28/10/2023
26/10/2023
எண்ணச் சமரினில் எத்தனை மோதல்கள்
24/10/2023
கருப்பா எனச் சொன்னதுமே
கருப்பா எனச் சொன்னதுமே
காளையப்போல் வருவாயே- வந்து
காலச்சுத்திக் கிடப்பாயே...
குளிப்பா என சொன்னாலோ
புளிப்பா அதை நினைப்பாயே- அட
போப்பா எனப் போவாயே...
வெளியாளு வந்தாக்க
வேகமா குரைப்பாயே; அதே
வீட்டாளு வந்தாலோ
மெதுவா உரைப்பாயே..
தாய்க்குத் தலைமகன்போல்
தாயோடே இருந்தாயே..
தந்தைக்குக் கடைமகன்போல்
எந்தையோடிருந்தாயே...
கூழோ கஞ்சியோ
கூலாகக் குடிப்பாயே....
எலும்போ கறியோ
எல்லாமும் உண்பாயே...
தவமென்ன செய்தோமோ
துணையாக இருந்தாயே...
தவறென்ன செய்தோமோ
தவிக்கவிட்டுப் போனாயே...
உன்...ஆன்மா சாந்தியடையட்டும் கருப்பா
என்றும் உன் நினைவோடு...
செ. இராசா
பிறப்பு: 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள்
இறப்பு: 24.10.2023
22/10/2023
ஒவ்வொரு நொடிகளுமே முக்கியமே
20/10/2023
தோசையும் சாம்பாரும்
தோசையும் சாம்பாரும்
....தொட்டுக்கச் சட்னியுமாய்
ஆசையுடன் நீவைத்த
....அஞ்சையும்- மேசையிலே
ஒன்றையும் வைக்காமல்
....ஒவ்வொன்றாய் தள்ளியபின்
இன்னொன்றும் கேட்டிடுவேன்
.....ஈ!
செ. இராசா
19/10/2023
என்ன நடக்குதங்கே...
என்ன நடக்குதங்கே- ஐயோ
என்ன நடக்குதங்கே...?!
உள்ளம் நடுங்குதிங்கே- ஐயோ
உள்ளம் நடுங்குதிங்கே...?!
எத்தனை சண்டைகளோ- இன்னும்
எத்தனை சண்டைகளோ...?!
ஒற்றுமை பந்தத்திலே- இன்னும்
எத்தனை குண்டுகளோ?!
ஐநாக்கள் என்பதிங்கே- வெறும்
ஹைனாக்கள் போல்தானோ?
டானாட்டம் போலிருந்தே- பெரும்
ஊன்திங்கும் பேய்தானோ?!
(வேண்டுமென்றே நிறுத்திக் கொள்கிறேன்)
செ. இராசா
18/10/2023
படிப்பத்து ------- குறள் வெண்பாக்கள்
படிக்கப் படிக்கப் பயன்தரும் நூல்கள்
படியேற்ற வைக்கும் படி
(1)
படிப்பவை யாவும் பதிந்திட வேண்டின்
படிப்படியாய் ஆழ்ந்து படி
(2)
படிப்பு முடிந்ததென பட்டங்கள் தாரார்!
படிப்பிற்கே தெல்லைப் படி
(3)
படிக்கப் படிக்கப் பார்வையினைத் மா(தே)ற்றும்
படிக்காத நூலைப் படி
(4)
படியளக்க மட்டும்தான் பட்டயக் கல்வி
படிப்பை வெளியில் படி
(5)
படிக்கின்ற போதே படிக்கின்ற சொல்லைப்
படிமமாய்ப் பார்த்துப் படி
(6)
படித்தோர் சபையில் பயமின்றி நிற்கப்
படியேற வைக்கும் படி
(7)
படிக்காதோர் முன்பும் பகுத்தறிய வைக்கும்
படிமுறையில் ஊன்றிப் படி
(8)
படிக்கின்ற நூலே படிப்பென ஆகா
படிப்பிக்கும் வாழ்வைப் படி
(9)
படிக்கும் வயதென்ற பாகுபா டில்லை
படிக்கும் வரைக்கும் படி
(10)
செ. இராசா
17/10/2023
இருக்கின்ற போதே
இருக்கின்ற போதே
......இனிதாக வாழாமல்
எப்போது வாழுவாயோ...?
