29/05/2017

துயர வாழ்வு / பூனையும் நானும்




புல்லுமேல படுத்துருளும்
பூனையாரே! பூனையாரே!
நீரும் உணவும் உடனிருக்க
நீர் யாரைத் தேடுகின்றீர்?

கல்லுமேல அமர்ந்திருக்கும்
கருத்த பெரிய மனிதரே!
என்கொடுமை என்னவென்று
எடுத்துரைப்பேன் நீர் கேளும்;

வெயில் கொடுமை தாங்காமல்
வெறும் உடம்பில் உருளவில்லை!
விட்டுப்போன உறவாலே
வெறுப்பாலே வாடுகின்றேன்!

உன்நிறத்தில் எம்புருசன்
ஒருநாளு ஓடிவந்தான்!
பதமாத்தான் பழகியவன்
பொசுக்கென்று ஓடிப்புட்டான்!

சிலநாள் ஆனபின்னே
வயிறுவீங்கிப் போயிறுச்சு!
அடுக்கடுக்கா ஆறுகுட்டிய
அசராம பெத்துபோட்டேன்!

எடுத்துக் கொஞ்ச புருசன் இல்லை!
எங்கே அவன்?!...தெரியவில்லை!

பாத்துப்பாத்து நான் வளர்த்த
பிள்ளைகளும் காணவில்லை......

பாவிநானும் தேடுகின்றேன்....
பார்த்தால் நீரும் சொல்லுமய்யா....

ஐய்யோ பாவம்....பூனையாரே..
என்னவென்று சொல்லிடுவேன்?
உன்சோகம் தீர்த்திடுவேன்?

ஆறறிவு மனுசனோட
பெண் இனத்தின் கொடுமைபோல
உன் கொடுமை உள்ளசேதி
என் மனதைத் தைக்கிறது!
வலி என்னை வதைக்கிறது!

ஐந்தறிவில் ஒன்றுகூடி
ஆறறிவாய் ஆனபின்னும்
பகுத்தறிவு இல்லாத
ஆணினத்தின் சார்பாக
அழுதேநான் வருந்துகின்றேன்!

No comments: