07/10/2023

நடிகர் சிவகுமாரின் நூல்


 


திருக்குறள் சம்பந்தமான எந்த நூலாக இருந்தாலும் வாங்கும் பழக்கமுள்ள எனக்கு, வள்ளுவ வழியில் வாழ்ந்தவர்கள் என்று 100 பேர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் கூறி அதற்குப் பொருத்தமான 100 திருக்குறள்களையும் எடுத்துக்காட்டிய நடிகர் மற்றும் பன்முகக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 என்ற நூல் கிடைத்ததென்பது யாம் செய்த பாக்கியமே.

(புத்தகம் கிடைக்க உதவிய தம்பி ச.ரே.அ. மாயோன் அவர்களுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்)

குறிப்பாக அவர் அம்மாவைப் பற்றிக் கூறும்போது, ஆரம்பத்தில் சென்னைக்கே வரமாட்டேன் என்று சொன்ன அவர்களின் அம்மா, பிற்காலத்தில் ஆசையோடும் பரிவோடும் "ஐயா...நீ சென்னையில் தங்குகின்ற அறை வெறும் 10 க்குப் பத்தாக இருந்தாலும் அதில் நீ கட்டில் மேல் படுத்துக்கொண்டால் நான் கட்டிலுக்கு அடியில் ஒரு நாய்போல் படுத்துக்கொண்டு உனக்கு ஆக்கிப்போடுவேன் ஐயா...என்னைக் கூட்டிப்போவியா.." என்று சொல்லும் இடத்தில் உண்மையில் நானும் அழுதுவிட்டேன்.

எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், சாண்டோ தேவர், காந்தி, சில்வர் டங் சாஸ்திரி, தெரெசா, மண்டேலா.....என்று பெரிய ஆளுமைகள் முதல் வெளியே தெரியாத சின்னச் சின்ன நபர்கள் வரை அனைவரையும் கூறியது மிகவும் அருமை. குறிப்பாக அவரைப் பற்றியே நடிகர் சிவகுமார் அந்த செல்பி சிவகுமார் ஆன சம்பவம் எப்படித் தன் தரத்தை கீழே கொண்டுபோனது என்று கூறி செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என் என்ற குறளையும் சுட்டிக்காட்டியது அவரின் அப்பழுக்கற்ற நேர்மையைப் படம்போட்டுக் காட்டியது.

அவரின் ராமாயணம் மகாபாரதச் சொற்பொழிவுகள் போல இந்தத் திருக்குறள் 100 என்கின்ற நூலும் கண்டிப்பாக காலம் உள்ளவரை அவர்பேரைச் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

நன்றி நன்றி

✍️செ. இராசமாணிக்கம்

No comments: