19/09/2022

நீ இல்லையென்றால் --------- ஔவைத் திங்கள் - 009

 


புருவம் உயர்த்தியவள் புன்னகை பூத்தால்
அரும்பிடும் காதல் அகம்
(1)
 
விழியில் விழிமோதி வித்திட்ட காதல்
மொழியும் கவிதையின் மூச்சு
(2)
 
காதலர் ஒப்பந்தம் கல்யாணம் ஆனபின்
மோதலும் முத்தமும் உண்டு
(3)
 
முத்தத்தின் சாட்சியாய் முன்வயிறு முட்டிவர
புத்திரனோ புத்திரியோ பின்பு
(4)
 
குடும்பச் சுமைகொஞ்சம் கூடுகின்ற போதில்
எடுக்கும் முடிவில்தான் இல்
(5)
 
ஊடலும் கூடலும் ஒன்றிணைந்த இல்லத்தில்
தேடலும் கைகோர்க்கும் சேர்ந்து
(6)
 
எப்போதோ சொன்னதை இப்போது கேட்டாலும்
அப்போதும் சொல்வாள் அவள்
(7)
 
வாய்வார்த்தை முத்தி வழிமாறும் போதில்தான்
நோய்போல மாறும் நினை
(8)
 
நீரின்றி வாழ்வுண்டா? நீயின்றி நானுண்டா?
பாரென்னை என்றுரைத்துப் பார்!
(9)
 
இல்லாள் இனிதென்றால் எல்லாமும் உள்ளதுபோல்
இல்லையேல் ஒன்றும் இல
(10)
 
✍️செ. இராசா

No comments: