27/04/2021
26/04/2021
மறைக்க முயன்றேன் முடியவில்லை
இரவினைக் கவ்விடும் பகலாய்ப்
பகலினைத் தீண்டிடும் இரவாய்ப்
பட்டெனக் கட்டிலில் வரவா- உனைச்
சட்டென சடுதியில் தொடவா!
சூரியன் சுட்டதும் மேலெழும் நீரலை
....மேகமாய் மாறுதல்போலே-நான்
....மோகமாய் மாறுகிறேனே
காற்றலை பட்டதும் கொட்டிடும் தூரலை
...பற்றிடப் பாய்வதுபோலே- நான்
...பற்றிட ஏங்குகிறேனே..
சொல்லவும் முடியல தள்ளவும் முடியல
மறுக்கவும் முடியல மறைக்கவும் முடியல
என்னது புரியல எண்ணிட முடியல
கன்னியின் வேதனை காட்டிட முடியல
செ.இராசா
#வள்ளுவர்_திங்கள்_157
#தலைப்பு_மறைக்க_முயன்றேன்_முடியவில்லை
25/04/2021
உசுரக் கொடுத்துதானே உழைக்கிறேன்
உசுரக் கொடுத்துதானே உழைக்கிறேன்
........ஆனால்
உசரம் போகத்தானே முடியல!
என்னப் பொழப்பு இது தெரியல!
.........ஏனோ
இன்னும் எதுவுமிங்கே நடக்கல!
கரும வினை என்றே நினைக்கிறேன்
காலம் கனியாம தவிக்கிறேன்
காயம் பட்டதுபோல் துடிக்கிறேன்
கவிதை மருந்தள்ளித் தடவுறேன்
சாயிபாபா
(அண்ணா அவர்களின் விருப்பத்திற்கிணங்க சாயிபாபாவின் நல்லாசியுடன் உருவாகி வரும் பாடலின் சில வரிகள்)
ஷீரடி ஊரின் சாய்பாபா
யாவரும் உந்தன் சேய்பாபா
அறிவோம் ஹரிஓம் சாய்பாபா
ஆண்டவர் நீயெம் தாய்பாபா!?!
அல்லாஹ் மாலிக் என்றே சொன்னார்
அற்புத சத்குரு சாயி
எல்லா மார்க்கமும் ஒன்றே கண்டார்
எங்கள் சத்குரு சாயி
வந்தோர்க் கெல்லாம் அன்னம் தந்தார்
வள்ளல் சத்குரு சாயி
தந்தோர்க் கெல்லாம் தானம் தந்தார்
தந்தை சத்குரு சாயி
வடக்கெனச் சொல்லி வழக்குரைப் போர்க்கும்
கிழக்கென எள்ளிக் கிளப்பிடு
வோர்க்கும்
வடக்கென தெற்கென வகுத்தவர் யாரென
படக்கென பட்டென படைத்தவர் வாக்கென
எண்திசை நோக்கி தன்திசை காட்டிடும்
நன்திசை காட்டியே சாயி
நன்திசை காட்டியே சாயி
நன்திசை காட்டியே சாயி
கடமையை மறந்து உலவிடு வோர்க்கும்
கடவுளை மறந்து களங்கிடும் பேர்க்கும்
நோயென நொடியென நொந்திடும் வாழ்வென
சீயெனப் பொயினும் சீர்பெற வேண்டிட
குருவென உறவென குணமுள்ள நட்பென
வருகிற உருவே சாயி!
வருகிற உருவே சாயி!
வருகிற உருவே சாயி!
செ.இராசா
24/04/2021
தேன்
#இது_விமர்சனப்பதிவல்ல
#ஒரு_இரசிகனின்_உள்மனப்பதிவே
சினிமா என்பது-வெறும்
பொழுதைப் போக்கும் சாதனமல்ல
சினிமா என்பது-பெரும்
பழுதை நீக்கும் சாதனம்....
ஆம்...
இந்த சமுதாயத்தின்
சந்துபொந்தெல்லாம் புகுந்துள்ள
சாதி
மதம்
இலஞ்சம்
ஊழல்
அகங்காரம்
ஆணவம்
திமிர்
தெனாவெட்டன
ஊடுறுவி ஊடுறுவி
உருக்குலையவைக்கும்
பெரும் பழுதை நீக்கும் சாதனம்!
அப்பேர்ப்பட்ட சினிமாவை
எப்படியெல்லாம் மாற்றிவிட்டார்கள்...?!!
ஐயகோ...
கலையைக் கொலை செய்து
காசை மட்டுமே குறிபார்த்தால்
சினிமா சீரழியாமல் என்ன செய்யும்?
இதுவா சினிமா?
என்று ஏங்குவோர்களுக்காக
இதுவல்லவோ சினிமா என்று காண்பிக்க
எப்போதோ சில படங்கள் வருவதுண்டு
அந்த வரிசையில்
இந்த வருடத்தின்
ஆகச் சிறந்த #தேசிய_விருதுக்கு
தகுதியுள்ள படமென்றால்
அது சத்தியமாக
இந்தத் தேனாகத்தான் இருக்கும்
ஏற்கனவே 53 விருதுகளை
வாங்கிக் குவித்துள்ளதாம்
இந்தத் "தேன்"
சொல்லும் போதே வியந்தேன்
சொல்லைப்போல் மலைத்தேன்
உள்ளமெல்லாம் மகிழ்ந்தேன்
உளமார புகழ்ந்தேன்
ஆம்
இது வெறும் தேனல்ல
இன்னும்....இன்னும்....
பல விருதுகளைக் குவிக்க
இப்போதே காத்திருக்கும் பெருந் "தேன்"
ஆமாம்...படத்தின் கதை என்ன?
"கதை"
அதை நான் சொல்லக்கூடாது
நீங்களே பாருங்கள்...
எல்லாம் நம்ம கதை தான்...
செ.இராசா
(இணையத்தில்தான்
இப்படம் பார்த்தேன். அந்த வெற்றிப்படத்தின் இயக்குனர் திரு. கணேஷ் விநாயக்
அவர்களிடம் படம் பற்றி பகிர்ந்துகொண்டு பாராட்டுகளையும் தெரிவித்தேன்.
சின்ன ரோலோக இருந்தாலும் சிறப்பாக நடித்த நண்பர் கம்பம் குணாஜியின்
நடிப்பும் அவரின் டப்பிங் மோலாண்மையும் மிகவும் அருமை. அவரிடம் பாராட்டைத்
தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு இயக்குனரிடம் பேசும்
வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொண்டு படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் இனிய மனமார்ந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்)
வாழ்த்துகள் அனைவருக்கும்
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!!
22/04/2021
பிடித்த கருத்தை
21/04/2021
விட்ட பணிசெய்ய அழைக்க வேண்டி .... விண்ணுக்கே வந்தாயோ
நட்ட மரக்கன்றின் கணக்கு சொல்ல
.....நடுவிலேயோ வந்தாயோ?!
பட்ட துயரத்தைப் பகிர்ந்து கொள்ள
.....பதறிப்போய் வந்தாயோ?
கெட்ட கிருமிகளைப் பொசுக்க வேண்டி
.....கீழிருந்து வந்தாயோ?!
விட்ட பணிசெய்ய அழைக்க வேண்டி
.... விண்ணுக்கே வந்தாயோ?!
செ. இராசா
தமிழ்நாட்டைக் கூறுபோடும்
அனுபவப் பதிவு 18---------சென்னையில புதுப்பையன்
பொறியியல்
முடித்தவுடன் சொந்த ஊரில் ஆறு மாதங்கள் வேலை பார்த்த பிறகு சென்னை
நோக்கிச் சென்றேன். எங்கள் ஐயா (அப்பாவின் அப்பா) VKN கண்ணப்பச் செட்டியார்
அவர்களிடம் கணக்கப் பிள்ளையாக 48 வருடங்கள் மலேசியா, பர்மா என்று வேலை
பார்த்துள்ளார்கள். என் தந்தையாரும் அவர் மகன் கண்ணப்பச் செட்டியாரிடம்
(இருவருக்கும் ஒரே பெயர்தான்) மதுரையில் உள்ள பெட்ரோல் வங்கிகளில் மேலாளராக
ஒரு 7 வருடங்கள் வேலை பார்த்துள்ளார்கள். இப்போதுவரை அவர்கள் வீட்டில்
எந்த விடேடமாக இருந்தாலும் கணக்குப் பிள்ளையாக அப்பாவைத்தான் அழைப்பார்கள்.
அவர்கள் குடும்பத்தில் முதன் முதலாக வந்த பொறியாளர் என்பதால் நான் நன்றாக
வரவேண்டும் என்ற அக்கரையில் கண்ணப்பச் செட்டியார் அவர்கள் அவரின் ரோட்டரி
சங்க நண்பரான CR ராஜூ என்ற புகழ்பெற்ற ஆர்க்கிடெக்கிடம்
சேர்த்துவிட்டார்கள். அவரிடம் வேலைசெய்வது என்பது இயக்குனர் சங்கர்,
மணிரத்னம், பாலா போன்றவர்களிடம் வேலை பார்ப்பதுபோல். நம்மை கட்டிடவியல்
துறையில் செதுக்கி விடுவார்கள். அவரை நான் முதன்முதலில் சந்தித்த தருணம்
மிகவும் பயமாகவே இருந்தது. சம்பளம் எவ்வளவு வேண்டும் என்றார். எனக்கு
எவ்வளவு கேட்க வேண்டுமென்றுகூட தெரியவில்லை. அவசரத்தில் 2500/- தாருங்கள்
என்றேன். சரி என்று கூறிவிட்டு வேலைபார்க்கும் களத்திற்குச் செல்லத்
தயாராகச் சொன்னார். வெளியே வந்து அங்குள்ளவர்களிடம் நடந்ததைக் கூறியபோது,
சென்னையில் அந்தப்பணம் பத்தாதே....ஒரு 3000/- மாவது கேட்டிருக்கலாமே
என்றனர். தவறிழைத்து விட்டோமோ என்ற எண்ணத்துடன் குழப்பத்தில் இருந்தபோது
அழைப்பு வந்தது.
சூளைமேட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து போரூர்
மதனந்தபுரத்தில் உள்ள சுவாமி பள்ளிக்கு (Swamy School) அழைத்துச்சென்றார்.
மிகவும் பயபக்தியுடன்
அவருடை மகிழுந்தில் பயணித்தபோது அங்கேதான் எனக்கான
நேர்முகத் தேர்வு நடந்தது என்றே சொல்லலாம். அவர் வாகனத்தில் இருந்த
பிள்ளையாரைப் பார்த்த போது எங்கள் கண்ணன் சித்தப்பாவின் வாகனத்தில் இருந்த
அதே பிள்ளையார்தான் ஞாபகம் வந்தது. நான் அந்தப் பிள்ளையார் காதில் செல்லமாக
கிள்ளிப்பையன் என்று கூறி கிள்ளி அவ்வப்போது விளையாடுவேன். அந்த ஞாபகம்
வந்துபோனது ஒரு சிரிப்பையும் தைரியத்தையும் உள்ளூர தந்தது. அப்போது அவரிடம்
என் சம்பளத்தை கூட்ட முடியுமா என்றுதான் கேட்டேன். ஆத்தாடி ஆத்தா.....
அப்போது அவருக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே.... ஏன்டா....இப்பதான்
வேலைக்கே சேர்ந்த...இன்னும் ஒருநாள் கூட
வேலை பார்க்கலை. அதுக்குள்ள
சம்பளத்தை கூட்டனும்னு வந்துட்ட. முதல்ல இது சம்பளம் இல்லை. நீ வேலை
கத்துக்கொள்ள நான் தரும் உதவித்தொகை (Stipend) அவ்வளவே.... அப்படி அவர்
திட்டினாலும் எனக்கு சில மாதங்களிலேயே 3000 ரூ கொடுத்தார்.
எனக்கான
முதல் வேலை என்னவென்றால், ஒரு நான்கு மாடிக் கட்டிடம், அதைப் பக்கத்தில்
ஏற்கனவே உள்ள கட்டிடம்போல் புதுப்பிக்க வேண்டும் (அதுவும் அவர் கட்டியதே).
மிகவும் அற்புதமான சவாலான வேலையது. கட்டிடத்தின் வெளியே இடையிடையே துளை
போட்டு பீமைச்சொருகி வளைவான ஆர்ச்சை நிறுத்தி வடிவமைக்க வேண்டும்.
ஆர்க்கிடெக்ட் என்ற படிப்பு நான் படித்த கட்டிடவியல் மற்றும்
கட்டுமானவியலில் இருந்து சற்றே வேறுபட்டது. இது சினிமாவில் உள்ள கலை
இயக்குனர் (Art Director) போன்ற படிப்பு. இதற்குத் தனியாக விண்ணப்பம் போட
வேண்டும் என்ற அறிவுகூட எனக்கில்லை. என்ன செய்ய?!.
ஐந்து வருடப்படிப்பு
அது. நல்ல ஆர்க்கிடெக்ட் என்பவர் தன் தேடலையும் தன் அறிவையும்
பெருக்கிக்கொண்டே இருப்பார். நம் CR ராஜூ அவர்களும் அப்படியே. தன் அறிவைப்
பெருக்க காரைக்குடி செட்டிநாடு வீடுகளுக்குப்போய் அங்குள்ள வடிவமைப்பை
ஆராய்ந்து வருவார்களாம்....இது
எப்படி இருக்கு? நாம அங்கிருந்து வர்ரோம். இவுங்க அங்க போறாங்க. ஆனாலும்
ஆர்க்கிடெக்டின் வியாபாரமே தனி. அவர்கள் தனக்கென்று ஒரு பாணி கொள்கை
எல்லாம் வைத்திருப்பார்கள்.
இவர்களின் Clients இவர்களை முழுமையாக
நம்புவார்கள்.
இவர்கள் படம் வடிவமைத்து அதில் Item Rate முறையில் Quantity எடுத்துத்
திறந்த முறையில் ஒப்பந்தக்காரர்களை அழைத்து தேர்வுசெய்து வேலை நடக்க நடக்க
எவ்வளவு பணம் தரவேண்டும் என்று Client க்கு சிபாரிசு செய்து தனக்கான
பணத்தையும் விகிதாசார (%) முறையில் எடுத்துக் கொள்வார்கள். உண்மையில் இந்த
முறையில் செல்வதால்தான் அவர்கள் எப்போதும் தன் துறையில் கலை நோக்கிலேயே
பயணிக்க முடிகிறது. அதே சமயத்தில் பணமும் வருகிறது.
போரூர்,
பூந்தமல்லி, கொட்டிவாக்கம், நுங்கம்பாக்கம்,...........என பல இடங்களில்
அப்போது வேலை நடந்தது. நான் ஒரு பத்து மாதங்கள் செந்தாமஸ் மவுண்டில்
இருந்தும் பிறகு பழவந்தாங்கலில் இருந்தும் சென்னையைச் சுற்றிச்சுற்றி வலம்
வந்தேன். இந்தச் சென்னை கற்றுக்கொடுத்த பாடம்தான் என்னை முழு மனிதனாக்கியது
என்றே சொல்லலாம்.
சொல்கிறேன்....
19/04/2021
கண்டா வரச்சொல்லுங்க வெண்பா
நிலையாமை ------வள்ளுவர் திங்கள் 156
கடந்ததை எண்ணிக் கலங்கிட வேண்டாம்
நடப்பதை ஏற்று நட
(1)
இருந்தோன் இறந்தான் இருப்போன் இறப்பான்
இருக்கையில் வாழ்வாய் இனிது
(2)
உடலை எரித்தால் ஒருபிடிச் சாம்பல்
உடலாசை வேண்டாம் உதறு
(3)
நெற்றியில் வைக்கிற நீறினைப் போலவே
பற்றினால் எல்லாம் பொடி
(4)
தந்திடத் தந்திடத் தந்தது வந்திடும்
வந்திட வந்திடத் தா
(5)
இரையை நினைந்தே இறையை மறந்தால்
கரையேற்ற யாருளர் சொல்?
(6)
தாயென்ன தாரமென்ன தன்னுயிர் போனபின்னே
வாயென்ன சொல்லும் பிணம்
(7)
இந்நேரம் இந்நொடி இஃதென்றே வாழாதோர்
எந்நேரம் வாழ்வாரோ இங்கு?!
(8)
விலைமகள் நாய்செத்தால் வந்திடும் கூட்டம்
விலைமகளுக் கில்லை உணர்
(9)
காற்று கழன்றுவிட்டால் காட்சியெல்லாம் மாறியிங்கு
தோற்றப் பிழையாகும் பார்
(10)
15/04/2021
யார்சொன்னது ஒன்றும் இல்லை
14/04/2021
கிழமைகள் பற்றிய ஓர் ஆய்வு
Sunday - ஞாயிறு - Ravivar
Monday- திங்கள்- Somwar
Tuesday- செவ்வாய்- Mangalwar
Wednesday- புதன்- Budhavar
Thursday- வியாழன்- Guroovar
Friday- வெள்ளி- Sukhrawar
Saturday-சனி- Shannivar
மேலே உள்ளது
#ஆங்கிலம்_தமிழ்_ஹிந்தி என மூன்று மொழிகளின் வார நாட்கள் பற்றிய ஒப்பீடு. இதில் இன்னும் மற்ற மொழிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
இங்கே ஒரு
#உலகமொழி_தாய்மொழி_தேசியமொழி என மூன்று மொழிகளை மட்டும் எடுத்துள்ளேன்.
இதில்
அனைத்து மொழிகளிலும் ஒரு பொதுவான ஒப்பீடைக் கவனிக்கலாம். அது என்னவென்றால்
அனைத்துக் கிழமைகளும் பெரும்பாலும் கோள்களின் பெயர்களிலேயே
ஒத்துப்போகின்றன
உதாரணம்;
#மூன்று_மொழிகளிலும் ஒத்துப்போகும் கிழமைகள்;
(1)
Sunday- ஞாயிற்றுக்கிழமை- Ravivar
Sun- ஞாயிறு- ரவி --->சூரியன்
(2)
Saturday-சனிக்கிழமை- Shanivar
Saturn- சனி-சனி---->சனி
(3)
Monday- திங்கள் கிழமை- Somwar
Mon-------திங்கள்----சோம
Moon----திங்கள்-Moon---சந்திரன்
#இரண்டு_மொழிகளில்_மட்டும் ஒத்துப்போகும் கிழமைகள்
(1)
Tuesday- செவ்வாய் கிழமை- Mangal war
xxxxxxxx- செவ்வாய்- மங்கல் (Mars)
(2)
Friday- வெள்ளிக்கிழமை- Sukhrawar
xxxxxxxx-வெள்ளி-சுக்ர (சுக்கிரன்)-- Venus
#ஓரளவு_இரண்டுமொழிகளில் ஒத்துப்போகும் கிழமைகள்
(1)
Wednesday- புதன்- Budhavar
xxxxxxx-புதன்-புத
(2)
Thursday- வியாழன்- Guroovar
xxxxxxx- வியாழன்-குரு (குருவிற்கு உகந்த நாள் வியாழன்)
அதெல்லாம்
சரி இந்த ஒப்பீடெல்லாம் ஏனென்றால், எப்படி எங்கெங்கோ உள்ள மொழிகளெல்லாம்
கோள்களை அடிப்படையாக வைத்தே ஒத்துப்போகின்றன. இப்படிப் பெயர்களை யார்
வைத்தார்கள்? இதில் எது மூல மொழி?!!
இன்னும் ஆராய வேண்டும்....
தெரிந்தால் சொல்லுங்களேன்...
செ.இராசா
13/04/2021
வள்ளுவர் திங்கள் 155---------தாழ்ந்திடாதே----அதிகாரம் மானம்
நல்ல உணவிலே நஞ்சைக் கலந்திட்டால்
நல்லதற்கும் பேரென்ன? நஞ்சு!
(1)
உயரத்தில் நிற்போர் ஒருவேளை வீழ்ந்தால்
உயரம் பொறுத்தே அடி
(2)
புகழின் உயரத்தால் போதையில் வீழார்
சகத்தில் தெரிவார் தனித்து
(3)
பொருளது போனாலோ போகட்டும் ஆனால்
பெருகின்ற பேர்போனால் போச்சு
(4)
சிகரத்தில் நின்று சிறுஞ்செயல் செய்தால்
சகலரும் ஊதுவர் சங்கு
(5)
மானம் மரியாதை மண்ணிலே இல்லையெனில்
சாணத்தைப் போல்தான் மதிப்பு
(6)
இலக்கினை எட்டியதாய் ஏறாமல் நின்றால்
இலக்கின்மேல் நிற்பர் பலர்
(7)
இல்லாத போதும் இருப்போனாய் வாழ்வோனின்
இல்லத்தில் இல்லை இல
(8)
இகழ்வாரை எண்ணி இடிந்திட வேண்டாம்
நிகழ்வாலே யாரென்று காட்டு
(9)
ஞானச் செருக்கோடு வாழ்கின்ற ஓர்கவிஞன்
ஞானத்தால் வென்றிடுவான் பார்
(10)
செ.இராசா
11/04/2021
கடல் அன்னைக்காக ------------ வானத்துக்கு நீலம் தந்து ---- எஞ்சாமி
வானத்துக்கு நீலம் தந்து
மேகத்துக்கு நீரைத் தந்து
பூமிக்கே வாழ்வுதந்த எஞ்சாமி-நீ
சாமிக்கே சாட்சியான எஞ்சாமி!
எவ்வளவு கொடுத்தாலும்
எதைக்கொட்டிக் கெடுத்தாலும்
அப்பவும் அள்ளித்தரும் எஞ்சாமி- நீ
எப்பவும் வாழுஞ்சாமி எஞ்சாமி!
ஏலேலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி
ஏலேலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி
ஆண்டுகோடி ஆனபின்னும் ஆழிநீரும் வத்தவில்லை
ஆறாறா சேர்ந்தாலும் ஆழநீளம்
கூடவில்லை
நீரெல்லை மாறினாலும் நீரளவு மாறவில்லை.
ஊரெல்லைத் தாண்டினாலும் ஊறுமூலம்
நீயுமில்லை...
ஏலெலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி
ஏலெலோ ஏல ஏலோ ஏலே ஏலே எஞ்சாமி
உள்ளுக்குள்ள உப்பூ வச்சு
.....உப்ப எல்லாம் தள்ளி வச்சு
உச்சிமேல ஆவியாகி நீராகி
....ஊத்துகிற மேகந்தானே எஞ்சாமி
....தன்னைப்போல ஈரங்கொண்ட எஞ்சாமி
எத்தனையோ உசுர வச்சு
......அம்புட்டயும் உலவ வச்சு
அதையும் நம்பி புழைக்க வச்சு
.....அங்க இங்க நகர வச்ச எஞ்சாமி
.....அன்னைப்போல ஆனநீயே எஞ்சாமி
செ.இராசா
10/04/2021
நானும் ஓர் கவிஞன்!
இதை அங்கீகரித்தால் நானும் ஓர் கவிஞன்!
இல்லை புன்னகைத்தால் நீங்களே மிகச்சிறந்த இரசிகர்...!!!
08/04/2021
தனிமை
தனிமை என்பது வரமா? சாபமா?!
தனிமை என்பது வரமென்றால்
தனிமையில் போடும் சிறையென்பது
தண்டனைகளின் உச்சமாக உள்ளதே..
தனிமை என்பது சாபமென்றால்
தனிமையில் தோன்றும் ஞானமென்பது
தனித்துவத்தின் அம்சமாக உள்ளதே..
ஆனால்; இங்கே எது தனிமை?!
தன் மெய் தனித்திருக்க
தான் எங்கோ இணைந்திருத்தல்
தனிமை என்றாகுமா? இல்லை;
தான் இங்கே கூட்டத்தோடிருக்க
தான் எங்கோ இணைத்திருத்தல்
தனிமை இல்லை என்றாகிடுமா?
எனில்;
தனித்திருத்தல் ஒன்றும் தனிமையல்ல
தனித்தும் இணையாதிருத்தலே தனிமை!
பாலின் தனிமைக்குள்
நெய்யென்ற ஞானம்போல்;இங்கே
ஒவ்வொரு தனிமைக்குள்ளும்
ஓவ்வோர் அர்த்தமுண்டு...
சில தனிமைகள்
மலரின் தன்மைபோல் மணக்கும்!
ஆனால்...
சில தனிமைகள்
சாக்கடை நீரைப்போல் குமட்டும்!
"தனிமையிலே இனிமை காண முடியுமா?!"
என்ற கவியரசரின் கேள்விக்கு
'இனிது இனிது ஏகாந்தம் இனிதென்ற'
ஔவையின் கூற்று பதிலென்றால்
ஏகாந்தத் தனிமையும்
எதார்த்த தனிமையும்
ஒன்றல்லதானே?!
உண்மையைச் சொல்லுங்கள்
இங்கே யார்தான் தனிமையில் உள்ளார்கள்?!
நீங்கள்...
புவியின் எந்த மூளைக்குச் சென்றாலும்
புவிகூட தனிமையில் இல்லையே...
வேற்றுக்கிரகம் சென்றாலும்
அதுவும் பிரபஞ்சத்தின் அங்கம்தானே...
ஆக...
தனிமை என்பது
தனித்த மெய்யில் அல்ல..
தனித்துவமான மெய்யென்றே
தனிமையை உணர்ந்தால்
தனிமை இனிமையே...
தனிமை முழுமையே
இல்லையேல்...
தனிமை வெறுமையே
தனிமை வெறும் மெய்யே....
செ.இராசா
அதெல்லாம் சரி
சூரியன் உதிக்குமா?!
இலை துளிர்க்குமா?!
தாமரை மலருமா?!
மாங்கனி இனிக்குமா?!
பானை பொங்குமா?!
குக்கர் விசிலடிக்குமா?
முரசு முழங்குமா?!
கைவிளக்கு எரியுமா?!
விவசாயம் செழிக்குமா?!
கதிர் அறுவாள் அறுக்குமா?
கை உயருமா?!
.......
......
அதெல்லாம் சரி
இந்தக் கொரோனா குறையுமா கூடுமா?
செ.இராசா
07/04/2021
தம்தலையில் போடுகிறார் மண்!
சேரசோழ பாண்டியரில்
.........சேரநாட்டில் வாழ்வோரே
காரண காரியமாய்
..........காண்கின்றார் யாவரையும்!
நம்தமிழ் நாட்டினரோ
...........நாயகரைத் தெய்வமாக்கி
தம்தலையில் போடுகிறார் மண்!
செ.இராசா
(படம் பழையதாகவே இருக்கட்டும் கருத்து சரிதானே?!
அனுபவப் பதிவு 17-----முதல் வேலை சொந்த ஊரில்-----கட்டுரை
#மேஸ்திரி_பொறியாளரானார்
#மதகுபட்டி_நூலகத்தில்_ஆங்கில_நாளிதழ்
2001 மே மாதம், பொறியியலுக்கான கடைசித்தேர்வு முடிந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து என் TVS-சுஸுகி வாகனத்திலேயே சிவகங்கை வந்தடைந்தேன் (சுமார் 300 கிமீ தூரம்). வந்த பத்து நாட்களிலேயே சாமி என்கிற பொறியாளரிடம் என் தந்தையார் சேர்த்துவிட்டார்கள். முதல் பணியே என் சொந்த ஊரான அம்மன்பட்டியில் திரு. மனோகரன் மாமாவின் களத்தில்தான். ஆம், நெல்லடிக்க ஒரு களம் அமைக்க வேண்டும், அக்களத்திற்கு ஒரு பாலம் மற்றும் இரண்டு பெரிய கேட்(Gate) போட வேண்டும். களம் அமைப்பதற்காக நூல் கட்டி அளக்க என்னையும் மேஸ்திரியையும் பணித்தார்கள். இரண்டு பக்கமும் நூல் கட்டி மூளைமட்டம் பார்க்கும்போது , 3-4-5 என்று அளவீடு வைத்து சரிபார்க்கச் சொன்னார்கள். எனக்கு பத்தாம் வகுப்பின் போது நல்லமுத்து வாத்தியார் சொல்லித்தந்த வாய்ப்பாடுதான் ஞாபகம் வந்தது (3-4-5, 5-12-13, 7-24-25, 8-15-17, 9-40-41..) அதாவது செங்கோண முக்கோணத்தில் இரண்டு பக்க அளவுகளைக் குறித்துக்கொண்டால் மூன்றாம் பக்கம் என்னவென்று பிதோகோரஸ் தேற்றத்தில் கணக்கீடு செய்வதை சுருக்கமாக சில விடைகளை ஞாபகம் வைப்பதற்கான குறிப்பு அது.
இப்படி நாம் எங்கோ படித்ததைக் களத்தில் பயன்படுத்திய போது மிகவும் புதுமையாக இருந்தது. ஆனால் அளவீடுகள் தான் மிகவும் இடித்தது. காரணம் பொறியியல் படிக்கும் போது அளவீடுகள் எல்லாம் SI-யூனிட் அதாவது மீட்டர், சென்டிமீட்டரில் இருக்கும். களத்திலோ அடி, இன்ச் என்று இருக்கும். இப்படி படிப்புக்கும் நடப்பிற்கும் உள்ள ஓட்டைகள் ஏராளமாக இருந்தது. இப்படியே அடி இன்ச் வைத்து வரைபடம் வரையவும் களத்தில் பணியாற்றவும் என்னைப் பழக்கிக்கொண்டேன். அதேபோல் கட்டுமானப் பொருட்களின் பெயரும் பயன்படுத்தும் கருவிகளின் பெயரும் ஊருக்கு ஊர் சிறிய அளவிலான மாறுதலோடு இருக்கும். அதையும் கற்றுக்கொண்டேன்.
அம்மன் பட்டி, மதகுபட்டி, அரளிக்கோட்டை, திருப்பத்தூர், சுண்ணாம்பிருப்பு என்று பல ஊர்களில் நான் வரைந்த வரைபடத்தில் கட்டிடங்கள் உருவானது மிகவும் மனமகிழ்ச்சி தந்தது. அங்கே எங்க ஊரில் வேலை பார்க்கும்போது நிறைய புதிய அனுபவங்களும் கிடைத்தது. சம்பளம் போடும்போது கையில் கொடுக்காமல் ஒரு உறையில் போட்டுத்தான் கொடுப்பேன். அதை எங்க ஊர் அக்காக்கள் அம்மாக்கள் இன்னும் சொல்வார்கள். அங்கே வேலை பார்க்கும்போது ஏரியூரைச்சேர்ந்த தேவா என்ற ஒரு மேஸ்திரி அறிமுகம். சின்ன வயதுதான். 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் குடும்ப சூழ்நிலையால் மேஸ்திரியாக வேலை பார்த்தான். அவனை என் தந்தையாரின் மூலம் மானாமதுரை பாலி டெக்னிக்கில் என் தம்பியோடு சேர்ந்து இலவசமாகவே சீட்டு கிடைக்கும் அளவில் செய்து கொடுத்தேன். அவன் அதற்கு மேலும் படித்து பொறியாளராக பல நாடுகளில் சாதிக்கிறான் என்பதை எண்ணும்போது அதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்த அந்த இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்வேன்.
