களஞ்சியம்
கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள்
(06.10.2017)
பிரபஞ்சம் முழுவதும் சுற்றிவர-மனம்
சிறகுகள் எதற்கெனக் கேட்டிடுமே!
ஒவ்வொரு கணத்திலும் இடம்மாறி-மனம்
ஒளியின் வேகத்தில் விரைந்திடுமே!
எங்கும் எளிதில் செல்கின்ற-மனம்
எதையும் உலகில் செய்திடுமே!
எரிபொருள் இல்லாமல் பாய்கின்ற-மனம்
எதிரியின் மனதையும் வென்றிடுமே!
அழகினை அதிகமாய் ரசிக்கின்ற-மனம்
அருவியாய் கவிதைகள் வடித்திடுமே!
அன்பினை அதிகமாய்ப் பொழிகின்ற-மனம்
அமைதியில் நாளும் நிலைத்திடுமே!
காதலின் போதையில் பறக்கின்ற-மனம்
காலத்தை நேரத்தை மறந்திடுமே!
களிப்புடன் பொழுதினைக் கழிக்கின்ற-மனம்
காலத்தை நீட்டிக்க வேண்டிடுமே!
சொல்களில் நஞ்சினைத் தூவுகின்ற-மனம்
கொல்வதில் காலனை வென்றிடுமே!
வார்த்தையில் வாஞ்சையாய்ப் பேசுகின்ற-மனம்
பார்த்திடும் எவரையும் வென்றிடுமே!
துன்பத்தில் துவழ்ந்து மடிகின்ற-மனம்
துணைக்கு இறைவனை வேண்டிடுமே!
கடவுளை மனிதனில் காண்கின்ற-மனம்
கடவுளின் இருப்பிடம் ஆகிடுமே!
கழுகாய் உயரத்தில் பறக்கின்ற-மனம்
கவனமாய் இலக்கினை வென்றிடுமே!
சிறகுகள் எதற்கெனக் கேட்கின்ற-மனம்
சிறகில்லா பீனிக்சாய் உயிர்த்தெழுமே!
No comments:
Post a Comment