வருகின்றன காலம்
.....வருகின்ற முன்பாக
வாழ்வதிலே என்னபிழையோ..?
முன்வினைகள் சேர்ந்தே
......மூட்டையென வந்தோமே
அவ்வினைகள் தீருமுன்னே....
நன்வினைகள் இன்றி
.......நாட்களினைப் போக்கிவிட்டு
நற்பயனை நாடலாமோ?!!
உன்வினையை மாற்று
.....உலகமது மாறும் (2)
நன்வினையைப் போற்று
....நன்மைபல கூடும் (2)
செ. இராசா
14/10/2023
அடியே...... கலைபல உனில் கண்டேனே
அடியே......
கலைபல உனில் கண்டேனே
ஏய்...
சகியே....
கவிகளில் உனை நெய்வேனே
மழையென இன்றே வருவாயே
எனதன்பே மறுக்காதே
வருந்திடும்நிலை அறிந்தே.......
உயிரே உனைச் சேராமல் தினம்
சும்மாவே நான் திரிஞ்சேன்
இப்போதே நீவந்து
என்னோடு சேர்ந்திட
எல்லாமே மாறிடுச்சேன்..
செ. இராசா
13/10/2023
இசைக்கும் உனக்கும்தான் எத்தனை முரண்
இசைக்கும் உனக்கும்தான்
எத்தனை முரண்?!
இசை ரசிக்க..
நீ ருசிக்க..
இசை அணைக்க
நீ துளிர்க்க..
இசைத் தென்றல்..
நீ புயல்..
இசை மார்கழி..
நீ சித்திரை..
இசை ஊட்டி..
நீ சென்னை..
இசைத் தென்றல்..
நீ தேன்...நீர்
செ. இராசா
12/10/2023
பொங்கல்
பச்சரிசி முக்காலும்
பாசிப்பருப்பு காலுமாய்
பக்குவமாய் அலசியதை
குக்கரில் நீர்விட்டு
உப்புப் பெருங்காயத்தை
ஓரமாத் தூவிவிட்டு
ஆழவிசில் இரண்டும்
அமுக்கு விசில் இரண்டுமென
வந்த உடனேயே
வெந்தத இறக்கிவச்சு;
இஞ்சி மிளகு சீரகத்த
பச்சைமிளகாய் முந்திரியோட
அஞ்சாறு கருவேப்பிலைய
அப்படியே உருவிவிட்டு
நெய்விட்டக் கடாயில
நேக்காக் கிண்டிவிட்டு
இறக்கிவச்சச் சட்டியில
இதைப்போட்டுக் கிளறிவிட்டா...
அட..அட.அடா
அதுதானே பொங்கல்.
செ. இராசா
(கொஞ்சம் சீரகம் கூடிப்போச்சு....கோவிச்சுக்காதீங்க)
10/10/2023
நாடுவிட்டு நாடுவந்து
நாடுவிட்டு நாடுவந்து
.....நாளையெண்ணி வாழ்பவர்
நாடிநிற்கும் போது:அந்த
......நாளிலென்ன வாழுவார்!
ஓடிவந்த ஊரிலெங்கும்
......ஓடிவேலை செய்பவர்
ஊரிலுள்ள வேலையென்றால்
.....ஊமையாகி ஓடுவார்!
வாடிநின்ற காலமன்று
.....வாழ்வையெண்ணி நோபவர்
வாய்ப்புவந்த பின்னுமிங்கு
.....வெந்துநொந்து பேசுவார்!
தேடிவந்த தேவையொன்றைத்
......தேடிவிட்ட போதிலும்
தேடுமந்த தேடலொன்றைத்
......தீர்ந்திடாமல் தேடுவார்!
செ. இராசா
09/10/2023
கவிதை
மரபுக்கவிதை
மரபு வரம்புக்குள் வார்த்திட்ட எல்லாம்
பரம்பரை தாண்டிநிற்கும் பார்
புதுக்கவிதை
மரபை உடைத்தும் வனப்புடன் செய்தால்
நிரந்தரமாய் நிற்கும் நிலைத்து
நவீனக்கவிதை
படிமம் வடிவமென்று பாங்கினை மாற்றி
பொடிவைத்துப் பேசும் பொறி
சந்தக்கவிதை
ஓசை நயம்மிக ஓடுகின்ற சந்தமெனில்
ஆசைக் குறைவுள்ளோர் யார்?
ஹைக்கூக்_கவிதை
வாமனன் போலிருந்து வைக்கின்ற ஈற்றடிக்குள்
யார்மனமும் வீழும் எளிது!
வசனகவிதை
சொல்லாடல் கொண்டு சுகமாகச் சொன்னால்தான்
எல்லோர்க்கும் போகும் எளிது!
செ. இராசா
07/10/2023
நடிகர் சிவகுமாரின் நூல்
திருக்குறள் சம்பந்தமான எந்த நூலாக இருந்தாலும் வாங்கும் பழக்கமுள்ள எனக்கு, வள்ளுவ வழியில் வாழ்ந்தவர்கள் என்று 100 பேர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் கூறி அதற்குப் பொருத்தமான 100 திருக்குறள்களையும் எடுத்துக்காட்டிய நடிகர் மற்றும் பன்முகக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 என்ற நூல் கிடைத்ததென்பது யாம் செய்த பாக்கியமே.
(புத்தகம் கிடைக்க உதவிய தம்பி ச.ரே.அ. மாயோன் அவர்களுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்)
குறிப்பாக அவர் அம்மாவைப் பற்றிக் கூறும்போது, ஆரம்பத்தில் சென்னைக்கே வரமாட்டேன் என்று சொன்ன அவர்களின் அம்மா, பிற்காலத்தில் ஆசையோடும் பரிவோடும் "ஐயா...நீ சென்னையில் தங்குகின்ற அறை வெறும் 10 க்குப் பத்தாக இருந்தாலும் அதில் நீ கட்டில் மேல் படுத்துக்கொண்டால் நான் கட்டிலுக்கு அடியில் ஒரு நாய்போல் படுத்துக்கொண்டு உனக்கு ஆக்கிப்போடுவேன் ஐயா...என்னைக் கூட்டிப்போவியா.." என்று சொல்லும் இடத்தில் உண்மையில் நானும் அழுதுவிட்டேன்.
எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், சாண்டோ தேவர், காந்தி, சில்வர் டங் சாஸ்திரி, தெரெசா, மண்டேலா.....என்று பெரிய ஆளுமைகள் முதல் வெளியே தெரியாத சின்னச் சின்ன நபர்கள் வரை அனைவரையும் கூறியது மிகவும் அருமை. குறிப்பாக அவரைப் பற்றியே நடிகர் சிவகுமார் அந்த செல்பி சிவகுமார் ஆன சம்பவம் எப்படித் தன் தரத்தை கீழே கொண்டுபோனது என்று கூறி செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என் என்ற குறளையும் சுட்டிக்காட்டியது அவரின் அப்பழுக்கற்ற நேர்மையைப் படம்போட்டுக் காட்டியது.
அவரின் ராமாயணம் மகாபாரதச் சொற்பொழிவுகள் போல இந்தத் திருக்குறள் 100 என்கின்ற நூலும் கண்டிப்பாக காலம் உள்ளவரை அவர்பேரைச் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
நன்றி நன்றி
செ. இராசமாணிக்கம்
06/10/2023
எது சரி? எது தவறு?
எது சரி? எது தவறு?
இங்கே....
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
சில மதத்தின் வாழ்வியலென்றால்
ஒருவருக்கு பலரென்பதும்
சில மதங்களில் வாழ்வியலே...