சரி மீண்டும் வேலை பற்றி பார்ப்போம். அங்கே, நான் மினி ட்ராப்ட்டர் என்ற கருவி கொண்டுதான் வரைபடம் வரைவேன். பெரும்பாலும் என் வரைபட வடிவத்தையே பொறியாளர் ஒத்துக்கொள்வார். பொறியாளர் சாமி சிங்கப்பூரில் இருந்து புதிதாகத் தொழில் தொடங்கியவர் என்பதால் புதியவனான என் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டார் என்றே நினைக்கிறேன். எவரெஸ்ட் பில்டர்ஸ் என்ற பெயரில் ஒரு அலுவலகம் போட்டார். எனக்கு 2000 ரூபாய் சம்பளம் கொடுத்தார். கட்டிடங்களில் இரும்புக்கம்பிகள் எல்லாம் அனுபவத்தை மையமாக வைத்தே போடுவார்கள், நான் கட்டுமானவியல் (Structural) என்பதால் கணக்கீடு செய்து சரிபார்ப்பேன்.எல்லாம் சரியாகவே வரும். ஆக, பொறியாளராக இருந்து நாம் இங்கே செய்வதை, யார் வேண்டுமானாலும் செய்கையில் நாம் எதற்க்காக இங்கே குப்பை கொட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதால் எப்படியாவது சென்னை கிளம்பவேண்டுமென்று வேலை தேட ஆரம்பித்தேன். ஹிந்து பத்திரிக்கை போன்ற ஆங்கில நாளிதழ்களில்தான் நல்ல வேலை வாய்ப்பு வரும் என்பதால் அதைத்தேடி 17 கிமீ தாண்டி சிவகங்கை போவேன். அதுவும் முன்பே சொல்லி வைக்க வேண்டும். இல்லையெனில் கிடைக்காது. கிடைக்காத நாள்களில் சிவகங்கையில் உள்ள தலைமை நூலத்தில் போய் பார்ப்பேன். மதகுபட்டி நூலகத்திற்கு இந்தப் பத்திரிக்கை போடுவீர்களா என்று அணுகினால், அதற்கு ஆயிரம் ரூபாய் தரும் புரவலர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றார்கள். எங்க ஊர் கண்ணன் சித்தப்பாவிடம் பேசி அவரைப் புரவலராக்கி மதகுபட்டி நூலகத்திற்கு ஆங்கில நாளிதழைக்கொண்டு வந்தேன். காரணம், யாம் பெற்ற இன்னல் யாரும் படக்கூடாது என்பதே..
எப்படியோ...சென்னையிலிருந்து வந்தது என் புதிய வேலைக்கான ஓலை...
கணம்கணம் ஒன்றி கனமின்றி வாழ்!
கணம்கணம் ஒன்றி கனமின்றி வாழ்!
சினக்குணம் இன்றி சிறப்புடன் வாழ்!
தலைக்கனம் அற்று தலைவணங்கி வாழ்!
தலைக்குணம் பெற்று தலைநிமிர்ந்து வாழ்!
வாழ்க வளமுடன்!
செ. இராசா
05/04/2021
தெளிவோடு நில்-------------வள்ளுவர் திங்கள் 154
#தெளிவோடு_நில்
#வள்ளுவர்_திங்கள்_154
கருத்துக் கணிப்பெல்லாம் கண்டுக்க வேண்டாம்
ஒருமனதாய்ப் போடுங்கள் ஓட்டு
(1)
மக்களாட்சித் தத்துவத்தை மன்னராட்சி போலாக்கும்
அக்கட்சி யாரென ஆய்
(2)
வெல்கின்ற கட்சியென வீராப்பு பேசாமல்
நல்லோர்க்கு வாக்களித்தல் நன்று
(3)
உள்ளோரில் நல்லோரை உள்ளத்தால் ஆராய்ந்து
கொள்ளையைக் கொஞ்சம் குறை
(4)
பணத்தை விதைத்து பணத்தை அறுக்க
சனத்தை வளைக்கிறார் பார்
(5)
தூண்டில் இரையாலே துன்பம்தான் தீர்ந்திடுமா
வேண்டாம் இலவச(ம்) ஊறு
(6)
கொள்ளையர்கள் கூட்டத்தில் கொள்கையாம் கோட்பாடாம்
வெள்ள(ல்ல)ம்போல் பேசுகிறார் சீ
(7)
இலவசம் தந்திட எங்கய்யா காசு?!
நிலைமையைக் கொஞ்சம் நினை
(8)
நிதியைப் பெருக்க மதுவைப் பெருக்கும்
சதியை விரலால் தடு
(9)
தெளிவோடு நிற்கின்றார் தீர்த்திட வேண்டித்
தெளிவோடு தாருங்கள் தீர்ப்பு
(10)
(வாய்ப்பில்லை இராசாஎன்று சொல்வது புரிகிறது. இருந்தாலும் சொல்லி வைப்போம்)
செ. இராசா