கடவுளின் சொந்த பூமியில்----------கேரளா
1. சென்னையில் இருந்து கேரளா நோக்கிய ரயில் பயணத்தில் மிகவும் ஆர்வமுடன் அனைவரும் அவரவர் இடங்களிலோ அல்லது மாறியோ இடம்பிடித்து, காலையில் இறங்கியதும் இரயில்வே நிலையத்தில் கேரள உணவருந்தி இனிதே தொடங்கியது எங்களின் இன்பச் சுற்றுலாவிற்கான முதல்நாள் பயணம்.
2. எங்களுக்கு முன்பே வந்திருந்தும் வாகனப் பழுதால் வேறு வாகனம் வரவழைத்து மீண்டும் எங்களோடு இணைந்த திரு மாப்பிள்ளை சார் அவர்களின் பயணத் தொடக்கமும் மறக்க முடியாத ஒன்றே.
3. ஓட்டுநர் மனோஜ் என்கின்ற காங்கிரஸ் மாவட்டச் செயலாளரின் அறிமுகமும் அவரின் நடத்தையும் ஒட்டுமொத்த கேரள வர்த்தக ரீதியிலான முகத்தின் மொத்த உருவகமாக அமைந்திருந்தது. எங்கள் நிறுவனத்தின் இடமென்று முதலில் கூறி #refresh செய்ய வைத்து அதுவும் பணம் கொடுத்தால்தான் என்ற அறிமுகமே ஒட்டுமொத்த சுற்றுலாவிலும் பணத்தின் பிரதானத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.
4. மூனாறில் கயிற்றில் தொங்கியதும், அந்தரத்தில் மிதிவண்டி ஓட்டியதும், 12D திரையரங்க அனுபவமும் மறக்கவே முடியாது.
5. நண்பரின் வற்புறுத்தலால் சம்மதித்தாலும் அந்த எண்ணைய்க் குளியல் அனுபவமும் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வாக அமைந்தது.
6. மூனாறில் தங்கிய விடுதியென்பது மிகவும் அற்புதமாக இருந்தது. காரணம் அங்கே இருந்த நீச்சல் குளம், உள் மற்றும் வெளி விளையாட்டரங்கு, அருமையான உணவகம், வெளியே ஒரு தேனீர்க்கடை, தனிமையான சூழல்....இப்படி.
7. மாப்பிள்ளை சாரின் மகள் பிறந்தநாளுக்கு அவர் வழங்கிய கேரள உணவும் அதையொட்டி மிக எளிமையாக ஆனாலும் அற்புதமாகக் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்வும் அருமை அருமையே...
8. ராஜ்மலையில் பிரத்தியேக பேருந்தில் சென்று பின்பு நடந்தே செல்கையில் மேகங்கள் வந்துவந்து மோதியதும், வரையாடுகள் தண்ணீர் அருந்தியதைய ரசித்தபடியே சென்றும் பின்பு திரும்பி வருகையில் மழையில் நனைந்ததும் சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தது.
9. தேக்கடி அனுபவம் என்பது சொல்லிக் கொள்வதுபோல் இல்லையென்றாலும் ஒருமுறை அந்தக் கூட்டமான படகின் வழியாக இயற்கையை இரசிப்பதென்பது நன்றாகவே இருந்தது. ஆயினும் பேருந்திற்கு ஒருமுறையும் படகிற்கு ஒருமுறையுமென்று பணம் பறிப்பதென்பது பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையே...
10. ஆலப்புழை படகு சவாரியென்பது அவர்களைப் பொறுத்தவரை பக்கா வியாபாரம். நமக்கு ஒரே ஒருமுறை மட்டும் போக வேண்டிய ஒரு இடம். படகில் 20கிமீ போவதாகப் பொய் சொல்லி வெறும் 3 அல்லது 4 கிமீ பயணத்தை அரைநாள் ஓட்டி முதல் நாள் போய்விட்டு அடுத்த நாள் அதையே 15நிமிடங்களில் ஓட்டிக் கொண்டு வந்து விடுவதென்பது உண்மையில் கசப்பான ஒன்றே. இருப்பினும் கூடுதல் பணம் செலவானாலும் மீண்டும் ஒரு சிறிய படகு வைத்து சில மணிநேரம் பயணம் செய்தது நன்றாகவே இருந்தது.
11. ஆலப்புழையில் இருந்து கொச்சின் பயணம் என்பது மிகவும் மழையாக இருந்ததால் அவ்வளவாக ருசிக்கவில்லை. மழை விடாமல் பெய்தததும், ஓட்டுநர்கள் சீக்கிரமே பயணத்தை முடிக்கத் துடித்ததும், சரியான உணவகம் அமையாததும், இறுதியில் தனித்தனியாக நண்பர்கள் அவரவர் திசையில் பயணித்ததும் மிகவும் கடினமான சூழலாக அமைந்தாலும் அப்படியான கசப்பும்கூட பயணத்தின் ஒரு பகுதியே என்பதால் அதையும் மனமார ஏற்கத்தான் வேண்டியுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து மெட்ரோவில் லூலூ சென்று #மார்க்_ஆண்டொனி திரைப்படம் பார்த்த அனுபவமும் மிகவும் அருமையாக இருந்தது.
12. இந்தப் பயணம் கற்றுக் கொடுத்த பாடம் ஏராளம். இதில் நாங்கள் செலவழித்த பணம் ஏராளம். இங்கேக் குறிப்பிடாத நிகழ்வுகளும் ஏராளம். எல்லாம் எதற்காக?!... பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக...
நமக்கான நினைவலைகளுக்காக...
அவ்வளவே வாழ்க்கை...
இனியும் தொடர்வோம்..
இனிதுற மகிழ்வோம்...
வாழ்க வளமுடன்!
செ. இராசா
No comments:
Post a Comment