04/08/2024

மலைபோல மனசுன்னு

 

மலைபோல மனசுன்னு
உயர்வாகச் சொல்வோமே
உயர்வாகச் சொல்வோமே- இப்போ
தலைகீழாப் போனதால
தடுமாறிப் போனோமே...
...தடம் மாறிப் போனோமே..

வயக்காட்ட வித்துப்புட்டு
வயநாடு வந்தோமே
வயநாடு வந்தோமே- இப்போ
கண்மூடிக் கண்திறந்தா
மண்மூடிக் கிடக்கோமே
...மலையத்தான் காணாமே

தென்பாண்டி நாட்டவிட்டு
மலைநாடு வந்தோமே
மலைநாடு வந்தோமே- இப்போ
திக்கேதும் தெரியலையே
திசைமாறிப் போனோமே
...திகைச்சேபோய் நிக்கோமே..

மலைச்சாமி கோவிலுக்கு
மறக்காம போனோமே
மறக்காம போனோமே - சாமி
மதிகோணல் ஆயிடுச்சோ
மலைகூட கரைஞ்சிடுச்சே
...‌மனசெல்லாம் உடைஞ்சிடுச்சே

03/08/2024

ஒருமீட்டர் பீஷா

 


ஒருமீட்டர் பீஷாவில் ஒவ்வோர் ரகமாய்
விரும்பிச் சுவைத்தால் வியப்பு!


குறைகாணா மனம் வேண்டும்


குறைகாணா மனம் வேண்டும்
...குணம்மாறா துணை வேண்டும்!
மறைவாகா மதி வேண்டும்!
...மனம்கோணா திடம் வேண்டும்!
முறைமீறா மதம் வேண்டும்!
...முதல்போகா செயல் வேண்டும்!
இறைநீங்கா வரம் வேண்டும்!
...இசைநீங்கா தருள் வேண்டும்!

01/08/2024

உருளைக் கிழங்கை

 


உருளைக் கிழங்கை

......உருட்டி உருட்டிச்

சுருள்வளையம் போலச்

.....சுழற்றி- அருமையாய்

எண்ணைக்குள் முக்கியதை

.....ஏதேதோ தூவியபின்

வண்ணமாய்த் தந்தார்கள்

......வார்த்து!


கண்ணாடி போட்ட

 

கண்ணாடி போட்ட
.....கருப்பான என்னைப்போய்ப்
பெண்ணெங்கே பார்க்குமென
.....பேதலித்தே...- உண்மையிலே
காதலைப் பூட்டிவைத்தே
.....காத்திருந்தக் காதலனைத்
தூதனாய் ஆக்கியதேன்
......சொல்?!

(கருவெல்லாம் கற்பனையே) 

31/07/2024

மெட்டு: முத்தைத்தரு----உள்ளம்பல பற்றில் உறைந்திட


உள்ளம்பல பற்றில் உறைந்திட
பள்ளம்விழும் எண்ணம் புகுந்திட
அல்லல்தரும் தொல்லை அனுபவம் தொடராதோ?!

இன்னல்;இனி இல்லை எனும்படி
இன்பம்புக ஒன்றைத் தரும்படி
எண்ணிப்பலர் கண்டுத் தெளிந்ததை அறிவீரோ?!

அண்டம்முதல் பிண்டம் சுழல்கிற
விண்ணின்துகள் ஒன்றை அறிந்திட
கண்ணின்;இடை உண்மை உணர்ந்திடப் பயில்வீரோ...

முற்றும்பிணி அற்றுக் கிளம்பிட
தொற்றும்வினைத் தொல்லை அகன்றிட
கற்றுத்தரும் மன்றப் பயிற்சியில் இணைவீரோ...

29/07/2024

அவமானம்




உன்னைச் சந்திக்காமல் யாரும்
உச்சம்தொட்ட வரலாறு இல்லை!
உனக்கு அஞ்சாமல் யாரும்
ஒழுக்கம்விட்ட சான்றும் இல்லை!

ஆயினும்...
உன்னை யாரும் விரும்புவதில்லை
காரணம்.. ரணம்!
உன்னால் வரும் ரணம்!

இங்கே நீதான் பயணத்தின்
எரிபொருளென ஏதேதோ பேசலாம்
ஆனால்...
பட்டால்தான் தெரியும் வலி!
கெட்டால்தான் தெரியும் விதி!

இங்கே யார் வேண்டுமானாலும்
அண்ணாமலைபோல் சவால்விடலாம்
ஆனால்;
அடைந்தால்தான் வெற்றி
அடையாவிடில்....?!

நீ
நீயேதான்....அவமானமே...

28/07/2024

ஞாயிறு விடியல்

நீண்டுகொண்டே போகிறது
உறக்கம்

21/07/2024

FAKE KURAL

 ராஜா எனும்பெயரில் ராங்காய் பணம்கேட்டு

பேஜார் புரியுமவன் பேக்கு (Fake)

17/07/2024

நான்

நானிருக்கும் போதெல்லாம்
....நாமொன்றும் செய்வதில்லை
நானின்றிப் போனால்தான்
....நாம்செய்வோம்- நானிலத்தில்
நானிருக்கச் செய்தாலும்
....நன்றாகா என்றறிந்து
நானின்றிச் செய்வீர்கள்
....நன்கு!

✍️செ. இராசா