எழுத்தில் கனமில்லையாம்
என் மேல் எழுந்த குற்றச்சாட்டு இது...
உண்மையில்...
கனமான குற்றச்சாட்டுதான்...
ஆம்... எழுப்பியவர் கனமானவர் என்பதால்.
இலக்கணம் இல்லாவிட்டாலும்..
தலைக்கனம் இல்லாதோன் என்று
தட்டிக்கொடுத்த அவரே தான்
இன்று கனமில்லை என்கிறார்....
இங்கே
தலைக்கனம் கொண்ட தீக்குச்சி
நிமிர்ந்து எரிகிறதென்றாலும்
தலைக்கனம் கொண்ட நெற்பயிர்
குனிந்து பணிகிறதென்றாலும்
அதற்குக் காரணம் கனம்தானே..
ஆனால்....
இந்தக் கனத்தை எப்படி எடைபோடுவது?!
மலர்களை எடை போடமுடியும்
மணத்தை எடை போட முடியுமா?
மனிதனை எடை போடமுடியும்
மனத்தை எடைபோட முடியுமா?
அப்படியே எடைபோட்டாலும்
ஒரு கிராம் வைரத்திற்கு
ஒரு கிலோ கத்திரிக்காய் நிகராகுமா?
ஒரு மாகவி கம்பனுக்கு
ஓராயிரம் மா..மா கவிகள் நிகராகுமா?!
உண்மையைச் சொல்லுங்கள்...
இங்கே கனம் எதைப்பொறுத்தது?
புவியில் என்நிறை 77 கிலோ என்றால்
நிலவில் என்நிறை மாறுகிறதே...
சில ரேசன் கடைகளில் நிறை 1 கிலோ என்றால்
நம் வீட்டுத் தராசில் நிறை குறைகிறதே...
எனில் கனம் இடத்தைப் பொறுத்ததா?
இல்லையா பின்னே....
குழும விருதை வைத்து
எடை போட முடிந்தால்
பாரதிக்கேன் மூன்றாம் பரிசு?
ஒருவேளை..
அவர் எழுத்தில் கனமில்லையோ...?!!
அப்படித்தான் கணித்தார்கள்
அக்கால நடுவர்கள்...
அதைவிடுங்கள்...
என் எழுத்தில் கனமில்லையா?!
இருந்துவிட்டு போகட்டும்...
காலம் கனியாமலாப் போய்விடும்?!!
காத்திருக்கிறேன்....
கணம் கணம்...கனம் மிகவே...
செ. இராசா
No comments:
Post a Comment