#2001_2003
#சென்னை_இறுதிப்பகுதி
சென்னையில்
முதன் முதலாக வேலைக்கு வந்த புதிதில் நான் எங்கள் உறவினர் வீட்டில்
இருந்துதான் போய்வந்தேன். சுரேந்தர் நகரில் இருந்து சைக்கிளில்போய்
செந்தாமஸ் மவுண்ட் நிறுத்தத்தில் போட்டுவிட்டு இரயிலில் கிண்டி அல்லது
நுங்கம்பாக்கம் சென்றுவிட்டு அங்கிருந்து ஷேர் ஆட்டோ அல்லது பேருந்தில்
ஏறிஇறங்கி நடந்தே சென்று வேலை பார்த்துவிட்டு மீண்டு(ம்) வரும்
நிகழ்விருக்கிறதே... அப்பப்பா....போதும் போதும் என்றாகி விடும். இப்படிப்
போகும் வாழ்வில் ஒருநாள் ஞாயிறு விடுமுறை என்பது மட்டுமே நமக்கான நாள்.
அன்று பெரும்பாலும் அனைவருக்கும் ஓய்வெடுக்கவே உடலும் மனமும் ஏங்கும்.
ஆனால் அவற்றைத் தகர்த்தெறிந்து நான் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடம்,
திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் என்றோடில்லாமல் பொறியியல் சம்பந்தமான
இலவச கருத்தரங்குகள் என்றெல்லாம் சுற்றிக்கொண்டே இருப்பேன்.
ஒரு
பத்து மாதங்களுக்குப் பிறகு தனியாக அறையெடுத்துத் தங்க விரும்பினேன்.
காரணம் என்னைத் தேடி நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள்...இல்லை இல்லை அனைவரும்
வேலைதேடி சென்னைக்குப் படையெடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் உதவி
செய்யும் பொருட்டு அறையெடுக்க நினைத்து என் பட்ஜெட்டில் இரயில் நிலைய
ஓரத்திலேயே தேடினேன். கடைசியாக பழவந்தாங்கலில் ஒரு கர்நாடகக் காரர்
கட்டியிருந்த மேன்சன் ஒன்றில் 1000/- ரூபாய்க்கு மூன்றாவது மாடியில் ஒரு
பத்துக்குப் பத்து அறை கிடைத்தது. அவர் போட்ட விதிமுறைகள் அவர் சார்ந்த
மாநிலத்தை உறுதிப்படுத்தியது. ஆம்... தண்ணீர் பிர்ச்சினைதான். அட...
நீங்கள் நினைப்பது போல் குடிநீர் பிர்ச்சினையல்ல. அது நாம் வெளியே
குழாயிலேயோ அல்லது காசுகொடுத்தோதான் வாங்க வேண்டும். இது குளிக்கும்
கழிக்கும் நீர் பிரச்சினை. அதாவது குளியலறை/கழிப்பறை இருப்பது மூன்றாம்
மாடியில் தண்ணீர் இருப்பதோ தரைதளத்தில்.. ஒவ்வொரு வாளிக்கும் இறங்கி
வரவேண்டும். இவ்வளவுக்கும் மேலே நீர்த்தொட்டி மற்றும் மோட்டாரெல்லாம்
உண்டு. ஆனால் அதைப்போட்டால் நிறைய தண்ணீர் செலவாகிறதாம்... அடப்பாவிங்களா?
என்று சொல்லத் தோன்றுகிறதா?!! என்னைப்போலவே என் அறைக்குப் பின்னர் வந்த
என் உயிர் நண்பன் மாயவரம் சுபாஷ், என் நண்பனின் தம்பி ஸ்ரீமுஷ்ணம் ஜான்,
அப்புறம் அவன் நண்பன், அத்தோடு என் தம்பி இரமேஷ் என்று அனைவரும்
கஷ்டப்பட்டோம். அதற்கெல்லாம் நாங்கள் எப்படி தீர்வு கண்டோம் தெரியுமா?!
ஆண்கள்
அனைவரும் கீழேயே குளிக்க ஆரம்பித்தோம். அவர்கள் பதறிவிட்டார்கள். காரணம்
அவர் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். உடனே தண்ணீரை மேல்நிலைத் தொட்டிக்கு
ஏற்றிவிட்டார். அன்று எங்களால் பலரும் பயனடைந்தனர்.
நான் ஒருவன் தான்
அன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தேன்.
