28/12/2017

அந்த வரிசையில் நானும்---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (85) பங்குபெற்ற கவிதை


அந்த வரிசையில் நானும் நின்றேன்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!
அந்த வரிசையில் நானும் நிற்பேன்!
எந்த வரிசையில் என்றா கேட்கின்றீர்?!


சொந்த நாட்டில் வேலையும் இன்றி
சொந்த பந்தத் துணையும் இன்றி
நொந்து நின்ற இளைஞர்கள் பலர்!
அந்த வரிசையில் நானும் நின்றேன்!

சொந்த பந்தம் சுகமாய் வாழ்ந்திட
நொந்த வலிகளைப் படிப்பினை ஆக்கியே
சொந்தக் காலில் வென்றோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நின்றேன்!

வெந்தது எதையோ வயிற்றில் நிறைத்து
வந்ததை சேமித்து செலவைக் குறைத்து
வந்ததில் ஈகைகள் செய்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

வந்த சோதனை யாவும் பொறுத்து
எந்த நிலையிலும் கடன் வாங்காது
சிந்தையில் சிறப்பாய் வாழ்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

தந்தை தாயை என்றும் மதித்து
வந்த மனைவியைக் கலங்க விடாது
நிந்தை செய்யாமல் வாழ்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

இந்த நிலையிலே நின்று விடாது
இந்தப் பிறவியில் முழுமை பெறாது
அந்தம் காணாத சான்றோர் சிலர்!
அந்த வரிசையில் நானும் நிற்பேன்!

——செ. இராசா——-

No comments: