21/04/2021

அனுபவப் பதிவு 18---------சென்னையில புதுப்பையன்


பொறியியல் முடித்தவுடன் சொந்த ஊரில் ஆறு மாதங்கள் வேலை பார்த்த பிறகு சென்னை நோக்கிச் சென்றேன். எங்கள் ஐயா (அப்பாவின் அப்பா) VKN கண்ணப்பச் செட்டியார் அவர்களிடம் கணக்கப் பிள்ளையாக 48 வருடங்கள் மலேசியா, பர்மா என்று வேலை பார்த்துள்ளார்கள். என் தந்தையாரும் அவர் மகன் கண்ணப்பச் செட்டியாரிடம் (இருவருக்கும் ஒரே பெயர்தான்) மதுரையில் உள்ள பெட்ரோல் வங்கிகளில் மேலாளராக ஒரு 7 வருடங்கள் வேலை பார்த்துள்ளார்கள். இப்போதுவரை அவர்கள் வீட்டில் எந்த விடேடமாக இருந்தாலும் கணக்குப் பிள்ளையாக அப்பாவைத்தான் அழைப்பார்கள். அவர்கள் குடும்பத்தில் முதன் முதலாக வந்த பொறியாளர் என்பதால் நான் நன்றாக வரவேண்டும் என்ற அக்கரையில் கண்ணப்பச் செட்டியார் அவர்கள் அவரின் ரோட்டரி சங்க நண்பரான CR ராஜூ என்ற புகழ்பெற்ற ஆர்க்கிடெக்கிடம் சேர்த்துவிட்டார்கள். அவரிடம் வேலைசெய்வது என்பது இயக்குனர் சங்கர், மணிரத்னம், பாலா போன்றவர்களிடம் வேலை பார்ப்பதுபோல். நம்மை கட்டிடவியல் துறையில் செதுக்கி விடுவார்கள். அவரை நான் முதன்முதலில் சந்தித்த தருணம் மிகவும் பயமாகவே இருந்தது. சம்பளம் எவ்வளவு வேண்டும் என்றார். எனக்கு எவ்வளவு கேட்க வேண்டுமென்றுகூட தெரியவில்லை. அவசரத்தில் 2500/- தாருங்கள் என்றேன். சரி என்று கூறிவிட்டு வேலைபார்க்கும் களத்திற்குச் செல்லத் தயாராகச் சொன்னார். வெளியே வந்து அங்குள்ளவர்களிடம் நடந்ததைக் கூறியபோது, சென்னையில் அந்தப்பணம் பத்தாதே....ஒரு 3000/- மாவது கேட்டிருக்கலாமே என்றனர். தவறிழைத்து விட்டோமோ என்ற எண்ணத்துடன் குழப்பத்தில் இருந்தபோது அழைப்பு வந்தது.

சூளைமேட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து போரூர் மதனந்தபுரத்தில் உள்ள சுவாமி பள்ளிக்கு (Swamy School) அழைத்துச்சென்றார். மிகவும் பயபக்தியுடன்
அவருடை மகிழுந்தில் பயணித்தபோது அங்கேதான் எனக்கான நேர்முகத் தேர்வு நடந்தது என்றே சொல்லலாம். அவர் வாகனத்தில் இருந்த பிள்ளையாரைப் பார்த்த போது எங்கள் கண்ணன் சித்தப்பாவின் வாகனத்தில் இருந்த அதே பிள்ளையார்தான் ஞாபகம் வந்தது. நான் அந்தப் பிள்ளையார் காதில் செல்லமாக கிள்ளிப்பையன் என்று கூறி கிள்ளி அவ்வப்போது விளையாடுவேன். அந்த ஞாபகம் வந்துபோனது ஒரு சிரிப்பையும் தைரியத்தையும் உள்ளூர தந்தது. அப்போது அவரிடம் என் சம்பளத்தை கூட்ட முடியுமா என்றுதான் கேட்டேன். ஆத்தாடி ஆத்தா..... அப்போது அவருக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே.... ஏன்டா....இப்பதான் வேலைக்கே சேர்ந்த...இன்னும் ஒருநாள் கூட
வேலை பார்க்கலை. அதுக்குள்ள சம்பளத்தை கூட்டனும்னு வந்துட்ட. முதல்ல இது சம்பளம் இல்லை. நீ வேலை கத்துக்கொள்ள நான் தரும் உதவித்தொகை (Stipend) அவ்வளவே.... அப்படி அவர் திட்டினாலும் எனக்கு சில மாதங்களிலேயே 3000 ரூ கொடுத்தார்.

எனக்கான முதல் வேலை என்னவென்றால், ஒரு நான்கு மாடிக் கட்டிடம், அதைப் பக்கத்தில் ஏற்கனவே உள்ள கட்டிடம்போல் புதுப்பிக்க வேண்டும் (அதுவும் அவர் கட்டியதே). மிகவும் அற்புதமான சவாலான வேலையது. கட்டிடத்தின் வெளியே இடையிடையே துளை போட்டு பீமைச்சொருகி வளைவான ஆர்ச்சை நிறுத்தி வடிவமைக்க வேண்டும். ஆர்க்கிடெக்ட் என்ற படிப்பு நான் படித்த கட்டிடவியல் மற்றும் கட்டுமானவியலில் இருந்து சற்றே வேறுபட்டது. இது சினிமாவில் உள்ள கலை இயக்குனர் (Art Director) போன்ற படிப்பு. இதற்குத் தனியாக விண்ணப்பம் போட வேண்டும் என்ற அறிவுகூட எனக்கில்லை. என்ன செய்ய?!.
ஐந்து வருடப்படிப்பு அது. நல்ல ஆர்க்கிடெக்ட் என்பவர் தன் தேடலையும் தன் அறிவையும் பெருக்கிக்கொண்டே இருப்பார். நம் CR ராஜூ அவர்களும் அப்படியே. தன் அறிவைப் பெருக்க காரைக்குடி செட்டிநாடு வீடுகளுக்குப்போய் அங்குள்ள வடிவமைப்பை ஆராய்ந்து வருவார்களாம்....😊😊😊இது எப்படி இருக்கு? நாம அங்கிருந்து வர்ரோம். இவுங்க அங்க போறாங்க. ஆனாலும் ஆர்க்கிடெக்டின் வியாபாரமே தனி. அவர்கள் தனக்கென்று ஒரு பாணி கொள்கை எல்லாம் வைத்திருப்பார்கள்.
இவர்களின் Clients இவர்களை முழுமையாக
நம்புவார்கள். இவர்கள் படம் வடிவமைத்து அதில் Item Rate முறையில் Quantity எடுத்துத் திறந்த முறையில் ஒப்பந்தக்காரர்களை அழைத்து தேர்வுசெய்து வேலை நடக்க நடக்க எவ்வளவு பணம் தரவேண்டும் என்று Client க்கு சிபாரிசு செய்து தனக்கான பணத்தையும் விகிதாசார (%) முறையில் எடுத்துக் கொள்வார்கள். உண்மையில் இந்த முறையில் செல்வதால்தான் அவர்கள் எப்போதும் தன் துறையில் கலை நோக்கிலேயே பயணிக்க முடிகிறது. அதே சமயத்தில் பணமும் வருகிறது.

போரூர், பூந்தமல்லி, கொட்டிவாக்கம், நுங்கம்பாக்கம்,...........என பல இடங்களில் அப்போது வேலை நடந்தது. நான் ஒரு பத்து மாதங்கள் செந்தாமஸ் மவுண்டில் இருந்தும் பிறகு பழவந்தாங்கலில் இருந்தும் சென்னையைச் சுற்றிச்சுற்றி வலம் வந்தேன். இந்தச் சென்னை கற்றுக்கொடுத்த பாடம்தான் என்னை முழு மனிதனாக்கியது என்றே சொல்லலாம்.

சொல்கிறேன்....

No comments: