29/07/2020

குறளுரையாடல் 5

 


  #குறளுரையாடல்_5

#நான்_1
கற்றதைக் கற்றதுபோல் கற்போர்க்குக் கற்பித்துக்
கற்றோரில் நிற்போராய்க் காட்டு

#ஐயா_2
காட்டுக்குள் வாழ்ந்தாலும் நல்வீட்டில் ஆழ்ந்தாலும்
நாட்டுக்குள் நீதிநெறி நன்று.

#நான்_3
நன்றென்று தோன்றுவதை நன்றாகப் பற்றுவோர்
என்றைக்கும் வாழ்வார்கள் பார்

#ஐயா_4
பாருக்குள் நன்னாடு பாரதம் நம்நாட்டின்
ஊருக்குள் நம்மண்நல் ஊர்

#நான்_5
ஊருலகம் போற்றும் உயர்வாழ்வு வேண்டுமெனில்
சீருடன் செய்வாய் செயல்

#ஐயா_6
செயலாற்றும் ஞாலத்துள் செந்நீரில் வாழும்
கயலுட் புகாநீர்போல் கல்

#நான்_7
கல்லுக்குள் உள்ள(க்) கருத்தை உணர்ந்தோர்க்கு
கல்லும் கடவுளே காண்

#ஐயா_8
காண்பதுவும் கேட்பதுவும் கட்செவிமுன் மெய்யல்ல
மாண்பதுவால் ஆய்வது மாண்பு

#நான்_9
மாண்புள்ள மாந்தராய் மண்ணிலே வாழ்வோரை
காண்கின்றார் தெய்வமாய் காண்

#ஐயா_10
காண்பதுவும் கண்டதுவும் கண்காணப் போவதுவும்
வீண்மனமோ கேளாநீ வீண்.

#நான்_11
வீண்பேச்சு பேசிடும் வீணர்கள் கூட்டத்தை
காண்கையில் தோன்றும் கசப்பு

#ஐயா_12
கசக்கும் நுனிக்கரும்பும் காலங் கடக்க
அசத்தல் இனிப்பளிக்கும் ஆழ்

#நான்_13
ஆழ்ந்து படித்தபடி அப்படியே ஏற்றிவிட்டு
வாழ்வைப் படித்திட வா

#ஐயா_14
வாவென்று சொன்னேன் வணங்கி விழிமூடி
போவென்று சொல்லேன் ஓம்

#நான்_15
ஓமென்ற மந்திரத்தில் ஊடாடும் மெய்ப்பொருளை
நாமென்றும் எண்ணினால் நன்று

#ஐயா_16
நன்று நினைந்துநீ நல்லொழுக ஆசையை
வென்று முடிக்கவுனை வெல்

#நான்_17
வெல்வோர்க்கே இவ்வுலகம் வென்றிடவே வேண்டுமென
உள்ளத்தில் என்றைக்கும் ஊன்று

#ஐயா_18
ஊன்றிக் களித்திடும் உள்ளத்தில் மெய்யறிவு
தோன்றி யொளிரும் ஒளி.

#நான்_19
ஒளியோடும் வேகத்தில் உள்வாங்கிப் பாட
அளிப்பாயே என்னுள் அருள்

#ஐயா_20
அருளைப் பொழியும் அருந்தமிழ் உள்ள
இருளை ஒழிக்கும் இருப்பு.

✍️மருத்துவர் ஐயாவுடன் & செ.இராசா

No comments: