17/09/2017

கடந்து வந்த பாதைகள்--- களஞ்சியம் கவிதைப் போட்டி-71 (வெற்றிக் கவிதை)

71வது கவிதைப்போட்டியில் என் கவிதையை முதலாவதாகப் தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத், சேலம், அவர்களுக்கு என் மனம், மொழி மற்றும் மெய்யால் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எமக்கு வாய்ப்பளித்த தமிழ்ப்பட்டறை தளத்திற்கும், தலைவர் சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.












கடந்து வந்த பாதைகள்
********************
தமிழினமே! தமிழினமே!
தன்மானத் தமிழினமே!
தனிமனிதத் துதியாலே
தனைமறந்த தமிழினமே!


கடந்துவந்த பாதைதனை
மறந்துவிட்ட தமிழினமே!
நடந்துவந்த சுவடிகளை
தொலைத்துவிட்ட தமிழினமே!

அறிவு செல்வம் வீரமென்று
அனைத்திலுமே முதன்மை கொண்டு
அகிலத்தையே ஆட்டிவைத்த
ஆளுமையை ஏன் மறந்தாய்?

செறிவுநிறை நூல்கள் கொண்டு
செழுமைமிகு சிந்தை கொண்டு
செங்கோலில் தமிழ் பிடித்து
செலுத்தியதை ஏன் மறந்தாய்?

நீர் சேர்க்க அணையமைத்து
நீர் வடிய வழியமைத்து
நீர் செய்த மேலாண்மை
நீர் இன்று ஏன் மறந்தாய்?

வானுயர கோவில்கட்டி
கோனுயர கோட்டைகட்டி
ஊணுயற கூடம்கட்டி- இன்று
தானுயர ஏன் மறந்தாய்?

தமிழ்மூன்றும் கற்காமல்
தமிழ்மறையைப் பயிலாமல்
தமிழனாக நிற்காமல்
தமிழ்மரபை ஏன் மறந்தாய்?

கடந்துவந்த பாதைதனை
நினைந்திடுவாய் தமிழினமே!
குனிந்துகுனிந்து வீழாமல்
நிமிர்ந்துடுவாய் தமிழினமே!

------- செ. இராசா----
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1904554636530110/ 

கனவே கனவே கலையாதே...


கனவே கனவே கலையாதே!
கானலாய் நீயும் மறையாதே!
கிழமை ஒருநாள் தவறாதே!
கீதைபோல் உரைத்திட மறவாதே! I
குணத்தின் தன்மையில் குன்றாதே!
கூறா விடயங்கள் கூறாதே!
கெட்டதை என்னுள் காட்டாதே!
கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே!
கைகள் கொடுப்பதைத் தடுக்காதே!
கொடுமையின் நிகழ்வுகள் கூறாதே!
கோபத்தில் வேகம் கொள்ளாதே!
கௌரவர் மாமனாய் நடக்காதே!

அப்துல்கலாம் ஐயா கண்டதெல்லாம்
ஆயிரம் அற்புதக் கனவுகளே...
இந்திய தேசம் உயிர்த்தெழவே
ஈகையின் நாயகன் கனவுகண்டார்...
உண்மையில் இளைஞர்கள் ஒளிபெறவே
ஊக்கங்கள் தந்தே மகிழ்வுற்றார்...
என்றும் கனவுகள் கலையாமல்
ஏழையின் தோழனாய் காட்சிதந்தார்...
ஐயா கனவுகள் நினைவாக
ஒவ்வொரு நாளும் முயன்றிடுவாய்....
ஓர் கனவதுவாய் கண்டிடுவாய்...
ஓளதாரியம் அஃதென வாழ்ந்திடுவாய்..

கனவே கனவே கலையாதே...
கலாம்ஐயா கனவினை மறவாதே...

எழுதுகோலுக்கு ஒரு கடிதம்


கரங்கள் இரண்டாலும்
கற்களில் செதுக்கிய
கல்உளி எழுதுகோலே...

பல்லாயிரம் கவிதந்த
பனைஓலைச் சுவடிகளின்
எழுத்தாணி எழுதுகோலே...

தொட்டுதொட்டு மை எடுத்து
தோல்துணி தொட்டெடுத்த
அக்கால எழுதுகோலே...

கழுத்தளவு மை நிரப்பி
காகிதத்தில் வடிக்கின்ற
இக்கால எழுதுகோலே...

எத்தனையோ காலங்களாய்
எழுத்துக்கள் உருவாக்கிய
எழுதுகோல் நண்பர்களே.....

எப்படி நான் சொல்லிடுவேன்?!
என்னுடைய நன்றியினை...

இப்படியே பதிக்கின்றேன்....

இப்படிக்கு,

எழுத்துக்கள்.

கடவுள்- வார்த்தையின் பொருள்


உள்ளே கடக்கின்ற உள்ளங்களே
உண்மையை உணர்ந்திட முடியுமென்று
உள்கட உள்கட என்றனராம்!

"உள்கட" என்கின்ற தமிழ்சொல்லே
"கடவுள்" என்று மருவியதாம்!

கடந்து உள்ளே செல்வதாலே
கடவுள் என்றே அழைத்தனராம்!

வெளியே வெளியே தேடாமல்
உள்ளே உள்ளே தேடிடுவோம்!

10/09/2017

{மனசு - மாசு= மனிதம்}


மனிதனின் மனது இதமானால்
மனிதம் மலர்ந்து மணம்வீசும்!
மனிதனுள் மனிதம் இருந்துவிட்டால்
மனித இனமே மகிழ்ந்தோங்கும்!

மனத்தை இதமாய் வைப்பதற்கு
மனத்தின் மாசுகள் அழித்திடனும்!
மனத்தின் மாசுகள் ஒழித்துவிட்டால்
மனிதனில் மனிதம் வெளியில்வரும்!

மறைந்துள்ள மாசுகள் அறிவதற்கு
மறைநூல் திருக்குறள் அதுபோதும்!
மறைநூல் மதிநூல் ஆகிவிட்டால்
மனநூல் மாசுகள் நீங்கிவிடும்!

------செ. இராசா----

எது கவிதை?


கசக்கி நசுக்கி அமுக்கி அழுத்தி
உருண்டு புரண்டு முரண்டு திரண்டு
உடைந்து குடைந்து நுழைந்து புகுந்து
செதுக்கி எடுப்பது கவிதையா?

இல்லை

கருத்து புதைத்து வெடித்து முளைத்து
சிலிர்த்து துளிர்த்து செழித்து வளர்த்து
மலர்ந்து விரிந்து மணந்து கனிந்து
பிறந்து வருவது கவிதையா?

07/09/2017

காதலரே....


இன்றைய தலைமுறைக் காதலரே
இன்பத்தில் எல்லையை தாண்டாதீர்!

எல்லைகள் தாண்டிடும் காதலரே
எதிலும் வரைமுறை மீறாதீர்!

வரைமுறை மீறிடும் காதலரே
வருவதை கருவதை செய்யாதீர்!

கருவதை செய்திடும் காமுகரே
கடவுளால் அழிவீர் மறவாதீர்!

பேசும் முன் யோசி




பேசிடுவீர்.....பேசிடுவீர்...
நல்மொழியில் பேசிடுவீர்
பேசுபவர் மொழியெதுவோ
அம்மொழியில் பேசிடுவீர்...

வன்மொழியோ மென்மொழியோ
கண்மொழியோ மெய்மொழியோ
எதிராளியின் மொழியெதுவோ
அம்மொழியில் பேசிடுவீர்...

சுடுஞ்சொற்கள் சொல்பவரா?
கடுஞ்சொற்கள் பேசிடுவீர்...

மென்மையாகக் கதைப்பவரா?
மெதுவாகப் பேசிடுவீர்...

பொல்லாங்கு சொல்பவரா?!
பொறுப்பாகப் பேசிடுவீர்..

அகங்காரம் பிடித்தவரா?!
அலட்சியமாய்ப் பேசிடுவீர்...

அரசியல் கதைப்பவரா?!
அளவாகப் பேசிடுவீர்...

ஆண்மீகம் அறிந்தவரா?!
ஆழமாகப் பேசிடுவீர்...

நாடகமாய் நடிப்பவராக?!
நாசூக்காய்ப் பேசிடுவீர்...

பொய்பேசித் திரிபவரா?
மெய்பேச்சை தவிர்த்திடுவீர்...

பொறாமை கொண்டவரா?!
பொருளிருப்பை மறைத்திடுவீர்

வீண்பேச்சு கதைப்பவரா?!
விலகியே இருந்திடுவீர்...

தம்பட்டம் அடிப்பவரா?!
தம்குறையைச் சொல்லாதீர்...

உண்மையாக இருப்பவரா?!
உரிமையோடு பேசிடுவீர்...

கருத்தாகச் சொல்பவரா?!
கவிதையாலே பேசிடுவீர்...

(தொடரும்)

----------செ. இராசா----------

அன்பு செய்


அன்பு சிறுத்த உள்ளத்திலே
தவறு பெரியதய்யா...
அன்பு பெருத்த உள்ளத்திலோ
தவறு சிரியதய்யா...

தவறு செய்யா மனிதர்களே
உலகில் இல்லையய்யா....
தவறை உணரா மனிதர்களோ
உலகில் தொல்லையய்யா....

மன்னிக்கின்ற மனிதர்களே
மண்ணில் தெய்வமய்யா....
மன்னிக்காத மனிதருக்கோ
மாண்பு மறையுமய்யா...

அன்பு என்ற ஆயுதமே
அதிகத் தேவையய்யா...
அன்பு மட்டும் இல்லையென்றால்
அகிலம் இல்லையய்யா...

அன்பில் நகைக்கும் மனிதருக்கு
ஏது துன்பமைய்யா....
அன்பாய் வாழும் மனிதருக்கு
எதுவும் இன்பமைய்யா....

---செ. இராசா---

புரிதல் (புரிந்தவர்களுக்கு மட்டும்)


 

அவனா அப்படி நடந்தான்?
அவனும் அப்படி நடந்தான்
அவனே அப்படி நடந்தான்.

ஆமாம், அவனேன் அப்படி நடந்தான்?

அன்பின் மிகுதியால் பணிந்தான்
பணிந்ததால் அதிகமாய் குனிந்தான்
குனிந்ததால் நிறையவே இழந்தான்
இழந்தபின் உண்மையை உணர்ந்தான்
உணர்ந்ததால் மெய்யினை அறிந்தான்
அறிந்ததால் அப்படி நடந்தான்.

ஆனாலும்...
அவனேன் அப்படி சொன்னான்?

தீயென்று சொன்னான்...
அதனாலென்ன?
தீதொன்றும் அறியாத ஒருவன்
தீயென்று சொன்னால்தான் என்ன?!

வார்த்தைகள் பலவாறு சொன்னான்.....
அதனாலென்ன
அவன்தானே சொன்னான்?

சொற்களின் பொருள்கள்
சொல்பவனைப் பொருத்தும் வேறுபடும்!
சொல்பவன் மனநிலை பொருத்தும் வேறுபடும்!
சொல்லும் காலத்தைப் பொருத்தும் வேறுபடும்!

அவனேன் அப்படி நடந்தான்?!
.........
நிழலாய் தொடர்ந்தால் தெரியும்
நிஜமே அசலெனப் புரியும்

------செ. இராசா-------

எத்தனை எத்தனை மனிதர்கள்?!


எத்தனை எத்தனை மனிதர்கள்-இங்கே
எத்தனை குணங்களில் இருக்கின்றார்?!
எப்படி இப்படி இருக்கின்றார்- என்றே
எப்பவும் எவரும் வியக்கின்றார்?!

செல்வம் குறைந்த மனிதர்களில்- பலர்
சிறப்புடன் மகிழ்வுடன் வாழ்கின்றார்!
செல்வம் நிறைந்த மனிதர்களில்- பலர்
சிந்தையில் வறுமையில் உழல்கின்றார்!

பிறவி குணத்தை மேம்படுத்தி- பலர்
பிறர்நலம் காத்திட முயல்கின்றார்!
பிறவி குணத்தை பாழாக்கி- பலர்
படுகுழி அடியினில் வீழ்கின்றார்!

கடவுளை மனிதனில் காணாமல்- பலர்
கடவுளைக் கற்களில் தேடுகின்றார்!
இறைநிலை யாதெனப் புரியாமல்- பலர்
இறைவனை எங்கோ தேடுகின்றார்!

பணம்பணம் என்றே நாள்தோறும்-பலர்
பணங்களை தேடியே ஓடுகின்றார்!
கணங்களை இனிதாய் மாற்றாமல்- பலர்
குணங்களில் பிணம்போல் நாறுகின்றார்!

-----செ. இராசா----

நின்னைச் சரணடைந்தேன்


பாஞ்சால மன்னரின் வேள்வியிலே
பாஞ்சாலி நானும் அவதரித்தேன்!
பார்த்தனின் கழுத்தில் மாலையிட்டே
பாண்டவர் ஐவரை மணமுடித்தேன்
பகடையால் என்னைத் தவறவிட்ட
பதிகளால் நானும் மனமுடைந்தேன்!

கயவர்கள் நிறைந்த அரங்கினிலே
கலங்கிய விழியால் கூறுகின்றேன்!
அரங்கம் முழுவதும் நிரம்பியுள்ள
அரக்கர்கள் கூட்டத்தைக் காணுகின்றேன்!
உடையினைக் களையவே வருபவனை
தடையிட்டு நிறுத்த எவருமில்லை!

கண்ணா நின்னைச் சரணடைந்தேன்
கற்பின் மானத்தைக் காத்தருள்வாய்!
கோவிந்தா நின்னைச் சரணடைந்தேன்
கோபியரைப் போலவே இரட்சிப்பாய்!
மாதவா நின்னைச் சரணடைந்தேன்
மாயவா மின்னலாய் உடன்வருவாய்!

கண்ணா... கண்ணா........
கோவிந்தா...கோவிந்தா...
மாதவா...மாதவா..........

எங்கெங்கு காணினும்------களஞ்சியம் கவிதைப் போட்டி-67 (வெற்றிக் கவிதை)

67வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கவிதை.
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும் கவிதையை தெரிவு செய்த நடுவர் கோபிநாத் சேலம்
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1891641321154775/



------------------------------------
எங்கெங்கு காணினும்
*******************
எங்கெங்கு காணினும் இறை வடிவம்
சிந்தைக்கு விளங்கினால் சிறப்பாகும்!

எப்பொருள் யாவிலும் இறை வடிவம்
சிறப்புடன் இருப்பதே மெய்யாகும்!


இறையும் அணுவும் ஓர் வடிவம்
அறிந்தால் அனைத்தும் தெளிவாகும்!
இருப்பும் ஆற்றலும் மறை வடிவம்
அணுத்துகள் வெளிப்படப் புலனாகும்!

அறிவியல் விளக்கிடும் அணு வடிவம்
எலக்ட்ரான் புரோட்டான் கூட்டாகும்!
ஆண்மீகம் உணர்த்திடும் அணு வடிவம்
சிவமும் சக்தியுமாய் சேர்ந்திருக்கும்!

பிரபஞ்ச ரகசிய ஒலி(ளி) வடிவம்
வெடிப்புதத்துவம் விளங்க வைக்கும்!
பிரபஞ்ச காரண அணு வடிவம்
வெளிப்படும் சக்தியில் மறைந்திருக்கும்!

எதிர்ப்படும் அனைத்திலும் ஒரு வடிவம்
அணுவால் ஆனது தெளிவாகும்!
எதிரியும் இறைவனின் மறு வடிவம்
அறிந்தால் அகிலமே சிறந்தோங்கும்!

--------செ. இராசா--------

(போட்டிக்கான என் இரண்டாம் படைப்பு)

எங்கெங்கு காணினும்
********************
எங்கெங்கு காணினும் நல்லவரா?!
என்றெனில் நீயொரு அப்பாவி!
எங்கெங்கு காணினும் கெட்டவரா?!
என்றெனில் நீயோரு பெரும்பாவி!

எங்கெங்கு காணினும் இன்பங்களா?!
என்றெனில் நீயொரு பெருஞானி!
எங்கெங்கு காணினும் துன்பங்களா?!
என்றெனில் வினையால் விழுந்தாய்நீ!


எங்கெங்கு காணினும் முதியோர்களா?!
என்றெனில் தேவை புதுரத்தம்!
எங்கெங்கு காணினும் இளைஞர்களா?!
என்றெனில் தேவை நிதானம்!

எங்கெங்கு காணினும் அறிஞர்களா?!
என்றெனில் தேசமே சிறந்தோங்கும்!
எங்கெங்கு காணினும் மூடர்களா
என்றெனில் தேசமே சீர்குழையும்!

எங்கெங்கு காணினும் புத்தர்களா?!
என்றெனில் வாழ்விடம் சொர்க்கமாகும்!
எங்கெங்கு காணினும் பித்தர்களா?!
என்றெனில் பாவமே செழித்தோங்கும்!

----- செ. இராசா------
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1891641321154775/ 

சுதந்திரமே எங்கே உறங்குகின்றாய்?-----களஞ்சியம் கவிதைப் போட்டி-66 (வெற்றிக் கவிதை)


66வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், கவிதையை தெரிவு செய்த நடுவர் கவிஞர் வாலிதாசன்
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890108977974676/...


உயிர்களை இழந்துபெற்ற
உரிமைச் சுதந்திரமே- நீ
உதிரத்தை உரிஞ்சுகின்ற
ஊழல் தலைவர்களால்-இங்கே
உறங்கித்தான் போனாயோ?!

தமிழின உணர்வளி(ழி)த்த
திராவிடச் சுதந்திரமே- நீ
தமிழனை வேரறுக்கும்
தீநெறித் தலைவர்களால்-இங்கே
திக்கெற்று நின்றாயோ?!

கண்ணியம் காத்திடாத
காதல் சுதந்திரமே- நீ
காமம் கழிந்தவுடன்
கழற்றிவிடும் காமுகரால்- இங்கே
கற்பினையும் இழந்தாயோ?!

சாதிகள் வளர்க்கின்ற
சாதியச் சுதந்திரமே- நீ
சமநிலை அழிக்கின்ற
சாதியத் தலைவர்களால்- இங்கே
சமத்துவம் இழந்தாயோ?

அடக்கிடத் துடிக்கின்ற
அதிகாரச் சுதந்திரமே- நீ
அமைதியைக் குழைக்கின்ற
அரசியல் தலைவர்களால்-இங்கே
அனைத்தையுமே இழந்தாயோ?!

ஊறுகள் செய்யாத
உண்மைச் சுதந்திரமே- நீ
உறவுகள் மேம்பட
உதவிகள் செய்யாமல்- இங்கே
உறங்கித்தான் போனாயோ?!

-----செ.இராசா-----
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890108977974676/ 

காலச் சக்கரத்தின் சுழற்சியில்;


கெட்டகுணம் நல்லகுணமாக மாறினால் அது மகிழ்ச்சி!
நல்லகுணம் கெட்டகுணமாக மாறினால் அது அதிர்ச்சி!
கெட்டகுணம் கெட்டகுணமாகத் தொடர்ந்தால் அது பேரதிர்ச்சி!
நல்லகுணம் நல்லகுணமாகத் தொடர்ந்தால் அது பெருமகிழ்ச்சி!

காரணம் யாரென்பீர்?!


செல்லரித்த புகைப்படத்தில்
புல்லரிக்கும் புன்சிரிப்பால்
காட்சிதரும் குழந்தையது
காண்போரின் கண்களிலே
கவிதையாக மலர்வதற்கு
காரணம் யாரென்பீர்?!

கருப்பு வெள்ளை நிறம் மறைத்து
நெருப்பு வண்ண ஒளிவீசி
கண்கவர் ஓவியமாய்
கட்டழகு காட்சியாகி
கண்களிலே விரிவதற்கு
காரணம் யாரென்பீர்?!

----செ.இராசா----

மின்மினி வெளிச்சத்தில்--களஞ்சியம் கவிதைப் போட்டியில் (64) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை)


மின்மினி பூச்சியின் வெளிச்சத்திலும்
மின்னலாய் மின்னிடும் என்னவளே!
எப்படி சொல்லுவேன் உன்னழகை...
என்றுமே நீயொரு பேரழகே!

காந்தமாய் இழுக்கின்ற கண்ணழகோ
காவியம் படைத்திட தூண்டுதடி!
கடலலை நளினத்தின் முன்னழகோ
கண்களில் கவிதைகள் பாடுதடி!

விருட்சமாய் விளைந்துள்ள பின்னழகோ
விருப்பத்தின் விதைகளை விதைக்குதடி!
வெள்ளொளி வெளிச்சத்தின் பல்லழகோ
உள்ளொளி வெளிப்பட வைக்குதடி!

நாணத்தில் சிவக்கின்ற மேலழகோ
வானத்துச் சூரியனை மிஞ்சுதடி!
வெட்கத்தில் சிரித்திடும் சிரிப்பழகோ
வெட்டிடும் மின்னலாய் வெட்டுதடி!

செவ்விதழ் கொஞ்சிடும் நின்மொழியோ
செந்தமிழ் பேசிடும் குறள்களடி!
செய்கையில் பேசிடும் கண்மொழியோ
செப்பிடும் ஆயிரம் கவிதையடி!

காதலி நீயில்லா நேரங்களோ
காலனின் நேரமாய் மாறுதடி!
காட்சியாய் நீவரும் நேரங்களோ
காலமே காணாமல் போகுதடி!

------செ. இராசா-------

மனிதர்களும் மாக்களும்



எத்தனை எத்தனை மனிதர்களோ
அத்தனை அத்தனை குணங்களம்மா!
எங்ஙனம் நற்குண மனிதர்களோ
அங்ஙனம் ஆனந்தம் தோன்றுமம்மா!

எளிமை பொறுமை கொண்டவரே
மனிதம் போற்றிடும் மாந்தரம்மா!
என்றும் பொறாமை கொள்பவரோ
மண்ணில் பிறந்த மடையரம்மா!

அன்பும் பண்பும் நிறைந்தவரே
அகிலம் விரும்பிடும் மனிதரம்மா!
ஆசையும் பற்றும் நிறைந்தவரோ
அனைத்தும் இருந்தும் ஏழையம்மா!

கற்பும் நட்பும் காப்பவரே
கடவுள் விரும்பிடும் புனிதரம்மா
கடமையில் கஞ்சன் ஆனவரோ
கடைசியில் வீழ்வது நிகழுமம்மா!

அனைத்திலும் நிறைகளைக் காண்பவரே
அகத்தினில் மகிழ்ந்திடும் மக்களம்மா!
அனைத்திலும் குறைகளைக் காண்பவரோ
அமைப்பினில் மனிதரெனும் மாக்களம்மா!

-----செ. இராசா----/

ஆடை----குறுங்கவிதை

ஆடை குறைந்ததால்
அகம் மகிழ்ந்தது
காந்தியவாதிக்கு!

ஆடையை நீக்கியதால்
அழ வைத்தது
வெங்காயம்!

ஆடையின் பின்னால்
ரகசியம் மறைத்தது
ஆவின் நெய்!

----செ. இராசா----

பயணம்


பயணம் செல்வது புதிதில்லை!
பலமுறை சென்றும் புளிப்பதில்லை!

பளிச்சிடும் முகங்கள் பல ரகங்கள்!
பழகிடும் முகங்கள் நம் ரகங்கள்!

பணத்தின் பயணமும் நிற்காது!
பயணத்தில் பணமும் நிற்காது!

பயணத்தின் நிகழ்வுகள் நினைவாகவும்!
பயணத்தின் நினைவே நிலையாகும்!

---செ.இராசா----

விடுமுறை



விடுகதை வினவிடும் வாழ்வில்- மனம்
விடைபெற விடுமுறை வேண்டும்!
விடுதலை வேண்டிடும் வாழ்வில்- மனம்
விடுபெற விடுமுறை உதவும்!

ஓடிடும் உழைத்திடும் எவர்க்கும்- மனம்
ஒய்வுற விடுமுறை வேண்டும்!
ஓதிடும் உரைத்திடும் நபருக்கும்- மனம்
ஓங்கிட விடுமுறை உதவும்!

சுற்றுலா சென்றிடும் பொழுதில்- மனம்
சுதந்திரம் அடைந்ததாய் உணரும்!
காட்சிகள் மாறிடும் கணத்தில்- மனம்
காட்டிடும் கவிதையாய் விரியும்!

வருடா வருடம் வரினும்- மனம்
விடுமுறை தினத்தால் மகிழும்!
வாரா வாரம் வரினும்- மனம்
விடுமுறை வந்தால் குளிரும்!

சூரியனின் சேதி கேளீர்


சூரியன் வானிடம் காதல் கொண்டிட
சுடுகின்ற வேகத்தில் கலவி கொண்டிட
செழுமை நிறத்தினை வான்மேல் ஊற்றிட.
நீலம் இழந்ததாய் வானம் சொன்னதாம்!


சூரியன் செய்ததை காகம் கதைத்திட
காகம் கதைத்தது விண்ணில் ஒலித்திட
விண்ணில் ஒலித்ததை வெண்மதி கேட்டிட
வெண்மையை மீண்டும் திருப்பித் தந்ததாம்!
----செ. இராசா----

Photography by: Mr. Riaz Ahamed

01/09/2017

என் நினைவெல்லாம்------களஞ்சியம் கவிதைப் போட்டியில் (69) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை)

களஞ்சியம் கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள்



"
என் நினைவெல்லாம் நீயென்று"
என்நாளும் சொன்னவளே...
உன் நினைவில் நானிருக்க
எமை இங்கே தவிக்கவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

அன்பாலே அம்பெய்து
அடிமனதில் புகுந்தவளே
என் மனதைத் துளைத்துவிட்டு
எமை இங்கே பதறவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

இன்பத்தின் மழைபெய்து
இதயத்தை நனைத்தவளே
என் உறவைக் கானலாக்கி
எமை இங்கே கலங்கவிட்டு
எங்கே நீ சென்றாயோ?

கைப்பேசி கதகதக்க
சொல்பேச்சில் மகிழ்ந்தவளே
என் பேச்சை மறந்துவிட்டு
எமை இங்கே விட்டுவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

நினைவாலே கரைந்தவளே
என்னுள்ளே உறைந்தவளே
ஏனென்றே தெரியவில்லை?!
எனக்கொன்றும் புரியவில்லை?!
எங்கே நீ சென்றாயோ?!