மற்றவர்கள் வேலை தேடினார்கள் அல்லது ஏதோ சில வேலை பார்த்தார்கள். எனில் என்
நல்ல சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 2500/- ரூபாய்தான். அதில் 1000/-ரூ
வாடகை, போக்குவரத்து 750/-ஆகும். மீதம் 750/ல் வீட்டிற்கு அம்மா
அப்பாவிற்கும் எப்படியாவது 300/+200/- என்று அனுப்பி விடுவேன். காரணம்
அனுப்பும் எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதால். ஆக..சாப்பிடப் பணம்
பத்தவே பத்தாது. ஒரு வயிறென்றால் பரவாயில்லை....பல வயிறுகள் போராடுகிறதே.
மேலும் நான் யாரிடமும் கடன் வாங்கக்கூடாதென்றக் கொள்கையுடையவன். பிறகு
எப்படி சமாளித்தோம் தெரியுமா?!
அங்கே நிறைய ஒப்பந்ததாரர்கள்
பெயிண்டிங் இன்டீரியர் என்று வேலை செய்வார்கள். கோடி கோடியாய் சம்பாதித்து
நல்ல டிப்டாப்பாய் இருப்பார்கள். ஆனால் Bill Quantity எடுக்கத் தெரியாது.
எனக்கு அவ்வப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதிநேர வேலையாக அழைப்பார்கள்.
அதில் ரூ 500/-1000/-வரைக்கிடைக்கும். ஒரு வரைபடம் போட்டுக்கொடுத்தால் ரூ
500/- கிடைக்கும். நான் ஆர்க்கிடெக்ட் பொறியாளர் என்பதால் எனக்குப பல
வழிகளிலும் பணம் வர வழி இருந்தும் நேர்மை தவறாது நின்ற காரணத்தால்
இப்படித்தான் அங்குமிங்கும் வேலை பார்த்தேன். இருப்பினும் பணம் பத்தவில்லை.
வீட்டில்
மின்சாரக் கட்டணம் இல்லை என்பதால் ஒரு ரைஸ் குக்கரில் சோறு பொங்குவோம்.
என் தம்பி இரவு கடை மூடும் நேரத்திற்குப்போய் சிலபல உடைந்த தக்காளிகளையும்
காய்கறிகளையும் குறைந்த விலையில் வாங்கி வருவான். பின்னர் அதே ரைஸ் குக்கர்
குழம்பு வைக்கும் சட்டியாக உருவெடுக்கும். அப்படி செய்த உணவு பல
சமயங்களில் வெந்தும் வேகமால் இருந்தாலும் மேன்சன் மொட்டைமாடியில்
நிலாச்சோறு சாப்பிட்டபோது கிட்டிய அந்த உணவின் சுவை இருக்கிறதே......அட அட
அடா...
இன்னும் ருசிக்கிறது.
நன்றி
செ.இராசா
12/05/2021
அனுபவப் பதிவு 20-----------கஷ்ட காலம்
11/05/2021
மூன்றாம் ஆப்பிளும் அயோக்கியத்தனமும்
#ஆப்பிள்_அனுபவம்
இந்த உலகில் மூன்று ஆப்பிள்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்று சொல்லுவார்கள். முதல் ஆப்பிள் ஏவாளின் தூண்டுதலில் ஆதம் பறித்த ஆப்பிள், இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவது ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டறிந்த ஆப்பிள். இப்படியெல்லாம் சொல்லி இந்த மூன்றாவது ஆப்பிளை நம் தலையில் கட்ட முயற்சிக்கிறார்கள் இந்த விற்பன்னர்கள்.பொதுவாக பொருள்களை விற்பதில் அமெரிக்கர்களை யாரும் விஞ்சமுடியாது என்பதை அனைவரும் அறிவோம்.
மெக்டொனால்ட் துரித உணவகத்தில் குழந்தைகளுக்கு ஐஸ் க்ரீமை மலிவு விலையில் கொடுத்து தன் பிராண்டை சிறு வயதிலேயே மூளைக்குள் செலுத்தும் வியாபர யுக்தியோடு களம் இறங்கியவர்களே அமெரிக்கர்கள். அவர்களைப்போலவே ஆனால் வேறு விதமாக இந்த ஆப்பிள் நிறுவனமும் சந்தையில் தன் பொருளை ஒரு அந்தஸ்து அடையாளமாக்கி (status symbol) வைத்தால் அதொற்கொரு கூட்டம் கண்டிப்பாக வருவார்கள் என்று கணித்தார்கள்.இவ்வுலகத்தில் பணமுள்ளவர்கள் வாங்குவதற்கென்றே ரோல்ஸ் ராய்ஸ், பெர்ராரி, லம்போர்கினி போன்ற மகிழுந்துகள் போல் ஆப்பிள் தயாரிப்புகளையும் ஆக்கிவிடும் முனைப்பிலேயே இறங்கினார்கள். ஆனால் அதை அடைந்துவிட்டார்களா என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்கள் பேச வேண்டியது. இப்போது நாம் அதுபற்றி பேசப் போவதில்லை. இந்த ஆப்பிள் வழங்கும் கைப்பேசி பற்றி மட்டும் பேசப்போகிறோம். இது முழுக்க முழுக்க என் அனுபவம் சார்ந்தது மட்டுமே...மாற்றுக் கருத்திருந்தால் அதை எமக்குத் தெரியப்படுத்தலாம். இப்போது கட்டுரைக்குள் போவோம்.
நான் முதன் முதலில் வாங்கிய கைப்பேசி என்பது சாதாரண கருப்பு வெள்ளை நோக்கியா மாடல் தான். பின் வருமானமும் காலமும் மாற மாற என் கைபேசியின் வடிவமும் தயாரிப்பும் மாறிக்கொண்டே போனது. ஆயினும் என் கைபேசிக்கான பட்ஜெட் என்னவோ 800/- ரியாலைத் (16000 /- இன்றைய இந்திய மதிப்பு) தாண்டவில்லை. ஒரு கட்டத்தில் என் மனைவியாரே எனக்கு ஆப்பிள்-5 கைப்பேசி வாங்கிக்கொடுத்தார்.
ஒரே பெருமையாக இருந்தது. மிகவும் சிறிய கைப்பேசி என்பதாலும், புகைப்படங்கள் தெளிவாக இருந்ததாலும் ஆரம்பத்தில் பிடித்தது. பிறகு அடிக்கடி தகராறு செய்தமையால் சில நாட்களுக்குப்பிறகு ஆப்பிள்-7 கைப்பேசி வாங்கினேன். அதுவும் அப்படியே ஆரம்பத்தில் நன்றாக இருந்து அதுவும் தொந்தரவு தந்தது. ஆமாம் அது என்ன தொந்தரவு என்று தானே நினைக்கின்றீர்கள். சொல்கிறேன் கேளுங்கள்;
1. ஆப்பிள் கைபேசியில் மின்கலம் (charge) நிற்காது. எப்போதும் மின்னூட்டம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
2. மின்னோட்டம் தரும் கேபிள் (cable) அடிக்கடி பழுதாகிவிடும். ஆப்பிள் நிறுவன கேபிள் வாங்கி போட்டாலும் சில நாட்களில் பழுதாகிவிடும். இதற்குத் தனியாக நாம் ஒரு தொகை செலவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
3. ஆப்பிள் கைப்பேசி ஹாங்கே (Hang) ஆகாதென்பார்கள். அது சுத்தப்பொய்.
4. கேமிரா மிகவும் அருமை என்பார்கள். அதையெல்லாம் தாண்டி எத்தனையோ கைப்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டன.
5. ஆப்பிள் கைப்பேசி மிகவும் பாதுகாப்பு, யாராலும் தகவல்களை எடுக்க முடியாதென்பார்கள். நாமென்ன ஒசாமா வேலையா பார்க்கப்போகிறோம். மேலும் அது நமக்கேகூட ஆபத்தாகும் வாய்ப்பு நிறைய உண்டு. (என் முதல் கைப்பேசியின் பாஸ்வார்ட் மறந்து போய் திறக்க முடியாமேலே போய்விட்டது).
6. மேலும் ஆப்பிள் கைப்பேசியில் பாடல், கோப்பு என்று எதை ஏற்றுவதாய் இருந்தாலும் கணினியின் துணை இன்றி முடியாது.
7. பெருவாரியான மெமோரிகளை (Memory) செயலிகளே எடுத்துக்கொள்ளும்.
8. எடுத்த புகைப்படங்களை கேபிள் வழியாக கணினிக்கு மாற்ற எண்ணினால், மாற்றிக்கொண்டிருக்கும்போதே பல சமயங்களில் இணைப்பு (disconnect) விடுபடும்.
9. எல்லாவற்றிற்கும் பணம் பணம் என்று அழுக வேண்டும்.
இத்தனை இருந்தாலும் எனக்கெல்லாம் எதுவும் பிரச்சினை இல்லை ஆப்பிள் தான் சிறந்த கைப்பேசி என்று சொல்பவர்கள் இருப்பதாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் இருப்பதாலும் ஆப்பிளை இன்னும் அதிசயமாக பார்ப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
இவன்,
செ. இராசா
10/05/2021
அரசியல் மாற்றம்-----------பண்புள்ள அரசியல்
எடப்பாடியார்
பற்றிய ஒரு வாழ்த்துப்பதிவு போட்டவுடன் தம்பி ஒருவர் உடனே அழைத்துத் தன்
மகிழ்வைத் தெரிவித்தார். மேலும் சமீப காலங்களில் அவருக்காக நான் பதிவிடும்
ஓர் நல்ல பதிவென்றும் கூறினார். கண்டிப்பாக அவரைப்போலவே பலரும் இதேபோல்
எண்ணியிருக்கக்கூடும். அதற்கான காரணம் நான் சமீபத்தில் முதல்வர் பற்றி
பதிவேற்றிய ஒரு வாழ்த்துப்பதிவாக இருக்கலாம். இங்கே என்னைப்பற்றிய ஒரு சுய
விளக்கத்தோடு என் அக விருப்பத்தையும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
நம்ம
ஊரைப் பொருத்தவரை பொதுவாக ஒருவரின் கட்சி நிலைப்பாடு என்பது
ஆரம்பகாலங்களில் அவர்களின் குடும்பத்தார்கள் விரும்பும் கட்சிசார்ந்தே
இருக்கும். பிறகு சிலர் தன்னை மாற்றிக் கொள்கிறார்கள், பலர் அப்படியே தன்
குடும்பத்தார் சார்ந்தே இருக்கிறார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. என்
தந்தையார் தீவிர அதிமுக விசுவாசி மற்றும் கட்சிப் பொறுப்பிலும் இருப்பவர்.
கடந்த மூன்றுமுறையாக MLA சீட்டிற்கும் பணம்கட்டியவர். இருப்பினும் நான்
சற்றே நடுநிலையோடு இருப்பதற்கான காரணம் இயல்பிலேயே குணம்நாடி குற்றம்நாடி
அவற்றுள் மிகைநாடச் சொன்ன வள்ளுவரின்மேல் கொண்ட பற்றே என்று
சொல்லலாம்........நிற்க.
இங்கே..நம் தமிழ்நாட்டு அரசியலை இனி
கலைஞர்
மற்றும் அம்மா காலங்களுக்கு முன் பின் என்று பிரிக்கலாம் என்பதே அடியேனின்
கணிப்பு. அக்காலத்தைச் சரியாகப் பிரிக்கும் அளவுகோல் காரணிகளாக தற்போதைய
முதல்வர் ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரும்
இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.
க-ஜெ காலத்திற்கு முன் இருந்த
அரசியலில் அவர்களுக்குள் இருந்த காழ்ப்புணர்ச்சி மிகப்பெரிய பகையாகி
எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகளாக பார்க்கப்பட்டதன் காரணமெல்லாம் அனைவரும்
அறிந்ததே. எம்ஜிஆர் மற்றும் கலைஞர் நட்பின் விரிசலானது ஜெ தலையெடுத்த பிறகு
சட்டசபையில் ஏற்பட்ட சில பல துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் தனிப்பட்ட கோபம்
வஞ்சமாகி அதுவே பலி வாங்கலாகி மீண்டும் பலிக்குப் பலியாகி இறுதிவரை
கீரியும் பாம்புமாய் இரு கட்சித்தலைவர்களும் இருந்தமையால் அது சமூகத்திலும்
எதிரொலித்து மக்களுக்குள்ளும் எதிர்மறை உணர்வுகளாய்மாறி எங்கிலும்
எதிரொலித்ததைக் கண்டோம்.
அதையெல்லாம் நீக்கும் விதமாக
காலமாற்றத்தில் எப்படியோ எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தார் அல்லது
வரவழைக்கப்பட்டார் (அந்த சர்ச்சை அனைவரும் அறிந்ததே) அவர் எப்படியோ
முதல்வராக வந்தாலும் அவருக்கு எதிராக இருந்த OPS ஐ சமாளித்து கட்சிக்குள்
சேர்த்து, தினகரனைக் கைப்பற்றவிடாமல் கட்சியைப் பாதுகாத்து,
எதிர்க்கட்சியின் தாக்குதல்களை எதிர்கொண்டு, எப்போது வேண்டுமானாலும் போர்க்
கொடி தூக்கக் காத்துக்கொண்டிருந்த சில பல உறுப்பினர்களை சமாளித்து, மத்திய
அரசாங்கத்தின் அழுத்தத்தை வேறு வழி இல்லாமல் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு
உட்படுத்தப்பட்டு, அதனால் ஏற்பட்ட பழிச்சொல்லையும் தாங்கித்
தாக்குப்பிடித்து நான்கு வருடங்கள் ஆட்சியை திறம்பட நடத்தித் தான் யார்
என்று நிரூபித்த எடப்பாடியாரைக் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.
அடுத்து
நம் புதிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் திறமையை பலரும் பல விதமாகப்
பேசினர். ஆனால் அவர் முதல்வராக பதவியேற்றபின் எடுத்த ஆரம்ப கால
நடவடிக்கைகளே அவர் யாரென்று காட்டியிருக்கும். மிக முக்கியமாக அவரின்
பண்புநலன் தமிழக அரசியலில் கட்டாயம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமென்றே
நினைக்கின்றேன்.
தன் அப்பாவைப்போல் அடுக்குத் தொடரில் பேசத்தெரியாது
என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதெல்லாம் இனி தேவையே இல்லை. நல்ல
நிர்வாகமும் பண்பும் இருப்பதால் அவர் காலத்தையே மாற்றும் சக்தியாக
இருப்பார் என்றே நினைக்கின்றேன். அதற்குத் துணையாக கண்டிப்பாக
எடப்பாடியாரும் அரசியல் ரீதியாக எதிர்ப்பதை எதிர்த்து நல்லதை ஆதரித்து
பண்புநலன் பேணுவதில் அவரும் துணையிருப்பார் என்றே நம்பலாம். இப்படிப்பட்ட
நல்ல ஆரோக்கியமான அரசியல் பண்பு தொடருமானால் நம் தமிழ்ச் சமூகத்திலும்
மாற்றம் வருமென்பது வெறும் நம்பிக்கையல்ல... அது பகுத்தறிவு காட்டும்
மெய்ஞானக் கணிப்பே...
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்செ.இராசா
வாழ்த்துகள் மாண்புமிகு எடப்பாடியார்
எதிரும் புதிருமாய் எப்போதும் நிற்கா
எதிர்க்கட்சி மாண்பில் இரும்செ.இராசா
வாழ்த்துகள் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களே...
இனிய மனமார்ந்த வாழ்த்துகள்
சுருங்கச் சொல்-------------குறள் வெண்பாக்கள்------வள்ளுவர் திங்கள் 158
நீட்டி முழக்காமல் நேராக எப்போதும்
கேட்கச் சலிக்காமல் சொல்
(1)
விதைக்குள் பொதிந்த விருட்சத்தைப் போலே
விதைக்கட்டும் சொல்கின்ற சொல்
(2)
ஹைக்கூபோல் கூறாமல் குக்கூபோல் கூவினால்
தைக்காமல் போய்விடும் சொல்
(3)
அவசர ஊர்திபோல் ஆர்ப்பரிக்கும் ஊரில்
அவசிய மானதைச் சொல்
(4)
ஒலியாய் வரியாய் உருவான சொல்லில்
மொழியாத மௌனமும் சொல்
(5)
கம்பனே வந்தாலும் காலத்தை உள்வாங்கிக்
கம்மியாய்ச் செய்வான் கவி
(6)
இலக்கணம் வேண்டி இடைச்செருகல் செய்தால்
கலகலத்துப் போகும் கவி
(7)
வள்ளுவர் நூல்போல் வடிக்கின்ற நூலையேப்
பல்லாண்டு போற்றிடும் பார்
(8)
கூறியதைக் கூறியே கூறு'வதை செய்வோர்க்குக்
கூறிட யாருளர் கூறு?
(9)
குறைவாய்க் கிடைப்பதற்கேக் குன்றாய் மதிப்பு
குறையின்றி நன்றாய்க் கொடு
(10)செ.இராசா
09/05/2021
அனுபவப் பதிவு-19------------நான் யார்?

07/05/2021
பறவையாய்ப் பிறந்திருந்தால்
பறவையாய்ப் பிறந்திருந்தால்
உயரப் பறந்திருப்பேன்
நாயாய்ப் பிறந்திருந்தால்
நக்கிப் பிழைத்திருப்பேன்
கேவலம்...
மனிதனாய் பிறந்துவிட்டேன்...செ. இராசா
06/05/2021
நாதியின்றிப் போவார் விடு
சாதிபார்த்து சாதிபார்த்து சாக்கடைக்குள் வீழ்வோர்கள்
நாதியின்றிப் போவார் விடு
04/05/2021
மு க ஸ்டாலின்
பிரபலத்தின் வாரிசானால்
பிற-பலம் பல இருந்தும்
அடையாளம் என்னவோ
அண்ணாரின் வாரிசென்றே...
தன்பலம் காட்டி இங்கே
தனித்துவமாய் நின்றாலும்
விமர்சன நாக்குகளோ
வீசுவது திராவகமே...
அனைத்தையும் துடைத்தெறிந்து
அரிமா போல் நிற்பதற்கு
எத்தனை வலிமை வேண்டும்?!
எழுதுகின்றேன் இக்கவியில்;
1953
முத்துவேல் #கருணாநிதிக்கும்
#தயாளு_அம்மாளுக்கும்
மூன்றாம் மகனாக
சென்னையில் அவதரித்தப்
பிஞ்சுக் குழந்தைக்குப்
பேர்வைத்தார் #ஸ்டாலினென்று...
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிபோல்
கலைஞர் வீட்டு கன்றுக்குட்டியும்
அணு அணுவாய் உள்வாங்கி
அரசியலைக் கற்றதினால்
அண்டம்போல் ஆனதென்று
அறிந்தோர் சொல்கின்றார்?
அறியாதோர் வியக்கின்றார்!
உற்றாரும் மற்றாரும்
ஓர் வீட்டில் இருந்தாலும்
கற்றோராய்க் கற்றால்தான்
பார் போற்றும் வாழ்வென்று
அரசியல் அரிச்சுவட்டை
ஆழமாய்க் கற்றதினால்
கோபால புரத்திலே
கோ-மகனாய் வாழாமல்
இளைஞர் கழகமென்று
இவர் செய்த அமைப்பாலே
இந்நாளின் தலைமைக்கு
அந்நாளில் வித்திட்டார்…!
கலைஞரின் மகனென்று
கட்டிலில் தூங்காமல்
முனைப்போடு முழங்கியதால்
முடக்கிட எண்ணியோர்
சிறைக்குள் பூட்டியதால்
சிறப்புடன் எழுச்சியுற்றார்!
ஆயிரம் விளக்கிலே
இருமுறை தோற்றாலும்
அணையா விளக்காக
அடுத்தடுத்து வெற்றிபெற்றார்!
பதினான்கு வயதுத்தொட்டு
படிப்படியாய் வந்தாலும்
பொறாமைத் தீயாலே
பொசுக்கிட நினைத்தோர்க்கு
தலை நகர மேயராகி
#தளபதியாய்க் காட்சி தந்தார்!
#சிங்காரச்_சென்னையென்ற
சீர்மிகு திட்டத்தால்
இந்திய கண்டமே
விந்தையெனப் பேச வைத்தார்!
வளர்ச்சி பொறுக்காமல்
வசவினை வீசியோர்
வளர்ச்சி பொறுக்காமல்
வசவினை வீசி ஓர்
புதிய சட்டத்தால்
பதவியைப் பறித்துவிட்டார்!
இருந்தும் துவளாமல்
இறங்கிய வேகத்தால்
ஒவ்வொரு பதவியையும்
ஒவ்வொரு படியாக்கி
எதிரிக் கொட்டத்தை
இன்றைக்குப் பொடியாக்கி
தனித்துவத் தலைவனாய்த்
தலை நிமிர்ந்து நிற்கின்றார்!
தலைவர் திரு #மு_க_ஸ்டாலின் அவர்கள்!
வாழ்க வளமுடன் ஐயா!செ. இராசமாணிக்கம்
கத்தாரில் இருந்து...
#குறிப்பு: நான் திமுக-வைச் சேந்தவன் அல்ல. அனைவரிலும் உள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்க்க முயல்கின்ற ஒரு சாதாரண குடிமகன். அவ்வளவே...
02/05/2021
தக்கபடி நிற்பீர் தனித்து