கள்ளுண்ணான்மை சரி என்பது
ஒரு மறை சார்ந்த விளக்கமென்றால்
ஒயினை மட்டும் சரி என்பதும்
ஒரு முறை சார்ந்த வழக்கமே....
இங்கே...
பன்றிக்கறியைத் தவறென்போர்
மாட்டுக்கறியை சரியென்பர்
மாட்டுக்கறியை அச்சச்சோ என்போர்
மரக்கறியை பேஸ்பேஸ் என்பர்
வட்டி வாங்குதல் தவறென்போர்
உயிர்க்கொலையின் வகை சொல்வர்...
உயிர்க்கொலையை தவறென்போர்
வட்டி வாங்கிக் கொலை செய்வர்...
சிலருக்கு அருவ வழிபாடு சரி
சிலருக்கு உருவ வழிபாடு(ம்) சரி
சிலருக்கு இறை வழித் தூதரே சரி
சிலருக்கு தூதர் வழி இறையே சரி
நீயும் அவனும் வேறு வேறு என்றால்
அது த்வைதக் கோட்பாடு..
நீயும் அவனும் ஒன்றே என்றால்
அது அத்வைதக் கோட்பாடு..
இல்லவே இல்லை என்றால்
அது நாத்திகக் கோட்பாடு
இங்கே எது சரி? எது தவறு?
சகுனியின் நீதி என்பது
காந்தாரக் கண் சார்ந்தது
கர்ணனின் நீதி என்பது
சாதிய வாய் சார்ந்தது
இராமனின் நீதி என்பது
சீதைக்குத் தீ வைத்தது..
கண்ணகியின் நீதி என்பது
மதுரைக்கேத் தீ வைத்தது...
இங்கே எது சரி? எது தவறு?
அன்றைய தவறு என்பது
இன்றைய சரியாகலாம்
அந்தக் கலிலியோவின் கூற்றைப்போல...
இன்றைய சரி என்பது
நாளைய தவறாகலாம்
இந்த வாக்காளரின் ஓட்டைப்போல..
ஆமாம்...
எது சரி? எது தவறு?
செ.இராசா
எத்தனை எத்தனை சோதனை
05/10/2023
01/10/2023
இன்பச்சுற்றுலா --- அனுபவக் கட்டுரை
கடவுளின் சொந்த பூமியில்----------கேரளா
1. சென்னையில் இருந்து கேரளா நோக்கிய ரயில் பயணத்தில் மிகவும் ஆர்வமுடன் அனைவரும் அவரவர் இடங்களிலோ அல்லது மாறியோ இடம்பிடித்து, காலையில் இறங்கியதும் இரயில்வே நிலையத்தில் கேரள உணவருந்தி இனிதே தொடங்கியது எங்களின் இன்பச் சுற்றுலாவிற்கான முதல்நாள் பயணம்.
2. எங்களுக்கு முன்பே வந்திருந்தும் வாகனப் பழுதால் வேறு வாகனம் வரவழைத்து மீண்டும் எங்களோடு இணைந்த திரு மாப்பிள்ளை சார் அவர்களின் பயணத் தொடக்கமும் மறக்க முடியாத ஒன்றே.
3. ஓட்டுநர் மனோஜ் என்கின்ற காங்கிரஸ் மாவட்டச் செயலாளரின் அறிமுகமும் அவரின் நடத்தையும் ஒட்டுமொத்த கேரள வர்த்தக ரீதியிலான முகத்தின் மொத்த உருவகமாக அமைந்திருந்தது. எங்கள் நிறுவனத்தின் இடமென்று முதலில் கூறி #refresh செய்ய வைத்து அதுவும் பணம் கொடுத்தால்தான் என்ற அறிமுகமே ஒட்டுமொத்த சுற்றுலாவிலும் பணத்தின் பிரதானத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.
4. மூனாறில் கயிற்றில் தொங்கியதும், அந்தரத்தில் மிதிவண்டி ஓட்டியதும், 12D திரையரங்க அனுபவமும் மறக்கவே முடியாது.
