இத்தனை வயதாகிவிட்டது
இன்னும் குறையவில்லை
இந்தக் கல்லின் மேலுள்ள ஈர்ப்பு...
இது...
சொக்கட்டான் ஆடிய கல்லா? இல்லை
சொக்கனாய் பாவித்த கல்லா?
இது
அம்மியாய் உருண்ட கல்லா? இல்லை
அம்மனாய் நினைத்த கல்லா?
ஆமாம்...
இந்த பிரபஞ்சப் பாத்திரத்தில்தான்
எத்தனை எத்தனை சூரியக்கற்கள்?!
இந்த சூரிய ஆட்டுக்கல்லில்தான்
எத்தனை எத்தனை கோளக்கற்கள்?
ஒற்றைப் புவிக்கல்லில்
ஒய்யாரமாய் உலாவருகிறோமே...
இந்தக் கற்கப்பலுக்கு
ஓய்வே இல்லையா?!
வெள்ளை கல்லொன்றை
வெண்ணிலவாய்ச் சொல்கிறோமே
அங்கே பாட்டி வடைசுட்ட வீட்டில்
மின் விளக்கே இல்லையா?!
அது என்ன
அப்பாவின் விரலில்...
இராசிக் கல்லென்று
எப்போதும் ஒரு கல்..
அது என்ன
அம்மாவின் மூக்கில்
மூக்குத்திக் கல்லென்று
எப்போதும் ஒரு கல்...
ஆ......
அடியேனின் வாயிலும் ஓர் கல்..
எத்தனை முறை அலசினாலும்
எப்படியோ வந்துவிடுகிறது..
அரிசிக்குள் மறைந்த
சில கலப்படக் கல்
ஆனாலும்..
கல்லைக் குறைவாக எண்ணாதீர்
கல் மூத்திரப் பையை அடைத்தால்
என்னாகும் தெரியுமா?
கல்லைத் தாழ்வாக மதிப்பிடாதீர்
கல் வைரக் கல்லாய் இருந்தால்...
அதன் மதிப்பு தெரியுமா?
ஓர் ஆச்சரியம்..
கல்லுக்குள் சிலை காணும்
சிற்பியின் கண்கள்!
அட மீண்டும் ஆச்சரியம்
சிலையைக் கல்லாகவே காணும்
சிலரின் கண்கள்!
கல்..
கல்லிற்குள் உள்ள நுட்பத்தைக் கல்..
கல் உடைபட்டால் அணு
அணு உடைபட்டால்?
அது அளப்பரிய சக்தி
ஆம்..
சிவமும் சக்தியும்
வெறும் சொற்களல்ல
அது கற்களுக்குள்
பொதிந்த தத்துவங்கள்
புரிந்தால் ஆத்திகம்..
புரியாவிடில் நாத்திகம்...
இனியும்....
கல்லானாலும் கணவன் என்று
கல்லை மட்டப்படுத்தாதீர்..
இதை நான்..
கணவனாய்ச் சொல்லவில்லை
கல்லாய்ச் சொல்கிறேன்...
என்ன தேடுகிறீர்
அடிக்க கல்லையா?!
அதற்கு முன் பொறுங்கள்
இயேசுவின் அசிரீரி கேட்கிறது;
"பாவம் செய்யாதவர்கள் மட்டுமே"
ஆமென்...
செ. இராசா
கல்கண்டு செய்தகவி கற்கண்டா இல்லையா
சொல்லுங்கள் பின்னூட்டம் தந்து
No comments:
Post a Comment