16/06/2025

இக்கரைக் கக்கரை பச்சைதான்

 

இக்கரைக் கக்கரை பச்சைதான்- உன்
அக்கறைக் கெக்குறை உச்சந்தான்-வா
சுக்கிர திசையினி பக்கந்தான்- தா
சக்கரை யினிக்கிற முத்தந்தான்!

✍️செ. இராசா

நாக்கு நன்றாகச் சுழலும்படி எழுதிய சந்தம் (Tongue twisters) மக்களே....

14/06/2025

வாழ்வீர்பல்லாண்டு

 

மக்கள் பணியே
.....மகேசன் பணியென்னும்
அக்காலச் சொல்வழக்கின்
.....ஆழம்போல்- எக்கணமும்
மற்றோர் மகிழ்ந்திடவே
.....மாற்றிசையைத் தோற்றுவிக்கும்
அற்புதமே! வாழ்வீர்பல்
.....லாண்டு!!!

13/06/2025

மெட்டு: வானத்தைப் பாத்தேன்

 

நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)
இது எதனால் நடந்தது என்று
இங்கே எவருக்கும் புரியவில்லை
இறந்துபோன அத்தனைபேரும்
உண்மையிலே பாவங்க...
கருகிப்போன அத்தனை உசுரும்
கண்ணுமுன்னே வருதுங்க...

நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...

பறந்திடும் முன்னே பார்க்கலையா?!
பழுதென முன்னேத் தெரியலையா?!
யாரைக் கேள்வி கேட்பது?
ஐயோ கடவுளே...
மனிதப் பிழைக்கிது தண்டனையா?
மனிதனாய்ப் பிழைப்பதே தண்டனையா?
ஒன்னும் புரிய வில்லையே... எல்லாம் தொல்லையே..

அட...வாழ் வென்பதே மாயை
இதை ஆழ் மனதிலே நீவை
அட...வாழ் வென்பதே மாயை
இதை ஆழ் மனதிலே நீவை

நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)

ஒரு நபர் குதித்து பிழைத்துவிட்டார்
பல பேர் உயிர்களைக் கொடுத்துவிட்டார்
விதியின் ஆட்டம் என்பதா
விளங்கவில்லையே
மருத்துவப் பிள்ளைகள் பாவமுங்க....
அவர்களின் நிலைமை கொடுமையுங்க..
என்ன சொல்லி என்னங்க எல்லாம் நேரங்க....
ஒரு நீர்க்குமிழிபோல் வாழ்க்கை
இதை ஆழ் மனதிலே நீவை (2)

நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)

✍️செ. இராசா


12/06/2025

மகனேவுனை மகளேவுனை

 

மகனேவுனை மகளேவுனை
.........மதியாதவர் யாவும்
சகமேவுனை புகழ்வாரெனில்
.........சரியாகிடும் பாரும்!
எகத்தாளமும் எதிர்வாதமும்
.........இழையோடிடும் காலம்
அகக்காரியம் நடந்தேறிட
.........அதிலே;உரம் போடும்!

05/06/2025

இடியாப்போம் இடியாப்போம்

 




#இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)

இடியாப்போம் இடியாப்போம்
முடிஞ்சாநீ பிடிபாப்போம்...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிக்காம விடமாட்டோம்...

அப்படியா..
வாம்மா மின்னல்...

இடிமின்னலப்போல் ஏன்டா நீயும் ஓடுற
விடிகாலையில கண்ணாமூச்சி ஆடுற
இடியாப்பமுன்னு சோக்காத்தானே கூவுற
சரிபார்ப்பமுன்னு வந்தா சாலா தாவுற...

இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)

சந்துல பொந்துல புகுந்து வாறான்
வந்ததக் காணலைப் பறந்து போறான்
எப்படி இப்படி கடந்து போனால்
எத்தனை விக்கிம் எதுக்கு வீணா?
கண்ணுல காட்டுற எண்ண மில்லைன்னா
வண்டில வச்சிட்டு வாறீயே எதுக்கு?
ஒன்னையும் விக்கிற ஆசை இல்லைன்னா
ஒன்டியாக் கூவுற ஓலம் எதுக்கு?!

பல்லில்லாத பெருசுகூட
பாலவூத்தத் துடிக்கும்
பொக்க வாயில் பாலவிட்டுப்
பாயாசமாக் குடிக்கும்

பச்சப்பள்ள அத்தனைக்கும்
இடியாப்பான்னா உசுறு
அச்சாநஹி ஐயம்சாரி
மத்ததெல்லாம்‌....நவுறு

கடலைக்கறி குருமாகூட
சேர்த்தா நல்லா இருக்கும்- அது
கிடைக்கலைன்னா என்னா இப்போ
வெல்லம் போட்டா ருசிக்கும்!

ஆயில் இல்லாப் பண்டந்தானே
ஆயுளக் கூட்டிக் கொடுக்கும்- அட
வறுத்து பொரிச்சு திண்ணோமுனா
வயசுதானே குறையும்!

இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)
இடிமின்னலப்போல் ஏன்டா நீயும் ஓடுற
விடிகாலையில கண்ணாமூச்சி ஆடுற
இடியாப்பமுன்னு சோக்காத்தானே கூவுற
சரிபார்ப்பமுன்னு வந்தா சாலா தாவுற...

இடியாப்போம் இடியாப்போம்
முடிஞ்சாநீ பிடிபாப்போம்...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிக்காம விடமாட்டோம்...

✍️செ. இராசா 

02/06/2025

பெருங்கருணை மெல்லிசையே

 

பெருங்கருணை மெல்லிசையே
....பெய்வாய் இன்னிசையே!
தரும்இறைக்குச் சம்மதமோ
.....தனியாய் நின்றனையே!
அரும்பொருளை வைத்தெங்கும்
.....அளித்தாய் வைத்தியமே!
வரும்படைப்பு சொல்கிறதே
......வார்த்தோன் தனித்துவமே!
நுணுக்கரிய நுண்ணுணர்வே
.....நுண்மாண் நுழைபுலனே!
அணுக்குரிய அற்புதமே
.....ஆரா அமுதே!
கணமெழும்பும் முன்னாலே
.....கவியென எழுவோனே!
சணப்பொழுதும் ஓயாமல்
......பண்களில் மகிழ்வோனே‌‌!
இசைவள்ளல் ஆனவனே
....யாமளிக்க யாதுண்டோ?
திசையாவும் கடந்தவனே
.....தேனிசைக்கு..ஈடுண்டோ...
அள்ளியள்ளித் தந்தவனே
.....யாமளிக்க யாதுண்டோ?
எள்ளளவேப் பாடியுள்ளோம்'
.....ஏற்பீரோ தேசிகரே...
............ஞான தேசிகரே..
வள்ளலுனை வாழ்த்திடவே
...முத்தமிழைக் கோர்த்துள்ளோம்!
துள்ளலிசை சூழ்ந்திடவே
..தோல்தட்டி வார்த்துள்ளோம்!
மெல்லிசையின் நாயகனே
...வேறென்ன செய்திடுவோம்?!
நல்லிசைபோல் வாழ்வீரே
.....நன்று!
✍️செ. இராசா

01/06/2025

படித்த படிப்பொன்றாய்

 

படித்த படிப்பொன்றாய்ப்
......பார்ப்பது வேறாய்
அடியெடுத்து வைப்போர்
......அதிகம்- அடியேன்போல்
கிட்டியது யாதெனினும்
.......கெட்டியாய்ப் பற்றியதைத்
திட்டிமுடன் செய்தால்
........சிறப்பு!