5. நண்பரின் வற்புறுத்தலால் சம்மதித்தாலும் அந்த எண்ணைய்க் குளியல் அனுபவமும் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வாக அமைந்தது.
6. மூனாறில் தங்கிய விடுதியென்பது மிகவும் அற்புதமாக இருந்தது. காரணம் அங்கே இருந்த நீச்சல் குளம், உள் மற்றும் வெளி விளையாட்டரங்கு, அருமையான உணவகம், வெளியே ஒரு தேனீர்க்கடை, தனிமையான சூழல்....இப்படி.
7. மாப்பிள்ளை சாரின் மகள் பிறந்தநாளுக்கு அவர் வழங்கிய கேரள உணவும் அதையொட்டி மிக எளிமையாக ஆனாலும் அற்புதமாகக் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்வும் அருமை அருமையே...
8. ராஜ்மலையில் பிரத்தியேக பேருந்தில் சென்று பின்பு நடந்தே செல்கையில் மேகங்கள் வந்துவந்து மோதியதும், வரையாடுகள் தண்ணீர் அருந்தியதைய ரசித்தபடியே சென்றும் பின்பு திரும்பி வருகையில் மழையில் நனைந்ததும் சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தது.
9. தேக்கடி அனுபவம் என்பது சொல்லிக் கொள்வதுபோல் இல்லையென்றாலும் ஒருமுறை அந்தக் கூட்டமான படகின் வழியாக இயற்கையை இரசிப்பதென்பது நன்றாகவே இருந்தது. ஆயினும் பேருந்திற்கு ஒருமுறையும் படகிற்கு ஒருமுறையுமென்று பணம் பறிப்பதென்பது பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையே...
10. ஆலப்புழை படகு சவாரியென்பது அவர்களைப் பொறுத்தவரை பக்கா வியாபாரம். நமக்கு ஒரே ஒருமுறை மட்டும் போக வேண்டிய ஒரு இடம். படகில் 20கிமீ போவதாகப் பொய் சொல்லி வெறும் 3 அல்லது 4 கிமீ பயணத்தை அரைநாள் ஓட்டி முதல் நாள் போய்விட்டு அடுத்த நாள் அதையே 15நிமிடங்களில் ஓட்டிக் கொண்டு வந்து விடுவதென்பது உண்மையில் கசப்பான ஒன்றே. இருப்பினும் கூடுதல் பணம் செலவானாலும் மீண்டும் ஒரு சிறிய படகு வைத்து சில மணிநேரம் பயணம் செய்தது நன்றாகவே இருந்தது.
11. ஆலப்புழையில் இருந்து கொச்சின் பயணம் என்பது மிகவும் மழையாக இருந்ததால் அவ்வளவாக ருசிக்கவில்லை. மழை விடாமல் பெய்தததும், ஓட்டுநர்கள் சீக்கிரமே பயணத்தை முடிக்கத் துடித்ததும், சரியான உணவகம் அமையாததும், இறுதியில் தனித்தனியாக நண்பர்கள் அவரவர் திசையில் பயணித்ததும் மிகவும் கடினமான சூழலாக அமைந்தாலும் அப்படியான கசப்பும்கூட பயணத்தின் ஒரு பகுதியே என்பதால் அதையும் மனமார ஏற்கத்தான் வேண்டியுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து மெட்ரோவில் லூலூ சென்று #மார்க்_ஆண்டொனி திரைப்படம் பார்த்த அனுபவமும் மிகவும் அருமையாக இருந்தது.
12. இந்தப் பயணம் கற்றுக் கொடுத்த பாடம் ஏராளம். இதில் நாங்கள் செலவழித்த பணம் ஏராளம். இங்கேக் குறிப்பிடாத நிகழ்வுகளும் ஏராளம். எல்லாம் எதற்காக?!... பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக...
நமக்கான நினைவலைகளுக்காக...
அவ்வளவே வாழ்க்கை...
இனியும் தொடர்வோம்..
இனிதுற மகிழ்வோம்...
வாழ்க வளமுடன்!
செ. இராசா