(எத்தனையோ எதிர்ப்புகளை மீறி சாதிவிட்டு சாதி திருமணம் நடந்த குடும்பத்தில், அந்த வீட்டுத் தலைவரை சம்மதிக்க வைக்கக் காரணமாக இருந்த மகாகவி பாரதிக்கு இந்த வெண்பா உரையாடல்களை சமர்ப்பிக்கிறேன்)
யாரென்ன சொன்னாலும்
.....ஏற்கமனம் தோன்றவில்லை
.....ஓர்கணம்- பாரென்னை
சாதிவிட்டு சாதியெனில்
.....தன்மானம் என்னாகும்?
நாதியற்று போகனுமா
.....நாம்?
என்னப்பா சொல்கின்றீர்?
.....இவ்வூரார் யாரப்பா?
என்:அப்பா நல்லப்பா
.....என்றெல்லாம்- சொன்னேன்பா
சித்தப்பா மாமாவாய்
.....செப்பியதும் பொய்யாப்பா
இத்தனைநாள் சொல்லலைப்பா
.....ஏன்?
பாரதியார் பற்றியெல்லாம்
.....பாடம் புகட்டிவிட்டு
பாரதி- யார்? என்பதுபோல்
......பண்ணாதீர்- பூரணமாய்
கட்டிக் கொடுத்திடுங்கள்
.....கைகாட்டும் பிள்ளையினை
விட்டுக் கொடுத்திடுங்கள்
.....வீம்பு!
உண்மை உணர்ந்தாலும்
.....உள்ளத்துள் போராட்டம்
கண்கள் திறந்தாலும்
.....காணாத- திண்டாட்டம்
மாறியது பாரதியால்
.....நான்பார்த்த கண்ணோட்டம்
மீறிடலாம் பொய்வர்ணம்
....விட்டு!
பிள்ளைக்காய் வாழ்வதாய்
.....பேசுகின்ற பெற்றோரும்
பிள்ளைசொல் கேளாமல்
......பிற்போக்கைப் - பற்றுகையில்
முற்போக்காய் வாழ்கின்ற
.....மூத்தகுடி என்பதுபோல்
நிற்கின்றீர் அப்பா
.....நினைந்து!
செ. இராசா
No comments:
Post a Comment