29/05/2017

துயர வாழ்வு / பூனையும் நானும்




புல்லுமேல படுத்துருளும்
பூனையாரே! பூனையாரே!
நீரும் உணவும் உடனிருக்க
நீர் யாரைத் தேடுகின்றீர்?

கல்லுமேல அமர்ந்திருக்கும்
கருத்த பெரிய மனிதரே!
என்கொடுமை என்னவென்று
எடுத்துரைப்பேன் நீர் கேளும்;

வெயில் கொடுமை தாங்காமல்
வெறும் உடம்பில் உருளவில்லை!
விட்டுப்போன உறவாலே
வெறுப்பாலே வாடுகின்றேன்!

உன்நிறத்தில் எம்புருசன்
ஒருநாளு ஓடிவந்தான்!
பதமாத்தான் பழகியவன்
பொசுக்கென்று ஓடிப்புட்டான்!

சிலநாள் ஆனபின்னே
வயிறுவீங்கிப் போயிறுச்சு!
அடுக்கடுக்கா ஆறுகுட்டிய
அசராம பெத்துபோட்டேன்!

எடுத்துக் கொஞ்ச புருசன் இல்லை!
எங்கே அவன்?!...தெரியவில்லை!

பாத்துப்பாத்து நான் வளர்த்த
பிள்ளைகளும் காணவில்லை......

பாவிநானும் தேடுகின்றேன்....
பார்த்தால் நீரும் சொல்லுமய்யா....

ஐய்யோ பாவம்....பூனையாரே..
என்னவென்று சொல்லிடுவேன்?
உன்சோகம் தீர்த்திடுவேன்?

ஆறறிவு மனுசனோட
பெண் இனத்தின் கொடுமைபோல
உன் கொடுமை உள்ளசேதி
என் மனதைத் தைக்கிறது!
வலி என்னை வதைக்கிறது!

ஐந்தறிவில் ஒன்றுகூடி
ஆறறிவாய் ஆனபின்னும்
பகுத்தறிவு இல்லாத
ஆணினத்தின் சார்பாக
அழுதேநான் வருந்துகின்றேன்!

27/05/2017

நீ என் அதிர்ஷ்டமடி



புவியீர்ப்பு சக்திபோலே
தனியீர்ப்பு கொண்டவளே-உன்
விழியீர்ப்பு பார்வையாலே-எனை
முழுயீர்ப்பு செய்தாயடி!

உரிமையுள்ள உடைமையாக
உணர்வினிலே ஒன்றாக
உன்னுயுரே என்னுள்ளே
உதிரமாக ஓடுதடி!

காதல்மொழி வார்த்தை-எந்தன்
காதின்வழி வருமுன்னே
காதலி உன் எண்ண அலை
காட்சிபோலத் தெரியுமடி!

கலைகள்பல அறிந்தபின்னும்
கர்வம்சிரம் ஏறிடாத
கருணைக்கடல் மனதுக்கு
கடவுளாளே அமைந்ததடி!

சினம்கொண்ட உன்முகத்தை
சிந்தனையால் மனதினிலே
சிலைபோல வடித்துவிட்டால்
சிரம்கவிழ்ப்பாய் சிரித்தபடி!

ஈன்றவளின் தொடராக
இணைந்துவரும் நிழலாக
ஈரமுள்ள இதயமாக- நீ
இருப்பது என் அதிர்ஷ்டமடி!

24/05/2017

சீதையும் திரௌபதியும்- ஓர் ஒப்பீடு





மண்ணில் தோன்றிய சீதையும்
நெருப்பில் உதித்த திரௌபதியும்
பாரதம் போற்றிடும் காவியங்களின்
பாத்திரப் படைப்பின் நாயகிகள்!

------------------------------------------------------

வில்லினை உடைக்கும் போட்டியிலே
வீரத்தைக் காட்டிய இராமனையே
வெற்றியின் பரிசாய் மாலையிட்டு
சூரியகுலம் புகுந்தாள் சீதையம்மா!

வில்வித்தை சுயம்வரப் போட்டியிலே
வீரன் விஜயனை மாலையிட்டு
விதியால் ஐவரை மணந்திடவே
சந்திரகுலம் புகுந்தாள் திரௌபதித்தாய்!

----------------------------------------------------------

பதியுடன் கழித்த வனவாசம்
பதிமூன்று ஆண்டுகள் முடிந்தவுடன்
சிறையினில் கழிந்தது ஓராண்டு!
சிறியோன் இராவணன் செயலாலே!

ஐவருடன் ஒருவராய் வனவாசம்
பனிரெண்டு ஆண்டுகள் முடிந்தவுடன்
மறைந்து வாழ்ந்தது ஓராண்டு!
சதிகார சகுனியின் செயலாலே!

----------------------------------------------------------

இலட்சுமணக் கோட்டைத் தாண்டியதால்
இலக்கை அடைந்தான் இராவணனே!
இச்செயல் வினையின் விளைவாக
இழந்தாள் இன்பம் ஜானகியே!

தடுக்கி விழுந்த துரியோதனனை
விடுக்கென உதவிட நினையாமல்
படக்கென சிரித்திட்ட செயலாலே
பட்டாள் துயரம் பாஞ்சாலி!

----------------------------------------------------------

பிறன் மனையாளை கரம்பிடித்து
பிடித்தே இழுத்த பாவிகளில்
பத்துத் தலையோனும் மடிந்தானே!
புத்திகுறை தம்பியும் மடிந்தானே!

----------------------------------------------------------

இராம இராஜ்ஜிய பேரரசி
இராம நீதியின் பெயராலே
கானகம் சென்றாள் துயரோடு!
கடேசியில் புதைந்தால் மண்ணோடு!

பாண்டவர் வெற்றியை பெற்றாலும்
பாஞ்சாலி பிள்ளைகள் அழிவாலே
வாடியே விழுந்தாள் தானாக!
வாழ்வும் கழிந்தது நெருப்பாக!

----------------------------------------------------------

இதிகாசப் புராணங்கள் இரண்டிலுமே
இன்னல்கள் இருவரும் அடைந்தாலும்
இரும்பாய் இதயம் கொண்டதாலே
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்!

23/05/2017

ஊழியரின் மன ஒட்டம்



அடிமைப்படுத்திடும் எண்ணம் கொண்டு
அடக்கிட யாரையும் எண்ணாதே!
சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்
சீற்றம் என்றும் குறையாதே!


காலமும் நேரமும் வந்துவிட்டால்
காற்றாய் உடன்வெளி வந்திடுமே!

பணித்திடும் எல்லாம் செய்துவிட்டால்
பொதிச்சுமை கழுதையாய் நினையாதே!

பொருளைப் பெரிதாய் நினையாதோர்
பாரினுள் உள்ளதை மறவாதே!
கடமையைக் கடவுளாய் காண்பவனை
கயிற்றால் கட்டுதல் அவமானம்!

கயிற்றை சினத்துடன் அறுத்தெறிந்தால்
கடவுளே தருவான் வெகுமானம்!
அன்பாய் அணைத்தால் அடங்கிடுவான்!
அடக்கிடத் துடித்தால் உடைத்திடுவான்!

பண்பாய் கதைத்தால் மதித்திடுவான்!
பதராய் மதித்தால் விலகிடுவான்!
கழிக்கும் கணங்கள் முழுவதுமே
கருத்தில் கண்ணாய் இருந்திடுவான்!

புத்தியின் சக்தியை கூட்டிடவே
புதுப்புது விசயங்கள் கற்றிடுவான்!
புயலாய் அனலாய் வேகத்துடன்
புத்துயிர் பெற்றதும் பாய்ந்திடுவான்!

களிமண் பொம்மை



மகள் செய்த பொம்மையதின்
மனம் சொல்லும் சேதிகேளீர்;

இளஞ்சிவப்பு நிறத்திலோரு
பெண் பொம்மை

நீல நிறத்திலொரு
ஆண் பொம்மை

எப்போதும்
இவை இரண்டும்
இணைந்தேதான் இருக்கனுமாம்!
இல்லையெனில்
இவள் கண்கள்
விழி நீரால் நனைந்திடுமாம்!

அப்பப்பா! என் சொல்வேன்?!
பிரிவின் வலி
அது கொடுமை

அக்கொடுமை செய்திடவே
அப்பாவும் நினைப்பேனோ?!

சில நிமிடம் கழிந்ததுமே......
இரு பொம்மை ஒன்றாக
இணைத்துவிட்டாள்
என் குழந்தை!

விதி வலிமை
இது உண்மை
யார் தடுக்க முடியுமடா?

களிமண்ணில் வந்த பொம்மை
களிமண்ணாய் ஆனதடா!!

இறை செய்யும் அற்புதத்தை
இவள் செய்து காட்டிவிட்டாள்!

22/05/2017

போட்டியின் தொடக்கம்-முடிவு?







உயிரணு போட்டியின் வெற்றியிலே
உயிராய் உலகினில் ஜனித்திடுவோம்!

மரபணுப் பதிவின் போட்டியிலே
பரம்பரை யாதெனப் பதிவாகும்!

படிப்பில் போட்டி வந்துவிட்டால்
பண்பும் அறிவும் தமதாகும்!

பதவிப் போட்டி வந்துவிட்டால்
பழகிய நட்பும் பகையாகும்!

அதிகாரப் போட்டியின் விளைவாக
அமைதியின் இருப்பு இழப்பாகும்!

சகோதரப் பாசப் போட்டியெல்லாம்
பிரிவினை வந்தால் வேறாகும்!

ஆயுதப் போட்டியின் உச்சத்திலே
அகிலம் அழிந்திடும் போராகும்!

அறத்தை சேர்ப்பதில் போட்டியென்றால்
அன்பின் குணமே செழித்தோங்கும்!

பொருட்கள் சேர்ப்பில் போட்டியென்றால்
பொறாமை குணமே தலையோங்கும்!

மனிதன் போட்டி கொள்ளாத
மரணம் உயிரின் முடிவாகும்!

21/05/2017

எதிரியும் இறைவனே!



தடையில்லா பயணமதில் சுவாரசியம் இருப்பதில்லை!
தப்பில்லா முயற்சியிலே அனுபவங்கள் கிடைப்பதில்லை!

மண்ணோடு போராடி விதை முளைத்தால் விருட்சமாகும்!
கல்லோடு போராடி சிலை வடித்தால் சிற்பமாகும்!

எதிரியின் ஏளனங்கள் ஏற்றிவிடும் ஏணியாகும்!
எதிர்ப்பின் வீரியங்கள் வெற்றிக்குப் படியாகும்!

பகைவனை அருள்செய்ய பாரதியும் வேண்டுகின்றான்!
பாய்ந்திடும் புலியினிலும் சக்தியையே காணுகின்றான்!

பலரது உயிர்களிலே படைத்தவனே உறங்குகின்றான்!
சிலரது இதயங்களிலோ சிவமாக விழிக்கின்றான்!

நட்பும் எதிர்ப்பும் குணத்தாலே வளர்ந்திடுமே!
நல்லதும் கெட்டதும் வினையாலே விளைந்திடுமே!

இரட்டைகள் இருப்பதெல்லாம் இயற்கையை புரிந்திடவே!
இயற்கையை
ப் புரிந்துவிட்டால் எதிரியும் இறைவனாவான்!

ஏதுமில்லை-சொல்லிடாதீர்



பாரினிலே பல உயிர்கள்
பட்டினியால் அலறுது!
பாலூட்ட தாயில்லாமல்
பசியினால் துடிக்குது!
பருக்கை அரிசி கிடைக்காமல்
பச்சைமண்ணு புறளுது!

உடைமை என்று எதுவுமில்லை!
உடுக்க ஒரு துணியுமில்லை!
படுக்கை விரிப்பு எதுவும் இல்லை!
படுக்க ஒரு இடமும் இல்லை!
பத்தினி பெத்தபிள்ளை
படும்பாடு கொஞ்சமில்லை!

எள்ளவும் புரியவில்லை
என்னிறைவன் கர்மமது?!
இக்கொடுமை கண்டபின்னும்
இடர்பாட்டு பாடுவோரே..
ஏதுமில்லை என்ற சொல்லை
இனியென்றும் சொல்ல வேண்டாம்!

-----------------------------------------------------------------
" உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.........."
----------------------------------------------------------------

நட்பே-நட்பின் சிறப்பே!


அன்பில் வாடா மலரே!
ஆதவன் அளித்திடும் ஓளியே!
இதயம் பேசிடும் மொழியே!
ஈன்றவள் தந்திடா உடன்பிறப்பே!
உண்மை நிறைந்த உறைகல்லே!
ஊனுயிர் கலந்த உறவே!
என்றும் வாழ்த்திடும் மனமே!
ஏற்றம் கொடுத்திடும் ஏணியே!
ஐம்பொறி தராத நிறைவே!
ஒருமையில் வாழா பெருமையே!
ஓதிடும் அறிவுறை மறையே!
ஔடதம் போன்ற(து) நட்பே!
அஃதே நட்பின் சிறப்பே!

17/05/2017

விடியுமா? / தமிழனோட விடிவுகாலம்?!!!!



தமிழகமே! தமிழகமே!-ஏன்
தலைகுனிந்தாய் தமிழகமே!
வாழ்ந்த இனம் வீழ்வதாலே
வருந்தி நீயும் வாடினாயோ?!


ராஜராஐன் ஆண்ட இடம்-இன்று
ராட்சகர்கள் கையில் போச்சு!
காமராஜர் வாழ்ந்த இடம்- வெறும்
கானல் நீரின் வெள்ளமாச்சு!

அண்ணா நாமம் கொண்ட கட்சி!
அண்ணாவுக்கு நாமம் போட்ட கட்சி!
இரண்டு கட்சியும் ஆண்டாதால
இருப்பு எல்லாம் களவு போச்சு!

திராவிடன்னு சொல்லி சொல்லி
தமிழன் வாழ்வு கேள்வி ஆச்சு!
சாராயக்கடை திறந்து திறந்து
சாதி மத சண்டை ஆச்சு!

ராம ராஜ்யம் என்று சொல்லி
ரவுடி ராஜ்யம் நடத்தும் கட்சி
தமிழ்நாட்டின் வளத்தை எல்லாம்
தரிசா மாத்தத் துடிக்குதிங்கே!

தடுக்கக்கூட முடியாமல்
தலையிலடிச்சு போராடுறோம்!
தரித்திரக் காரனெல்லாம்
தனிக்கட்சி தொடங்குதிங்கே!

ஒன்னும் இங்கே புரியவில்லை!
ஒருத்தன்கூட ஒழுங்கு இல்லை!
தமிழனோட விடிவுகாலம்
தலைவிதியின் கையில்தானோ?!!!