19/02/2022

அன்பில் அதி-காரம் ஆம்

 

என்ன இருந்தாலும்
........இப்படியா எப்போதும்
என்னை அழைத்தவுடன்
........எங்குள்ளேன்- என்பவளே
சின்ன இடைவெளிக்கே
........சீறுகின்ற நின்செய்கை
அன்பில் அதி-காரம் ஆம்

18/02/2022

வாழ்க்கையொரு வட்டம்

வாழ்க்கையொரு வட்டம்- இதில்

யாருக்கென்ன நட்டம்
வந்தவரை இலாபம்- வர
வில்லைனாயேன் சோகம்?!
 
போகும் வரைப் போவோம்
போகும்முன் ஏன் கோபம்?
சாகும் முன்னே போனா
வாழ்வே வீணாப் போகும்..

உன்னையே நீ அறிவாய்

உன்னையே நீ அறிவாய் என்றாய்...
அட..என்னை அறிந்தாலும் அரிந்தாலும் நீதானே உள்ளாய்

17/02/2022

குறளுரையாடல் அந்தாதி



1, 3, 5, ........19
#ஒற்றைப்படை_கவிஞர்_இராசா
2, 4,6......20
#இரட்டைப்படை_கவிஞர்_அசோகன்

படைத்தவனை விட்டுப் படைபொருளைக் கேட்ட
மடையன்போல் ஏங்கும் மனம்
(1)

மனம்போல மாங்கல்யம் மாந்தரின் வாழ்வில்
குணம்போல் கொடுப்பான் இறை.
(2)

இறைவனின் கையில் எழுதுகோல் ஆனோம்
நிறைகுறை எல்லாம் அவன்
(3)

அவனாலே எல்லாம் அமைந்திடும் என்றால்
சிவனென் றிருத்தல் சிறப்பு. .
(4)

சிறப்பாய் வருமென்று செய்வதை விட்டால்
அறமில்லை அன்றோ அது
(5)

அதுதான் விதியென்று அன்றாடங் காய்ச்சி
பொதுவாய் உரைப்பான் புரி
(6)

புரியாத ஒன்றைப் புரிந்ததுபோல் எண்ணிப்
புரியாமல் பேசும் புவி
(7)

புவியினில் நாளும் புதிதாக வேடம்
அவைநடுவில் கூறுவது ஆர்(யார்)
(8)

யாரிங்கு வந்தாலும் யாரென்ன சொன்னாலும்
ஓரினம் என்றே உணர்
(9)

உணர்வுடன் ஒன்றி உருவம் இணைதல்
கனிவுடைக் காதல் களி!
(10)

களித்தேன் ருசித்தேன் கவித்தேன் அருந்தேன்
அளித்தேன் தமிழ்த்தேன் அருந்து
(11)

அருந்துவேன் என்றும் அணித்தமிழ் மண்ணில்
வருந்தவும் ஏது வழி
(12)

வழிவழி வந்த மரபை நினைந்து
விழித்தெழ என்றும் விரும்பு
(13)

விரும்பிய தெல்லாம் விரலின் நுனியில்
அரும்பிடும் நாளை அறி.
(14)

அறிய அறிய அறிவது யாதோ?!
அறிவிலி;யாம் என்னும் அறிவு
(15)

அறிவிற் பெரியோர் அறவோர் உலகில்
இறந்தும் இருப்பார் நிலத்து
(16)

நிலத்தில் இருப்பவற்றில் எப்பொருள் நிற்கும்?
உளத்தில் நிறுத்தி ஒழுகு
(17)

ஒழுகுவார் மேன்மையில் என்றும் உயர்வாய்ப்
பழகுவோர்ப் பண்பே தலை.
(18)

தலையாய நட்பில் தனித்துவம் காட்டி
மலைபோல நிற்பதே மாண்பு
(19)

மாண்புகள் வார்க்கும் மகத்துவம் யாவுமே
நோன்புகள் நூற்கும் படை!
(20)

✍️ இருவரும்

17. 02. 2022

16/02/2022

சேரன்நீ அல்லவா சோழன்நான் அல்லவா

 


#மெட்டு_என்னப்பன்_அல்லவா

சேரன்நீ அல்லவா
..............சோழன்நான் அல்லவா
தென்பாண்டி மன்னவா
..............வம்சம்நாம் அல்லவா
தென்பாண்டி மன்னவா
..............வம்சம்நாம் அல்லவா

வள்ளுவனார் எங்கள் தெய்வத் திருப்பரன்
வள்ளுவன்-யார்? எங்கள் தெய்வத் திருப்பரன்
நல்லருளால் வந்த நன்மறை வழியே...
நல்லருளால் வந்த நன்மறை வழியே..

ஆண்டவர் நாங்களே அன்றைய நாளிலே
ஆண்டவர் நாங்களே அன்றைய நாளிலே
இன்றந்த பெருமையை ஏனோ இழந்தமே

மீண்டெழுவோமே...மீண்டெழுவோமே...

✍️செ. இராசா

15/02/2022

கிராம நிலவரைபடம்
தெளிவாய்க் காட்டுகிறது
சாதியக் கட்டமைப்பு

படைத்தவனை விட்டுப் படைபொருளைக் கேட்ட
மடையன்போல் ஏங்கும் மனம்

எங்கே எனது ரசிகர்?

 #எங்கே_எனது_ரசிகர்?

ஒன்றுமே இல்லாமல்
ஓதிய காலத்தில்
ஓடோடி வந்தவரே- எம்மை
உச்சத்தில் வைத்தவரே..
அன்றிலும் இன்றைக்கே
ஆயிரம் செய்கின்றேன்
கண்டிட மாட்டீரோ- இல்லைக்
கண்டதால் விட்டீரோ?

கற்றிடா காலத்தில்
காட்டாற்று வேகத்தில்
கொட்டினேன் நூறுகவி- அன்று
செப்பினீர் ஆசுகவி!
கற்றவர் பாதையில்
முற்றிலும் மாற்றியே
காட்டினேன் வேறுகவி- இன்று
கானல்நீர் ஆச்சுகவி...!!

✍️செ. இராசா

14/02/2022

என்ன தவறிழைத்தேன் இங்கு?

 


கண்ணைத் திறப்பதற்கோர் காலம் கனியலையோ?
மண்ணை அடைவதற்கோர் மார்க்கம் தெரியலையோ?
என்னை உயர்த்திடவோர் எண்ணம் வரவில்லையோ?
என்ன தவறிழைத்தேன் இங்கு?

செ. இராசா

காமத்துப்பால் -- வள்ளுவர் திங்கள் 198


கண்களா? தூண்டிலா? கவ்வுகிற வேகத்தில்
விண்மீனை வீழ்த்தும் விழி
(1)

கள்ளியா? காதலியா? காண்கின்ற நேரத்தில்
உள்ள(த்)தை மாற்றும் உரு
(2)

கடவுளா? கன்னியா? காணாத போதும்
உடன்பட வைக்கும் உறவு
(3)

குறிஞ்சியா? பாலையா? கூடுகின்ற போதில்
அறிவினைக் கொல்லும் அழகு
(4)

கனவா? நனவா? கவிதையாய்த் தோன்றி
நினைவில் உலவும் நிசம்
(5)

தெற்கா? வடக்கா? திசையேதும் காணாமல்
பற்றிடும் உள்ளகம் பார்த்து
(6)

காமமா? காதலா? காரணப் பேரின்றி
வாமனனாய் நீளும் மனம்
(7.)

அனலா? புனலா? அறியாமல் தானே
கனவிலும் நோகும் கதி
(8)

உண்மையா? பொய்யா? உயிரொன்றும் அக்கணங்கள்
கண்மூடி யாக்கும் கலப்பு
(9)

நிறையா? குறையா? நெருங்கிய பின்னே
மறைவில் திறக்கும் மடை
(10)