்குக் கல்லே
அற்பர்க்கும் அஃதே அறி!
(9)
மதியாரை எண்ணி மனம்நோகும் காலம்
மதிப்பாகா தென்றே மற!
(10)செ.இராசா